துருக்கியில் சிரேஷ்ட தளபதிகள், நீதிபதிகள் கைது

துருக்கியில் ராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த சிரேஷ்ட தளபதிகள் ட்பட  நாடு முழுவதும் 6,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளாதாக அறிவிக்கப்படுகின்றது.
தேசத் துரோகிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு சிறையில் அடைக்கப்படும் வரை கைது நடவடிக்கை தொடரும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ள.
இந்நிலையில், ராணுவத்தின் இரு முக்கியப் பிரிவுகளின் தலைமைத் தளபதிகள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. மேலும், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சிரேஷ்ட ராணுவ அதிகாரிகள் 34 பேர் கைதாகியுள்ளனர்.
துருக்கி விமானப் படையின் இங்கிர்லிக் போர் விமான தளத் தலைமைத் தளபதி கைது செய்யப்பட்டார். அந்த விமான தளத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகளும் கைதாகியுள்ளனர். இவர்களைத் தவிர, தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் நாடு முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட நீதிபதிகள், சிரேஷ்ட வழக்குரைஞர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர் என்று சட்டத் துறை அமைச்சர் பக்கீர் போஸ்டாக் கூறியுள்ளார். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக, சனிக்கிழமை அதிகாலையில் புரட்சி முறியடிக்கப்பட்ட உடனேயே சுமார் 3,000 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
துருக்கி ராணுவத்தில் ஒரு பிரிவினர் வெள்ளிக்கிழமை இரவு புரட்சியில் ஈடுபட்டனர். தலைநகர் அங்காரா, இஸ்தான்புல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் ராணுவ பீரங்கிகள் வலம் வந்தன.

சில போர் விமானங்கள் ஜனாதிபதி மாளிகை அருகே குண்டு வீச்சு நிகழ்த்தின. இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஜனாதிபதி எர்டோகன் விடுத்த அழைப்பை ஏற்று, ஏராளமான பொதுமக்கள் வீதிகளில் திரண்டு பீரங்கிகளை மறித்தனர்.
இதனிடையே, விமானப் படையைச் சேர்ந்த விமானங்கள், புரட்சியில் ஈடுபட்ட வீரர்களை நோக்கி குண்டு வீச்சு நடத்தின. குண்டு வீச்சு மற்றும் மோதல்களில் பொதுமக்கள், ஜனாதிபதி ஆதரவு வீரர்கள் ட்பட 161 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரசு ஆதரவுப் படையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.
புரட்சியின் பின்னணியில்...
இந்தப் புரட்சி முயற்சியின் பின்னணியில் ஃபெதுல்லா குலன் என்னும் மதத் தலைவர் இருப்பதாக ஜனாதிபதி எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்லாம் மதக் கல்வியுடன், ஜனநாயகம், அறிவியல், பிற இறை நம்பிக்கைகளைச் சார்ந்தவர்களின் கருத்துகளுக்கு இடமளித்தல் போன்ற அம்சங்களை அடக்கிய போதனைகளை அவர் பரப்பி வருகிறார்.
துருக்கியில் ராணுவத்தினர், அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடையே அவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர்.
துருக்கியிலிருந்து 1999-ஆம் ஆண்டு வெளியேறிய அவர், அமெரிக்காவில் வசித்து வருகிறார். தற்போது முறியடிக்கப்பட்ட புரட்சியைத் தொடர்ந்து, ஃபெதுல்லா குலனை துருக்கிக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அமெரிக்காவை எர்டோகன் வலியுறுத்தியுள்ளார். அவரை துருக்கி அனுப்பத் தயார் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டை துருக்கி உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.  
புரட்சி முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆட்சியாளர்களுக்கு எதிராக சிந்திக்கும் அனைவரையும் சிறையில் அடைக்கும் அடக்குமுறை நடவடிக்கைகளை துருக்கி அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புரட்சியை அரங்கேற்றியது அமெரிக்காதான் என்று துருக்கி தொழிலாளர் துறை அமைச்சர் சுலைமான் சோய்லூ அரசு தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




துருக்கியில் ராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்ட பிறகு தலைநகர் அங்காராவில் கைவிடப்பட்ட பீரங்கி முன்பாக சனிக்கிழமை தனது மகனுடன் கைப்படம் எடுத்துக் கொண்ட பெண்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top