கடந்த ஆட்சி
காலத்தில் பழி வாங்கப்பட்ட
நீதியரசர்
ஏ.டபிள்யூ. ஸலாம் மீளவும் நீதித்துறைக்குள்
உள்வாங்கப்படல் வேண்டும்
- நீதிக்கும் சமத்துவத்துக்குமான கிழக்கு மாகாண மன்றம் கோரிக்கை
கடந்த
ஆட்சி காலத்தில் மிக மோசமான முறையில் பழி வாங்கப்பட்ட நீதித்துறை சிரேஷ்ட உத்தியோகத்தரான
முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ஏ.டபிள்யூ. ஸலாம் மீளவும் நீதித்துறைக்குள்
உள்வாங்கப்படல் வேண்டும் என நீதிக்கும் சமத்துவத்துக்குமான கிழக்கு மாகாண மன்றம் கோரிக்கை
விடுத்துள்ளது.
இது
தொடர்பாக மேற்படி மன்றம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின்
தலைவர்கள், தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
முன்னாள்
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டமையானது செல்லுபடியாகாது
என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
தீர்ப்பை மேன்முறையீட்டு மன்ற அப்போதய நீதியரசர்களான எஸ். ஸ்ரீகந்தராஜா, ஏ.டபிள்யூ.ஸலாம்,
அனில்குணரட்ண ஆகியோர் கூட்டாக வழங்கியிருந்தனர்.
இவர்களின்
இந்த தீர்ப்பை ஏறெடுத்தும் பார்க்காத மஹிந்த அரசு திட்டமிட்ட வகையில் சிராணி பண்டாரநாயக்காவை
பதவி நீக்கியதுடன் தீர்ப்பு வழங்கிய நீதியரசர்களை பல்வேறு வகையான தொல்லைகளுக்கு உள்ளாக்கியதுடன்
அவர்களை மன உழைச்சளுக்குள்ளாக்கியது. இதன் காரணமாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான
நீதியரசர் எஸ். ஸ்ரீகந்தராஜா மாரடைப்பால் மரணமானார்.
இதையடுத்து
சிரேஷ்ட நீதியரசர் என்ற வகையில் நீதியரசர் ஏ.டபிள்யூ. ஸலாம் மேன்முறையீடு நீதிமன்றத்
தலைவராக நியமிக்கப்பட அவருடன் இணைந்து நீதியரசர் அனில்குணரட்ண கடமையாற்றினார். எனினும்
மஹிந்த அரசு மேற்குறிப்பிட்ட இரு நீதியரசர்களையும் தொடர்ந்தும் தொல்லைகளுக்கு உட்படுத்தி
வந்தது. இவர்களை விட கனிஷ்ட தரத்தில் உள்ள நீதியரசர்களை உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமித்து இவர்களைப்
பழி வாங்கியது.
இந்த
நிலையில் நீதியரசர் ஏ.டபிள்யூ. ஸலாம் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்த்தப்படாத
சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பதவியில் இருந்து விலகிக்
கொள்ள நீதியரசர் அனில்குணரட்ண தனித்து விடப்பட்டார்.
தற்போது
நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டதன் காரணமாக நீதித்துறை சுதந்திரம் பாதுகாக்கப்பட்ட நிலையில்
நீதியரசர் அனில்குணரட்ண உயர்நீதிமன்ற நீதியரசராக
பதவி உயர்த்தப்பட்டார். ஆயினும் நீதியரசர் ஏ.டபிள்யூ. ஸலாம் பாதிக்கப்பட்டதை எந்தவொரு
அரசியல்வாதியும் கண்டுகொள்ளவுமில்லை, அவருக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை பெற்றுக்
கொடுக்கவும் முன் வரவில்லை.
இதன்
விளைவு இன்றைய உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமில் எந்தவொரு முஸ்லிமும் நீதியரசராக இல்லை.
இலங்கை குடியரசாக மாற்றப்பட்டதன் பின் இலங்கையின் நீதித்துறையில் ஏற்பட்ட பாரிய பாதிப்பாகவும்
இழப்பாகவும் இது உள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமில் இலங்கையில் வாழும் மூவினங்களையும்
பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் இருந்து வந்துள்ளமை நீதியரசர் சலீம் மெளசூப் ஓய்வு
பெற்ற பின் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
நீதியரசர்
ஏ.டபிள்யூ. ஸலாம் மஹிந்த அரசினால் பழிவாங்கப்படாமல் நீதியின் அடிப்படையில் உயர்நீதிமன்ற
நீதியரசர் குழாமில் உள்வாங்கப்பட்டிருப்பின் முஸ்லிம் நீதியரசருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருக்காது.
மஹிந்த
அரசில் திட்டமிட்டு பழிவாங்கப்பட்ட நீதித்துறை உத்தியோகத்தரான சிராணி பண்டாரநாயக்காவுக்கு
ஆதரவாக நீதி வழங்கிய அரசியல் தலைவர்கள் சிராணி பண்டாரநாயக்காவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு
வழங்கிய நீதியரசர் ஏ.டபிள்யூ. ஸலாம் விடயத்தில் எந்தவொரு முயற்சியையும் எடுக்காமல்
விட்டிருப்பது பாரிய அநீதி என்பதுடன் முஸ்லிம் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியுமாகும்.
நீதியரசர்
ஏ.டபிள்யூ. ஸலாம் அவர்களின் தீர்ப்புக்கள் பல வரலாற்று முக்கியத்துவம் மிக்கவை என்பதுடன்
நீதிமன்ற வழக்குகளில் எடுத்துக்காட்டாக முன்வைக்கப்பட்டு வாதாடப்பட்டு தீர்ப்புக்களை
வழங்குவதற்கான ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன. இவ்வாறான ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான
நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அக்கறையில்லாது இருப்பதையும்
நீதித்துறையில் இருப்பவர்கள் அவரை ஏறெடுத்தும் பார்க்காது இருப்பது குறித்து நீதிக்கும்
சமத்துவத்துக்குமான முன்னணி வேதனை தெரிவித்துள்ளது.
எனவே
முன்னைய மஹிந்த அரசினால் பாதிக்கப்பட்ட நீதியரசர் ஏ.டபிள்யூ. ஸலாம் அவர்களை மீளவும்
நீதித்துறைக்குள் உள்வாங்கி உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
என கோரிக்கை விடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment