புர்கான் முஷாபர் வானியின் இறுதி ஊர்வலத்தில்
2 லட்சம் பேர் ; அரசு அதிர்ச்சி
காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி வானியின் இறுதிச்சடங்கில் காஷ்மீர் முழுவதும் இருந்து 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக காஷ்மீர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த அளவுக்கு பயங்கரவாத செயலுக்கு காஷ்மீரில் ஆதரவு பெருகி இருப்பது மத்திய மாநில அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் கமாண்டராக இருந்து வந்தவர்தான் புர்கான் முஷாபர் வாணி ( வயது 22 ) . தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியை சேர்ந்த இவருக்கு பல மாவட்டங்களிலும் ஆதரவு இருந்துள்ளது.
தலைமையாசிரியரின் மகனான இவருக்கு கடந்த 5 ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் செல்வாக்கு வளர்ந்துள்ளது. இணையதளம் மூலம் தீவிரவாத வீடியோ வெளியிடுவது, தீவிரவாத அமைப்பில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு விடுப்பது இவரது முக்கிய பணியாக இருந்து வந்துள்ளது.
பாதுகாப்பு படையினரால் இவர் கொல்லப்பட்ட தகவல் வெள்ளிக்கிழமை மாலை முதல் பரவ தொடங்கியது. இதனை கேட்டஇவரது ஆதரவாளர்கள் பலரும் டிரால் பகுதியை நோக்கி படையெடுத்தனர். இவரது இறுதி ஊர்வலத்தில் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என பல தரப்பினரும் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத அமைப்பை வெட்ட வெளிச்சமாக ஆதரிப்பவர்களும் இந்த பேரணியில் பங்கேற்றனர். பலர் மசூதிகளில் தங்கி இருந்தனர். இரவு நேரங்களில் பாகிஸ்தான் கொடியுடன் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பியபடி ஊரை பலரும் வலம் வந்துள்ளனர்.
இறுதிச்சடங்கு நடந்த போது பெண்கள் பலரும் மார்பில் தட்டி கதறி அழுதனர். மேலும் புர்கான் எங்களின் கதாநாயகன் என்றும் கோஷமிட்டனர் . ஆங்காங்கே தொழுகைகளும் நடந்தன. இறுதிச்சடங்கில் வெடித்த வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் பலி எண்ணிக்கை 18 ஐ தொட்டது. 200 பேர் காயமுற்றனர். ஜம்முகாஷ்மீரில் இன்னும் பதட்டம் தொடர்கிறது.


0 comments:
Post a Comment