கல்வி சமூகத்தின் பிரச்சினைகளை நன்கறிந்த ஒருவர்
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சராகக் கிடைத்துள்ளமை
வரப்பிரசாதமாகும்

இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின்  கிழக்கு மாகாண சங்கம் பாராட்டு

கிழக்கு மாகாண சபையின் புதிய கல்வி அமைச்சராக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சி.தண்டாயுதபானி நியமனம் செய்யப்பட்டமை குறித்து இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின்  கிழக்கு மாகாண சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மேற்படி சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.எல்.முஹம்மட் முக்தார் புதிய மாகாண கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,
வடக்கு - கிழக்கு இணைந்த மாகாண சபையின் கல்வி அமைச்சராக அ.வரதராஜப்பெருமாள் கடமையாற்றியதன் பின்னர் சுமார் 25 வருடங்களுக்குப் பின் தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்த ஒருவர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டமையானது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சராக கடமையாற்றுவதற்கு சகல தகைமைகளையும் கொண்ட ஒரு கல்விமானாக சி.தண்டாயுதபானி திகழ்கின்றார். ஒரு ஆசியராக, ஒரு அதிபராக, கல்வி அதிகாரியாக, வலயக் கல்விப்பணிப்பாளராக, மாகாணக் கல்விப்பணிப்பாளராக, பிரதிச் செயலாளராகப் பதவிகளை வகித்து ஒரு கல்வி தொழிற் சங்கத்தின் தலைவராக இருந்து ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள், மாணவர்களின் பிரச்சினைகளை நன்கறிந்த ஒருவர் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சராக கிடைத்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாண கல்வித்துறை முன்னைய ஆளுநரால் திட்டமிட்டு குறிப்பாக தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் கல்வி சீரழிக்கப்பட்டு திறமையான கல்வி நிருவாகிகள் பழிவாங்கப்பட்டனர். பொருத்தமற்றவர்களுக்கு அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் கடந்த காலங்களில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. இவை யாவும் தங்களின் பதவி காலத்தினுள் சீராக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி,நியாயம் கிடைக்க வழி செய்வீர்கள் என நம்புவாதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top