இலங்கையில் முஸ்லீம்கள் மீதான
வன்முறைக்கு வயது 100!

-    ஜெயபாலன்


வேலைக்குச் சென்ற அப்பா கலவரம் பரவுவதாக செய்தி அறிந்து ஓடிவந்தார். பள்ளிக்குச் சென்ற அண்ணாவை அழைத்துவர பாடசாலைக்கு ஓடினார். அவரவர் பிள்ளைகளை அழைத்துச் செல்ல தாய்மாரும் தந்தையரும் பயப் பீதியில் அங்கும் இங்குமாக ஓடித்திரிந்தனர். அண்ணாவை அழைத்து வந்ததும் எங்கள் எல்லோரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்அயல் வீட்டுச் சிங்களவர். தங்கள் வீட்டை தாள் இட்டு பூட்டி எங்களை ஒழித்து வைத்தனர். அருகில் இருந்த எங்களது வீடு தீயிட்டு கொழுத்தப்பட்டது. அங்குள்ள பல வீடுகள் வியாபாரங்கள் தீக்கிரையானது. நாங்கள் ஒழிந்திருந்த வீட்டையும் காடையர்கள் வந்து தட்டினர் தமிழர்களை ஒழிந்து வைத்திருக்கிறீர்களா என்று கூச்சலிட்டு கத்தி விட்டுச் சென்றனர். நாங்கள் கட்டிலுக்குக் கீழ் ஒழிந்திருந்தோம். பின்னர் மனிதாபிமானமிக்க பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் ஜீப்பைக் கொண்டு வந்து எங்களை ஏற்றிக் கொண்டு அகதிமுகாம் நோக்கிச் சென்றார். காடையர்கள் பொலிஸ் ஜீப்பையும் விட்டு வைக்கவில்லை. அதனைக் கலைத்தனர். பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களைக் கலைத்தார். நாங்கள் பாதுகாப்பாக அகதிமுகாம் வந்து அங்குள்ள நூற்றுக்கணக்காணவர்களுடன் இணைந்துகொண்டோம்.
இச்சம்பவம் சில தினங்களுக்கு முன் அழுத்கமவில் நடைபெறவில்லை. 37 ஆண்டுகளுக்கு முன் அனுராதபுரத்தில் எனக்கு ஆறு வயது இருக்கும் போது இடம்பெற்றது. தமிழ் மக்களுக்கு எதிராக ஜே ஆர் அரசு கட்டவிழ்த்துவிட்ட கலவரம். இவ்வாறான இனக் கலவரங்கள் இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல. 1915இல் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரத்தின் 100வது ஆண்டு அண்மித்துக் கொண்டிருக்கும் காலத்தில் பழைய வரலாற்றை து}சி தட்டிப் போட்டுள்ளனர்.
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னதாகவே சிங்கள பெளத்த இனவாதத்தை கக்கிய அநாகரிக தர்மபாலா 1915.ல் முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு இனக்கலவரத்தை து}ண்டிவிட்டார்.
இநாகரிக தர்மபாலாவின் பேச்சுக்களில் இருந்து: “இப்போது துவசம் செய்வதற்கு முன்பாக பிரகாசமான அழகிய தீவு சிங்கள ஆரியர்களால் சொர்க்கபுரியாக்கப்பட்டது. அந்த மக்களுக்கு மதமில்லாமை தெரியாது. மிருகக்கொலை, களவெடுப்பது, பொய்சொல்வது, விபச்சாரம், மது அருந்துவது போன்ற தீங்குகளுக்கு கிறிஸ்தவமும் இந்துத்துவமுமே பொறுப்பு. மதநம்பிக்கையற்ற அரக்கர்கள் வரலாற்று ரீதியாக உன்னதமான மக்களை மெல்ல மெல்ல இல்லாமல் செய்து வருகிறார்கள்.”
மொகம்மதீயன்களும்( முஸ்லிம்கள்) எங்கிருந்தோ வந்தவர்களும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்து யூதர்களைப் போல செல்வச் செழிப்புடன் வருகிறார்கள். 2358 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக்கொண்ட இந்த மண்ணின் சிங்கள மைந்தர்கள், வேற்று உலகத்தினரிடமிருந்து இந்த நாட்டைக் காக்க ஆறாக குருதியைச் சிந்தி இருக்கிறார்கள். ஆனால் பிரித்தானியருடைய பார்வையில் இவர்கள் வீடற்றவர்களாகவும், வேலையற்றவர்களாகவும் பரதேசிகளாகத் தெரிகின்றனர். தென்னிந்தியாவிலும் எங்கிருந்தெல்லாமோ வந்த மொகம்மதீயர்கள்( முஸ்லிம்கள்) எங்கள் புறக்கணிக்கப்பட்ட கிராமங்களில் வியாபாரம் என்னவென்று தெரியாதவர்களை காண்கிறார்கள். இதன் விளைவாக மொகமதீயர்கள் (முஸ்லிம்கள்) செல்வம் ஈட்டுகின்றனர். மண்ணின் மைந்தர்கள் சுவரோடு முட்டி மோதி வீழ்கின்றனர்.என்றும் பேசியுள்ளார்.
கலகொட அத்தே ஞானசாரா அண்மையில் ஆற்றிய உரையின் சில பகுதிகள்,”இந்த நாட்டில் நாங்கள் இன்னமும் சிங்கள பொலிஸை வைத்திருக்கிறோம். சிங்கள இராணுவம் இருக்கின்றது, இன்று ஒரு மரக்கலயா (சிங்கள பேச்சு வழக்கில் முஸ்லீம்களைக் குறிப்பது) அல்லது பறையா (சிங்கள பேச்சு வழக்கில் தமிழர்களைக் குறிப்பது) ஒரு சிங்களவனை தொட்டாலும் ……… அதுவே அவர்களுடைய முடிவாகும்.”
நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக அநாகரிக தர்மபால நாகரீகமாக ஆற்றிய உரைக்கும் பெளத்த பல சேனாவின் கலகொட அத்தே ஞானசார சிலதினங்களுக்கு முன் அழுத்கமவில் அநாகரீகமாக ஆற்றிய உரையும் அடிப்படையில் ஒரேமாதிரியான போக்குடையவை.
பெளத்த பயங்கரவாதத்தின் முகம் என ரைம்ஸ் சஞ்சிகையால் வர்ணிக்கப்பட்ட பர்மாவில் முஸ்லீம் சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிரான வன்முறையை முன்னெடுத்த அஸ்ஹின் விரது தேரோவை ஞானசார சென்று சந்தித்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். விரதுஞானசார கூட்டு தெற்காசியாவில் இனவாத பெளத்தத்தை பலப்படுதும் நீண்டகால நோக்கத்தைக் கொண்டுள்ளது.
தற்போது ராஜபக்ஸ அரசுக்கு நெருககமான பெளத்த பல சேனாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் மிகவும் கட்டுப்பட்டுத்தப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியில் மட்டுமே தங்கியுள்ள தற்போதைய அரசுக்கு இவ்வாறான மட்டுப்படுத்தப்பட்ட இனக்கலவரங்கள் உடனடி விளைவாக வாக்கு வங்கியை நிரப்ப உதவலாம். ஆனால் இவ்வாறான சம்பவங்கள் மிக மோசமாக கட்டுக்கடங்காமல் செல்வதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது. அதன் விளைவுகள் வாக்கு வங்கியை மிக மோசமாக பாதிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. விரதுஞானசார கூட்டு ஆளும் அரசின் வாக்கு வங்கிக்கு அப்பாலும் தனது நலன்களைக் கொண்டுள்ளது.
அண்மைய முஸ்லீம் களுக்கு எதிரான வன்செயல்களில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர், 150 பேர் காயமடைந்து உள்ளனர், 580 கட்டிடங்கள் எரிக்கப்பட்டு உள்ளது, அவற்றில் 150 வீடுகள், 17 பள்ளிவாசல்கள் எரிக்கப்பட்டு உள்ளது, 2450 பேர் அகதிகளாகி உள்ளனர் என முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மொகமட் அஸ்லம் பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

இலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் மிகக் குறிப்பான காலகட்டம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. அயலில் இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்குப் பெயர்போன நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்துள்ளார். மத்திய கிழக்கில் முஸ்லீம் மதப் பிரிவினரிடையே உள்ள முரண்பாடுகள் உள்நாட்டு யுத்தமாகி உள்ளது. இலங்கையில் உள்ளவர்கள் சுனி முஸ்லீம் பிரிவினர். இன்று சர்வதேச நாடுகளால் ஆட்சியில் ஏற்றப்பட்டவர்கள் ஷியா முஸ்லீம் பிரிவினர். சர்வதேசம் பயங்கரவாதமாகப் பார்க்கின்ற நாளாந்த செய்திகளில் தலைப்புச் செய்தியாக சுனி பிரிவைச் சேர்ந்த ஜிகாதிகள் மாறியுள்ளனர். சுனி ஜிகாதிகளுக்கு எதிரான போரில் தற்போது ஈரானும் சர்வதேசத்துடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இவற்றின் பின்னணியில் இலங்கை முஸ்லீம் ஒருவர் பாகிஸ்தானில் பயிற்றப்பட்ட ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டது போன்ற செய்திகளும் வெளியிடப்பட்டு உள்ளது.
இவற்றின் பின்னணியிலேயே இலங்கையில் முஸ்லீம் களுக்கு எதிரான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரம் இத்துடன் நிண்றுவிடப் போவதில்லை. இனவாத பெளத்தத்தை நிர்ணயிக்கும் உறுதிப்படுததும் போக்கின் ஒரு அங்கமே.இதனைப் புரிந்துகொள்வதும் தெரிந்து வைத்திருப்பதும் போதுமானதல்ல. இதனை எதிர்கொள்வதற்கான முன்னெடுப்புகள் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நாம் பல்வேறு இனக்கலவரங்களைக் கண்டு வந்தவர்கள். ஆனாலும் இந்தக் குறுகிய அளவான இனவாதிகளுக்கு எதிரான பலமான சேனை ஒன்றைக் கட்ட முடியாதவர்களாக உள்ளோம். காலத்துக்குக் காலம் இனக்கலவரங்கள் வரும்போது தேர்தல் காலத்துக்கு முன்பாகவும் இனக்கலவரம் பற்றி பேசுபவர்கள் தேர்தலின் போது பச்சை இனவாதத்தை கக்குகின்றனர். இதற்கு சிங்கள.  தமிழ், முஸ்லீம் அரசியல் வாதிகள் விதிவலக்கல்ல.

