ஹிந்தவுக்கு  நான் ஆதரவளிக்கப் போவதுமில்லை

அவர்,தேர்தலில் வெல்லப் போவதுமில்லை

              - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவுக்கு தான் ஆதரவளிக்கமாட்டார் என்று ஜனாதிபதியும் அந்த முன்னணியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.    அத்துடன் தான் நடுநிலைமையாகச் செயற்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும், பிரதமர் பதவி என்று வரும் போது மஹிந்த ராஜபக்சவைவிட மூத்தவர்கள் பல முன்னணியில் இருக்கிறார்கள் என்றும் அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.   
எனினும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ச வெற்றிபெற மாட்டார் எனவும் அவர் தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பார் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.   தான் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர் இல்லையென்றும், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டுவந்த அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நடைபெறும் தேர்தல்முறை காரணமாகவே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  
நாட்டின் ஜனாதிபதியாக தான் பதவியேற்ற பிறகு தொடர்ச்சியாக பல அவமானங்களை சந்தித்து வருகிறார் எனவும் முன்னர் இருந்த ஜனாதிபதிகள் யாருக்கும் அப்படியொரு நிலை ஏற்படவில்லை
துரோகி என்று என்னை விமர்சனம் செய்யும் அளவுக்கு தற்போது நாட்டில் ஜனநாயகம் உள்ளது.மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கியதற்கு நானும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறேன்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்றதுபோல, மஹிந்த பொதுத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவுவார். இது மஹிந்தவின் தவறல்ல. ஜே.ஆர். காட்டித் தந்த முறைமையின் வடிவம் இப்படித்தான் இருக்கும்.
எனது 44 வருட அரசியல் வாழ்க்கையே என்னை பொது அபேட்சகராக நிறுத்தியதற்கு காரணமாகும்.கட்சி தலைவராக இருந்ததற்கும் சிலர் என்னை குறை சொன்னார்கள். ஆனால், நான் அந்தப் பதவியில் இருந்ததனால்தான் அரசின் முக்கிய வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்தது.
நான் நட்சத்திரம் பார்த்து எதிர்காலத்தைக் கணிப்பிடுவதில்லை. ஆனால், வரலாறு பார்த்து எதிர்காலம் பற்றி கணித்துச் சொல்ல முடியும்.சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிளக்கும் எண்ணமும் எனக்கில்லை.கட்சியில் இருந்து கேட்டு விலகுவதற்கான தேவையும் எனக்கில்லை. அப்படி நான் கேட்டு விலகியிருந்தால் மஹிந்தவுக்கு தேவையான விதத்தில் வேட்புமனுவில் ஆட்களை உள்வாங்கியிருப்பார்.
கட்சி எப்படிப் போனாலும், ஜனவரி 8ஆம் திகதி நான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் பாராளுமன்றொன்றே எனது தேவை.பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவந்து, சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக மஹிந்தவை பாராளுமன்றம் கொண்டு வருவதற்கும் அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள்.நான் அவர்களது சகல முயற்சிகளையும் முறியடித்தேன்.
மஹிந்தவுடன் எனக்கு எதுவித கொடுக்கல் வாங்கல்களுமில்லை. அவருக்கு எனது எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நாட்டின் பிரதமராக பிறிதொருவர் வருவதை மஹிந்த தடுக்க முயல்கிறார்.மஹிந்த அணி வெற்றிபெற்றாலும், பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு அக்கட்சியில் வேறு சிரேஷ்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
சவால்களுக்கு மத்தியில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஜனநாயகத்தை நான் ஒருபோதும் தவறாக பயன்படுத்த மாட்டேன்.பொதுத் தேர்தலை நீதியும் சுதந்திரமுமாக நடத்துவதற்கு நான் ஒத்துழைப்பேன்.மஹிந்தவுக்கு கூட்டமைப்பில் வேட்புமனு கொடுக்கப்படாதிருந்திருந்தாலும், அவர் பிறிதோர் கட்சியில் போட்டியிட்டிருப்பார்.

மத்திய வங்கியின் ஆளுநரைப் பதவி விலக்கினால் சிறப்பாக இருக்கும் என நான் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியிருக்கிறேன்.எவரும் என்னை விமர்சனம் செய்யலாம். விமர்சனங்களை வரவேற்கிறேன். பொதுமக்களாகிய நீங்கள் பெற்றுத் தந்த ஜனநாயகம் இது. இதனை சீர்குலைக்க முயல வேண்டாம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்..

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top