அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்
அமைச்சர் றிசாத் பதியுதீன்
அவர்களின்
ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தி
முஸ்லிம்கள் அனைத்துப் பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டிய காலகட்டம் இது. நமது சமூகம் ஐக்கியப்படுவதன் மூலமே நமக்கெதிரான சூழ்ச்சிகளையும் சதிகளையும் முறியடிக்க முடியுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள், தனது ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் வலியுறுத்தும் ஓர் உன்னத மார்க்கம். முஸ்லிம்களாகிய நாம் சகோதரத்துவத்துடன் வாழ்வது மட்டுமன்றி ஏனைய இனங்களுடன் ஒற்றுமையைப் பேணி இன நல்லுறவை வளர்த்து வாழப்பழகிக் கொள்ள வேண்டும். எடுத்ததற்கெல்லாம் ஒருவரோடொருவர் முரண்பட்டு வேற்றுமை உணர்வுகளை வளர்த்து வாழ்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். வேற்றுமை உணர்வுகள் வேரொடு களையப்பட்டால் அமைதியும் சமாதானமும் இயல்பாகவே மலர்ந்து விடும். அதன் மூலமே சமத்துவத்தையும் ஏற்படுத்த முடியும்.
நல்லமல்களையும் பண்பாட்டுப் பயிற்சியையும் நமக்களித்த ரமழான் நேற்றுடன் நம்மிடமிருந்து பிரியாவிடை பெற்றுவிட்டது. இன்று நாம் பூரிப்புடன் பெருநாளைக் கொண்டாடுகின்றோம். புனித ரமழான் மாதம் இறைவன் நமக்களித்த அருட்கொடைகளில் ஒன்று. ஆண்டாண்டு தோறும் நமது விருந்தாளியாக வந்து செல்லும் ரமழான் தந்த நன்மைகள் ஏராளம். மனிதன் மனிதனாக வாழ வேண்டும். புனிதனாகவும் வாழ வேண்டும் என்பதே அல்லாஹ்வின் விருப்பம். எனவேதான் புனித ரமழானில் இறைவன் பண்பாட்டுப் பயிற்சிகளை நமக்கு வழங்கியுள்ளான்.
அடக்கம், பொறுமை, சாந்தமான போக்கு, சமாதானம் ஆகிய பண்புகளை நாம் கடைப்பிடித்து வாழ்வதற்கு உறுதி பூண வேண்டும். அண்மையிலே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்பவர்களுக்கும் நமது பேருதவிகளை நல்குவோம்.
"மனிதன் மனிதனாக வாழ வேண்டும். புனிதனாகவும் வாழ வேண்டும் என்பதே அல்லாஹ்வின் விருப்பம். #அனைவருக்கும் #எனதுஇனியபெருநாள்வாழ்த்துக்கள்
0 comments:
Post a Comment