நாட்டில் அனைத்து மக்களும்

சமாதானத்துடன் வாழவேண்டும்

- களுவாஞ்சிகுடியில் ஜனாதிபதி

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  களுவாஞ்சிக்குடி தள வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு மற்றும் விடுதித் தொகுதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று 1 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் நடைபெற்றது.
இலங்கை அரசாங்கம் மற்றும் ஜெய்கா நிறுவனத்தின் நிதியுதவியில் 514 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள களுவாஞ்சிக்குடி தள வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் விடுதித் தொகுதியுடனான புதிய இரண்டு மாடிக் கட்டிடத்தை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி, கண்காணிப்பு விஜயத்திலும் ஈடுபட்டார்.
நோயாளர் விடுதிக்கு முதலாவதாக அனுமதிக்கப்பட்ட நோயாளியை ஜனாதிபதி பதிவுசெய்தார்.
வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.
மாகாண சுகாதார அமைச்சர் .எல்.எம் நசீர் உட்பட மாகாணத்தின் சுகாதாரத் துறை முன்னேற்றத்திற்காக பாடுபடும் அதிகாரிகளின் சேவையைப் பாராட்டி ஜனாதிபதி அவர்களினால் விருதுகளும் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையின் மாணவரால் வரையப்பட்ட ஜனாதிபதி அவர்களின் ஓவியம் அம்மாணவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இங்கு உரை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகவும் விருப்பத்துடனும் பலநோக்கங்களை மனதில் கொண்டுமே என்னை ஜனாதிபதியாக்கியிருக்கிறார்கள்
என்னை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மிகவும் விருப்பத்துடன் செயற்பட்டிருந்தார்கள். அனைத்து மக்களும் பல நோக்கங்களை மனத்தில் வைத்துக் கொண்டுதான் என்னை ஜனாதிபதியாக்கினார்கள்.
எமது நாட்டில் மிகவும் நீண்டகாலமாக நிலவி வந்த யுத்தத்தின் காரணத்தினால் வடக்கு கிழக்கு மக்கள் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வந்திருந்தார்கள்.
யுத்தத்தின் பாதிப்புக்கள் நாடு பூராகவும் ஏற்பட்டிருந்தன. யுத்தத்திற்கு பின்னர் இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த சேவை செய்வேன் என்ற எண்ணக்கருவில்தான் இந்த நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்தார்கள்.

இந்த நாட்டில் அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழவேண்டும், சமாதானத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஏற்படாத வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்.

இதற்காகத்தான் எமது அரசாங்கம் மிகவும் பாடுபட்டு செயற்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக நாங்கள் புதியதொரு அரசியலமைப்பை ஏற்படுத்திக் கொண்டு போகின்றோம்.

சிலர் இதனை தவறாகவும், பொய்யாகவும் பேசுகின்றார்கள். நாங்கள் நாட்டை உடைக்கப்போகின்றோம், பிரிக்கப்போகின்றோம், நிர்மூலமாக்கப் போகின்றோம், வெளிநாட்டுச் சக்திகளுக்கு அடிபணிந்து விட்டோம், என சிலர் கூறுகின்றார்கள்.

இவையனைத்தையும் நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம். ஒரே நாட்டிற்குள் பிளவுபடாமல் சமாதானத்துடன் வாழ வேண்டும் அதற்காகத்தான் அரசியலமைப்பை உருவாக்கிக் கொண்டு போகின்றோம் என எதிர்க் கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அந்த உத்தமமான நோக்கத்தை அடைவதற்காக அரசாங்கம் என்ற வகையில் பணியாற்றி வருகின்றோம். எதிர்வரும் சில மாதங்களுக்குள் சில அடிப்படை வேலைகளை முடிக்கத்தயாராக இருக்கின்றோம்.

மாகாணசபைகளை ஏற்படுத்தும் காலகட்டத்தில் நாட்டில் என்ன நடந்தன என்று மக்களுக்கு தற்போது ஞாபகம் இருக்கலாம். மாகாணசபைகளை உருவாக்கும் சட்டத்தைக் கொண்டு வரும்போது ஒருமாகாண சபையிலிருந்து இன்னுமொரு மாகாண சபைக்கு போவதற்கு வீசா எடுக்க வேண்டும் என பலர் சொன்னார்கள்.

மாகாணசபை சட்டத்தை அங்கீகரிப்பதற்கு முன்னர் வெளிவந்த பத்திரிகைகளை தற்போது எடுத்துப் பாருங்கள். இன்று எவ்வாறு சத்தம் போடுகின்றார்களோ அவ்வாறு தான் அன்றும் கூக்குரலிட்டார்கள்.

ஏற்கனவே இந்த நாட்டுக்குள் வாழ்கின்ற அனைவரையும் ஒன்றுபடுத்துவதற்காகத்தான் நாங்கள் படியாற்றி வருகின்றோம். சாந்தியும், சமாதானத்தையும், நன்றாக பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைந்த நாடாகவும் நாட்டை மாற்றவேண்டும்.

அன்று நான் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜெய்கா திட்டங்கள் தற்போது திறந்து வைக்கப்படுகின்றன.

4 திட்டங்களுக்காக 5,232 மில்லியன் ரூபாவை ஜப்பானிடம் இருந்த நாங்கள் பெற்றிருக்கின்றோம். இந்த நாட்டில் சுகாதார சேவையை மேம்படுத்த அரசாங்கம் என்ற ரீதியில் மென்மேலும் பணியாற்ற இருக்கின்றோம்.

நாட்டின் அபிவிருத்திக்கு சுகாதாரமும், கல்வியும், உயர்ந்தால் தான் அந்த நாடு முன்னேற்றமடையும், கல்வியறிவுள்ளவர்களாகவும், நோயற்ற மக்களும், வாழ்ந்தால் தான் அந்த நாடு முன்னேற்றம் அடையும்.

சுகாதாரம், கல்வி, மற்றும் கமத்தொழில் ஆகியவற்றுக்காக வேண்டி கிழக்கில் பெரும்பணியாற்ற தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் சில வருடங்களில் கிழக்கிலுள்ள அனைத்துக் குறைபாடுகளும் முடிவிற்கு கொண்டுவரப்படும்.

அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள எழுகின்றன. இந்த நாடு சுதந்திரமான நாடு என்ற வகையில் அரசாங்கத்தைப் பார்த்து யாருக்கும் விமர்சிக்க முடியும்.

கூடுதலான விமர்சசனங்கள்தான் அதிகளவு மக்களுக்குப் பணியாற்றும் எமது சக்தியாகும். அரசாங்கத்தை வீழ்த்திவிடுவேம் என சிலர் சொல்கின்றார்கள்.

இதுபற்றி சிலர் கனவுகள் காணுகின்றார்கள். அவர்களது கனவுகள் ஒருபோதும் நனவாகமாட்டாது. அரசாங்கம் என்ற வகையில் பாரிய சக்தியோடு நாம் முன்னே செல்வோம் எங்களை முறியடிக்க யாராலும் முடியாது என இதன் போது சுட்டிக்காட்டினார்.

இதுபோன்று எல்லா நாடுகளிலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. கடந்த காலங்களில் பணியாற்றியதை விட இன்னும் நாம் துரிதமாகப் பணியாற்றி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்வு கிடைக்கும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர்களான அமீர் அலி, பைசல் காசிம், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாந்து, முதலமைச்சர் நசீர் அஹமத், மாகாண அமைச்சர் ஆரயவதி கலப்பத்தி,, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிசி சுகானுமா, களுவாஞ்சிக்குடி மருத்துவமனை அத்தியட்சகர் மருத்துவ கலாநிதி சுகுணன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top