ஹிட்லரின் சித்ரவதை முகாமில் இருந்து தப்பி,

எழுத்தாளராகி, நோபல் பரிசு பெற்ற எலி வீசல் மரணம்

சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் நாஜி சித்ரவதை முகாமில் இருந்து உயிர்தப்பி, பின்னர் எழுத்தாளராக மாறி சித்ரவதை முகாமில் நிகழ்ந்த கொடூரங்களை உலகுக்கு தோலுரித்து காட்டியதற்காக நோபல் பரிசு பெற்ற எலி வீசல் மரணம் அடைந்தார்.
ஆட்சியின் மூலம் கிடைக்கும் அதிகாரத்தை வைத்து ஆளுங்கட்சிக்கு வேண்டாதவர்களையும், வேறுபட்ட இன மக்களையும் அழித்தொழிக்கும் முறையை ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர் கடந்த 1933-ம் ஆண்டு தொடக்கி வைத்தார்.
முதலாவதாக "நாஜி' கட்சியைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் சட்டவிரோதமான கட்சிகளாக சேர்க்கப்பட்டன, அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர், யூத இனத்தவர்கள் கைது செய்யப்பட்டு "கான்சென்ட்ரேஷன் காம்ப்' (திருத்தியமைக்கும் முகாம்) என்ற இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடைப்பிடித்த அரசியல் கொள்கையை ஒருவன் மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால், பிறந்த இனத்தை ஒருவனால் எப்படி திருத்திக்கொள்ள முடியும்? அப்படிப்பட்டவர்களை மனித இனத்திலிருந்தே - மனித வாழ்விலிருந்தே மாற்றிப் பிணமாக்கும் திட்டங்களில் ஹிட்லர் ஆட்சி ஈடுபட்டது. அதற்காகச் சித்ரவதை சிறைக்கூடங்கள் பயன்பட்டது.
இவ்வகையிலான முதலாவது சித்ரவதைச் சிறைக்கூடம் 1933-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜெர்மனியில் உள்ள டச்சோவ் என்ற ஊரில் கட்டப்பட்டது. 1933 முதல் 1945-இல் ஹிட்லரின் ஆட்சி தோற்கடிக்கப்படும்வரை அந்த ஒரு முகாமில் மட்டும் அடைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 35 லட்சம்.
அவர்களை நிறுத்திவைத்தும், ஓடவைத்தும் குறி பார்த்து சுட நாஜிப் படைவீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சிக் களமாக அதைப் பயன்படுத்தினார்களாம். போர் முடியும் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்களை வெளியேற்றி அவர்கள் சென்ற இடம் தெரியாமல் ஆக்கப்பட்டனர்.
1939-க்குப் பிறகு ஹிட்லரின் படைபலம் ஐரோப்பியக் கண்டத்தின் பல நாடுகளை அடிமைப்படுத்தியபோது, அந்த நாடுகளில் எல்லாம் சுமார் 1,200 சித்ரவதை சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன.
இரண்டாவது உலகப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6 கோடி இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. குண்டு வீச்சுகளில் சிக்கியும் - பஞ்சம், பட்டினி, நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டும் - இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை மட்டும் 4 கோடிக்குமேல் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், ஹிட்லரின் சித்ரவதைச் சிறைக்கூடத்தில் கைதியாக அடைத்து வைக்கப்பட்டு, பின்னர் அமெரிக்க படையினரால் காப்பற்றப்பட்டவர்களில் ஒருவர் எலி வீசல்.
1944-ம் ஆண்டு ஹங்கேரி நாட்டை ஹிடலர் தலைமையிலான ஜெர்மனி படைகள் கைப்பற்றின. ஹங்கேரியில் உள்ள சிகோட்டு பகுதியிலும் ஹிட்லரின் சித்ரவதை முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்த முகாமில் தனது தந்தையுடன் கைதியாக சிறைபுகுந்த 15 வயது சிறுவனான எலி வீசல், அந்த முகாமில் தனது தந்தை சுட்டுக் கொல்லப்பட்டபோது அவரை காப்பாற்ற முடியாமல்போன தனது இயலாமையை பின்னாளில் அமெரிக்காவில் குடியேறிய பின்னர் புத்தகமாக எழுதி இருந்தார்.

ஹிட்லர் ஆட்சி காலத்தில் மக்கள் அனுபவித்த கொடுமைகளை வெகு எளிமையாக சித்தரித்தநைட்என்ற இந்த புத்தகத்தை தவிர மேலும் 56 புத்தக்கங்களையும் எழுதிய இவர் அமைதிக்கான நோபல் பரிசை கடந்த 1986-ம் ஆண்டு பெற்றார்.

இதுதவிர பல்வேறு உயர் விருதுகளையும் பெற்றுள்ள எலி வீசல், பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பின்னர், சில பத்திரிகைகளில் கெளரவ ஆசிரியராக பொறுப்பு வகித்த எலி வீசல், தனது 87-வது வயதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார்.













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top