அப்துல் கலாம் திடீர் மறைவு

அன்னாரின் வாழ்க்கைப் பயணம்...




இந்தியக் குடியரசு முன்னாள் தலைவரும், உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்த அணு விஞ்ஞானியுமான டாக்டர் ..ஜெ. அப்துல் கலாம் (வயது83) திங்கள்கிழமை காலமானார்.
மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (..எம்.) திங்கள்கிழமை மாலை சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அப்துல் கலாம், அங்குள்ள பெத்தானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவாலும், வயோதிகப் பிரச்னைகளாலும் அப்துல் கலாம் பாதிக்கப்பட்டிருந்தார். இருந்தபோதிலும், கல்லூரி மாணவர்களிடையேயான பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும், கருத்தரங்குகளிலும் தொடர்ந்து அவர் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில், மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் திங்கள்கிழமை அவர் கலந்து கொண்டார். அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள பெத்தானி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அப்துல் கலாமை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
""அவரது உடலை இன்று செவ்வாய்க்கிழமை காலையில் அண்டை மாநிலமான அஸ்ஸாமின் குவாஹாட்டியில் இருந்து டில்லிக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கலாம், தனது வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு போராட்டங்களையும், தடைகளையும் தாண்டி இந்தியாவின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்து, அந்தப் பதவியையே அலங்கரித்தவர்.
கலாம் சிறுவனாக இருந்தபோது அவரது குடும்பத்தினர் பத்திரிகை ஒன்றின் முகவராக செயல்பட்டனர். அப்போது, ராமேசுவரத்தில் குறித்த  நாளிதழை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கும் பணியை கலாம் மேற்கொண்டார்.
 நாட்டின் பல்வேறு ஏவுகணைத் திட்டங்களுக்கு அவர் ஆற்றிய பங்கினைப் பாராட்டி இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கலாமுக்கு 1997-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக, 1981-ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூஷண் விருதும், 1990-ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் அவருக்கு கிடைத்தது.
அப்துல் கலாம் எழுதிய "அக்னிச் சிறகுகள், "இந்தியா 2020', "எழுச்சி தீபங்கள்' ஆகிய புத்தகங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவையாகும்"உறக்கத்தில் வருவது அல்ல கனவு; உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு' என்ற தாரக மந்திரத்தை இந்திய இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்தவர் கலாம்தனது வாழ்நாள் முழுவதும் இளைஞர்களின் உந்து சக்தியாக வாழ்ந்த அப்துல் கலாம், மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போதே தனது இன்னுயிரை நீத்துள்ளார். அவரது மறைவு இந்தியர்கள் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் அனைத்து இந்தியர்களையும் தனது உடன் பிறந்தவர்களாக போற்றி வாழ்ந்தார் அப்துல் கலாம். குடியரசுத் தலைவராக இருந்தபோது தன்னைச் சந்திக்க வரும் குடும்ப உறவினர்கள் அதிக நாட்கள் தனது மாளிகையில் தங்கியிருக்காமல் ஊர் திரும்ப வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தார். தனது பதவியை பயன்படுத்தி உறவினர்கள் தவறு செய்துவிடக் கூடாது என்பதில் அந்த அளவுக்கு கடைசி வரை உறுதியுடன் இருந்தார்.
 பதவிக்காலம் முடிந்த பிறகு டில்லியில் அரசு பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்ட போது, அங்கு தமது உதவியாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு இறுதி நாட்களைக் கழித்தார். அப்போதும் உறவினர்களோ, நண்பர்களோ அங்கு வந்து உரிமை கொண்டாடுவதை அவர் விரும்பியதில்லை.
 1931, அக்டோபர் 15: தமிழகத்தின் ராமேசுவரத்தில், ஜெயினுலாப்தீன்- ஆஷியம்மா தம்பதியின் மகனாக அப்துல் கலாம் பிறந்தார்.
 1954: திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றார்.
 1960: சென்னை எம்ஐடி-யில் விமானப் பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்றார். அதே ஆண்டில் டிஆர்டிஓ விஞ்ஞானியானார்.
 1969: இஸ்ரோ நிறுவனத்துக்கு மாற்றப்பட்டார்.
 1980: கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ரோகிணி செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியதன்மூலம், விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.
 1981: பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
 1980-1990: ஒருங்கிணைந்த ஏவுகணை அபிவிருத்தித் திட்டம், கலாம் தலைமையில் வளர்ச்சி பெற்றது. அக்னி, பிருத்வி ஏவுகனைகள் உருவாக்கப்பட்டன.
 1990: பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.
 1992-1999: டிஆர்டிஓ அமைப்பின் செயலாளராக, பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக கலாம் பணியாற்றினார்.
 1997 நவம்பர் 26: பாரத ரத்னா விருது கலாமுக்கு வழங்கப்பட்டது.
 1998 மே 13: ராஜஸ்தானின் பொக்ரானில் அணுகுண்டு சோதனை கலாம் தலைமையில் நடைபெற்றது.
 1999-2001: பிரதமர் வாஜ்பாயின் முதன்மை அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றினார்.
 2002, ஜூலை 25: 11-ஆவது குடியரசுத் தலைவரானார்.
 2007 ஜூலை 25: குடியரசுத் தலைவர் பதவிக்காலம் நிறைவு.
 2007-2015: நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இளைஞர்கள், மாணவர்களிடையே கல்வி, விழிப்புணர்வுப் பணி.
 2015 ஜூலை 27: மேகாலயத்தின் ஷில்லாங்கில் காலமானார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top