வெறுமனே ஆட்சி மாற்றத்தையொட்டிய ஐக்கிய முன்னணி உருவாக்கம் அடிப்படையில் உள்ள பிரச்சினைக்கு தீர்வாகாது. தேர்தல் அரசியலுக்கு அப்பால் மக்களின் நலன் அடிப்படையில் மிகப் பலமான ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இந்த ஐக்கிய முன்னணி இவ்வாறான இனவாத சக்திகளுக்கு எதிராகவும் மக்கள்விரோத சட்டதிட்டங்களுக்கு எதிராகவும் தீவிரமாகச் செயற்பட வேண்டும். இன, மத, அரசியல் பேதங்களைக் கடந்த இந்த ஐக்கிய முன்னணியானது நாட்டின் மக்களின் நலனைக் கண்காணிக்கின்ற அமைப்பாக இருக்க வேண்டும். இவ்வாறான ஒரு எதிர்கொள்ளல் செயன்முறையில்லாமல் தனித்தனி சம்பவங்களாக இவ்வாறான கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.
இலங்கையில் உள்ள நான்கு இனக்குழுமங்கள் மத்தியிலும் ஆழமான இன உணர்வுகள் இருந்த போதும் இனக்கலவரங்களின் போது பொதுமக்கள்தங்களை ஈடுபடுத்தியது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. பாதிக்கப்பட்டவர்களிலும் பார்க்க பாதுகாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஆகவே இந்த மானிடப் பண்பை முதலீடாகக் கொண்டு இன ஐக்கியத்துக்கான மக்கள் பல சேனா ஒன்றைக் கட்டியெழுப்ப வேண்டும்.
சிங்களபெளத்த மக்கள் தங்கள் மீது வீசப்பட்ட இனவாதச் சேற்றை கழுவிக்கொண்டிருக்கையில் சிங்களபெளத்த இனவாதிகளால் மீண்டும் அவர்கள் மீது இனவாதச் சேற்றை வாரி இறைத்துள்ளனர். ஆறுமுகநாவலரை வைத்துக் கொண்டு தமிழர்கள்- சைவர்கள் எப்படி சாதியத்தை இல்லாமல் ஒழிக்க முடியாது, அவ்வாறே சிங்களவர்கள்பெளத்தர்கள் அநாகரிக தர்மபாலாவை வைத்துக்கொண்டு பெளத்த விரோத சிந்தனைகளை ஒழிக்க முடியாது. தள்டுவே சோமராம (எஸ் டபிள்யு ஆர்டி பண்டாரநாயக்காவை படுகொலை செய்த பிக்கு), கொலன்னாவே சுமங்கள தேரோ (ஜாதிக ஹெல உருமய ஸ்தாபகர்) கொட்டுஹல ஞானசாரா போன்றவர்கள் அநாகரிக தர்மபாலவின் சிந்தனைகளில் வளர்க்கப்பட்டவர்கள்.

இலங்கை மக்களை புத்தரோ, சிவபெருமானோ, யேசுவோ காப்பாற்றப் போவதில்லை. அப்படி அவர்கள் காப்பாற்றுவதாக இருந்தால் நாங்கள் இங்கு கூடியிருக்கத் தேவையில்லை. அந்த மக்களே தங்களைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக அவர்கள் மனித நேயத்தின் அடிப்படையில் ஒன்றுபட வேண்டும்.
கட்டுரை: ஜெயபாலன் லண்டன், நன்றி: தேசம் நெட்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top