வெளிநாடுகளில் அராபியர்களின்
தேசிய உடையை அணிய வேண்டாம்
சம்பவம் ஒன்றை அடுத்து குடிமக்களுக்கு
ஐக்கிய அரேபிய அமீரகம் உத்தரவு
அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் அராபியர்களின் பாரம்பரியம் மிக்க தேசிய உடையை அணிந்திருந்தவரை ஐ.எஸ். தீவிரவாதி என்று கருதி பொலிஸார் கைது செய்ததை தொடர்ந்து, வெளிநாடுகளில் அராபியர்களின் தேசிய உடையை அணிய வேண்டாம் என்று தங்களது குடிமக்களுக்கு ஐக்கிய அரேபிய அமீரகம் உத்தரவிட்டுள்ளது.
அரபு நாட்டை சேர்ந்த அஹமட் அல் மென்ஹாலி(41) என்பவர் மருத்துவ சிகிச்சைக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். ஓஹியோ மாநிலத்தின் அவான் பகுதியில் உள்ள ஃபேர்லேண்ட் உணவகத்துக்கு வந்த அவரது உடையை கண்ட அந்த ஓட்டலின் வரவேற்பாளர் ‘இவன் ஐ.எஸ். தீவிரவாதியாக இருக்கலாம்’ என சந்தேகித்தார்
இதையடுத்து, அவர் உடனடியாக பொலிஸாருக்கு போன் செய்து தகவல் தெரிவிக்க, விரைந்துவந்த பொலிஸார் அவர்மீது தாக்குதல் நடத்தி, கீழேதள்ளி, கைவிலங்கிட்டு அழைத்து சென்றனர். உரிய விசாரணைக்கு பின்னர் அவர்
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு வந்திருப்பது தெரியவந்ததும் அவர் விடுவிக்கப்பட்டார்.
தன்னை தரக்குறைவாக நடத்திய ஓட்டல் வரவேற்பாளர் மற்றும் பொலிஸார்மீது வழக்கு தொடரப் போவதாக அஹமட் அல் மென்ஹாலி தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு சென்ற தங்கள் நாட்டின் குடிமகனை அவமரியாதையாக நடத்தியதற்காக அமெரிக்க அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அரேபிய அமீரகத்தின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் அராபியர்களின் தேசிய உடையை அணிய வேண்டாம் என்று தங்களது குடிமக்களுக்கு ஐக்கிய அரேபிய அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, கடந்த இரண்டாம் தேதி வெளியான செய்திக்குறிப்பில், ‘வெளிநாட்டில் பயணம் செய்யும் நம்நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி, வெளிநாடுகளில் பொது இடங்களுக்கு செல்லும்போது அராபியர்களின் பாரம்பரியம் மிக்க தேசிய உடையை அணிய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment