சட்டமும் ஒழுங்கும் சிரித்துக் கொண்டிருந்த போது
அறியாமல் அழுது கொண்டிருந்த அளுத்கமை மக்கள்

.எச் .சித்தீக் காரியப்பர்

தமிழர்களுக்கு எதிரான 1983 ஜுலைக் கலவரத்தின் அகோரத்தை, அந்த இன சங்காரத்தை கொழும்பு கோட்டை ரயில் நிலைய பாலத்தின் மேல் நின்று நேரடியாகவே பார்த்துக் கொண்டிருந்த நினைவுகளையும் மியன்மார் முஸ்லிம்கள் மீது அந்நாட்டு பௌத்தர்கள் மேற்கொண்ட அநியாயங்கள் அக்கிரமங்களை ஊடகங்கள் மூலம் பார்த்து படித்த அண்மைக்கால ஞாபகங்களையும் கடந்த வாரம் இடம்பெற்ற துன்பியல் நிகழ்வு மீட்டு விட்டது..
ஆயிரம், ஆயிரம் கோடிகள் நஷ்டம், மூன்று மனித உயிர்கள் பதறப் பதறப் பறிக்கப்பட்ட கொடூரம், நூற்றுக்கு மேற்பட்டோர் காயம். நூற்றுக்கணக்கில் வீடுகள், வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவங்கள்.
ஊரடங்கு அமுலிலிருந்த நிலையிலேயே சூறையாடல்களும் தீ வைப்புகளும் கச்சிதமாக நடந்தேறின. சிறிய ஓர் இனவாதக் குழுவினால் இன்று இந்தக் கொடுமை பெரிதாக அரங்கேற்றப்பட்டுள்ளது.
யாரை யார் காப்பாற்றுவார் என்ற நிலையில் தஞ்சமடைந்திருந்த மக்களை ஒரு முழு இரவுமே பீதியில் ஆழ்த்திய சர்வாதிக்காரக் குண்டர்கள் அந்தப் பிரதேசங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து தனிக்காட்டு ராஜாக்களாக கோலோச்சினர்.
தஞ்சமடைந்திருந்த மக்களில் பலர் ஊடரங்கின் போது தங்களது வீடுகள், வர்த்தக நிலையங்களைப் பார்வையிட முயற்சித்த போது உங்களைக் கொன்று விடுவார்கள் என்று கூறி தடுத்த சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்போர் அதே ஊரடங்கில் வன்முறையாளர்களின் நடமாட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கி அவர்களது அட்டகாசத்துக்குச் சந்தர்ப்பத்தினைக் கொடுத்த போது சட்டம், ஒழுங்கு எங்கே என்பது தொடர்பில் பாடசாலைகளிலும் பள்ளிவாசல்களிலும் தஞ்சமடைந்த மக்கள் கேள்வி எழுப்பவில்லை. அவர்களுக்கு வெளியில் நடப்பது என்ன என்பதும் தெரியாத நிலைமை. பொழுது விடிந்த போதுதான் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்தன.
திட்டமிட்டவர்களும் அதற்கு துணை நின்றவர்களும் வென்று விட்டார்கள் தாங்கள் தோற்று விட்டோம் என்பதனை அந்த மக்கள் அப்போதுதான் அறிந்து கொண்டனர்.
வீடுகள், வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட பின்னரே கொளுத்தப்பட்டுள்ளன. வாகனங்களின் முக்கிய பாகங்கள் கூட கழற்றப்பட்ட பின்னரே தீ வைப்பு என்றால் அமைதியாக, ஆறுதலாக இருந்தே இந்த வேலைகள் எல்லாம் இடம்பெற்றுள்ளன என்றே கருத வேண்டும்.
பள்ளிவாசல்களைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஆனால் அங்கும் எவரும் இல்லாவிடின் அவற்றினையும் கொள்ளையிட்டு அனைத்தையும் கொளுத்தியிருப்பர்.
இவைகள் எல்லாம் திடீரென இடம்பெற்ற வன்முறைகள் அல்ல.. நன்கு திட்டமுறையில் இடம்பெற்றவைகள். மியன்மார் அனுபவங்களைக் கேட்டறிந்தவர்களின் மூளைகளால் திட்டமிடப்பட்டவை இவை.
அளுத்கமை, பேருவளைப் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற இந்தச் சம்பவங்கள் தமிழர்கள் மீதான ஜுலைக் கலவரம் போன்று முஸ்லிம்களுக்கு எதிரான ஜுன் கலவரமாக இன்று இலங்கையின் வரலாற்றில் இன்னொரு கறுப்புப் புள்ளியை வைத்து விட்டது.ஆனால் எங்கும் எதுவும் சரியாக இருந்திருந்தால் இன்று இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கமாட்டாது என்பது மட்டும் நிச்சயம்.
இன்று அளுத்கமை, பேருவளை போன்ற பிரதேச மக்கள் அனைத்தையும் இழந்து அகதிகளாகப்பட்டுள்ளனர். கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதுவும் முஸ்லிம்களின் புர்வீகத்துடன் தொடர்புடைய பேருவளையில் இவைகள் நடந்தேறின.
2050 ஆணடுகளில் இந்த நாட்டில் முஸலிம்கள் பெரும்பான்மையாக மாறி சிங்களவர்கள் சிறுபான்மையாகப் போய் விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக உச்சம் கொண்ட விடயமே இது.
முஸ்லிம்களின் பொருளாதாரத்தை மையமாக வைத்து தாக்கி அவர்களை இல்லாத ஒரு சமூக மாற்றுவதே இந்தக் கைங்கரியத்தின் முழுமையான நோக்கம். முஸ்லிம்களின் வர்த்தகத் துறையை முடக்குதல், சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றுதல், முஸ்லிம் மதத் தலங்களை இல்லாதொழித்தல், அவர்களது சமய, கலாசாரங்களுக்கு இடமளியாமை போன்ற மேலும் பல பிரதான விடயங்களை முன்வைத்தே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.
கல்வித்துறையில் கூட முஸ்லிம்களைப் பின்னடையச் செய்யும் பல நடவடிக்கைகளிலும் இவர்கள் முன்னர் வெற்றி கண்டு விட்டனர். அடுத்த கட்ட நகர்வையே அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
2012 இல் உருவெடுத்த இந்த பொதுபல சேனா 2013 தொடக்கம் இன்றை வரை 313 பாதகச் செயல்களைச் செய்துள்ளது. அவற்றில் 99 சத வீதமானவை முஸ்லிம்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டன.
ஒரு பௌத்த தேரரின் சாரதியும் சில இளைஞர்களும் முரண்பட்ட ஒரு சம்பவம்தான் இதற்குக் காரணம் என யாரும் கூற முடியாது. ஆனால், அந்த முரண்பாடு உருவாக்கப்பட்ட விதம் அதன் நோக்கம் என்ன என்பதனை ஆராயும் போது இந்தச் சம்பவம் ஒரு கலவரத்துக்கான சாட்டாக காட்டப்பட்டது என்பதனைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் கலவரம் செய்வது எப்போதே தீர்மானிக்கப்பட்ட விடயம்.
ஒரு சிங்கள பெண் டாக்டரின் வீட்டின் மீது முஸ்லிம் இளைஞர்கள் கல் வீசியதாகச் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு. இவைகள் இரண்டும் தான் இன்று இரு முஸ்லிம் பிரதேசங்களை சுடுகாடாக மாற்றுவதற்கு காரணம் எனக் கூறப்படுவது சுத்தப் பொய். காரியமொன்றினைச் செய்ய இவைகள் வலிந்த வைக்கப்பட்ட பொய்க் காரணங்களாக மட்டுமே உள்ளன.
பொதுபல சேனாவின் செயலாளர் அந்தப் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது ஆற்றிய உரையில் கூட அவர் இந்த இரு காரணங்களையும் பெரிதாகப் பிரஸ்தாபிக்கவில்லை. இந்த நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகத்தையுமே அவர் கீழத்தரமாக விமர்சித்திருந்தார். முஸ்லிம் சமூகம் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தலான சமூமென வர்ணித்திருந்தார்.
அங்கிருந்த சிங்களவர்களை உணர்ச்சியடையும் வகையில் முஸ்லிம்கள் மீது இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார். அவர் பேசி முடிந்த பின்னர் ஊர்வலம் ஒன்று முஸ்லிம் பிரதேசங்கள் ஊடாக சென்ற போது கூட அவர்கள் ஒரு தந்திரத்தைக் கையாண்டிருந்தனர். முஸ்லிம்களைக் கேவலப்படுத்தும் வகையில் வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டனர். இருப்பினும் பெருமபாலான முஸ்லிம்கள் நிலைமைகளை உணர்ந்து மௌனமாக காணப்பட்டதால் அதனையே ஒரு தோல்வியாக அவர்கள் கருதியே இந்த வெறித்தனத்தில் ஈடுபட்டனர்.
வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், பள்ளிவாசல்கள், எரிக்கப்பட்ட பின் நூற்றுக் கணக்கானவர்களை வீடற்றவர்களாக்கச் செய்த இந்த வன்முறைகளை தடுப்பதற்கு அதிகாரிகள் சிறியளவிலேயே செயற்பட்டதாக உள்ளுர் முஸ்லிம் தலைவர்கள் குற்றம் சுமத்துவதாக அல் ஜெஸீரா தெரிவித்திருந்தது.
இவ்வாறான அனர்த்தமொன்று இடம்பெறும் முன்னர் முஸ்லிம் காங்கிரஸும் சிவில் அமைப்புக்களும் பொலிஸாருக்கு எதிர்வு கூறியும் அவர்கள் இதனை கணக்கெடுக்காது உடந்தையாக இருந்துள்ளமை வேதனையானது. பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு விசேட அதிரப்படை ஆகியவற்றின் ஒத்துழைப்புடனே இந்தச் சம்பவம் திட்டமிட்டு நடந்துள்ளது. இது ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு முஸ்லிம்களை பள்ளிவாசல்களில் இருக்கச் சொல்லிவிட்டு மின்சாரத்தை செயலிழக்கச் செய்தே பின்பே இவை இடம்பெற்றுள்ளதாக அஸ் ஜெஸீரா ஒருவரை ஆதாரம் காட்டி நேரடியாகக் கூறியிருந்தது.
இதே விடயத்தையே உள்ளுர் அரசியல் தலைமைகள், அமைப்புகளும் சுட்டிக் காட்டிக் குற்றஞ் சுமத்தியிருந்தன. பாதுகாப்பு தரப்பினரின் நடவடிக்கைகள் தொடர்பில் அவர்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று எல்லாம் கச்சிதமாக முடிந்த மறு தினமே பொலிஸ் திணைக்களம் கலவரப் பகுதிகளுக்கு இராணுவத்தை அனுப்புமாறு கூறியிருந்தது. இதனை இராணுவ ஊடகப் பேச்சாளரே ஏற்றுக் கொண்டிருந்தார்.
இராணுவம் அங்கு சென்ற பின்னரே நிலைமைகள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்றால் எங்கு தவறுகள் இடம்பெற்றுள்ளன. யாரெல்லாம் துணை நின்றார்கள் என்பதனை யாருக்கும் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை.
அளுத்கமயை சேர்ந்த சிங்களவர் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவிக்கையில், கலகக் குழுவினர் எங்கிருந்த வந்தார்கள் என எனக்குத் தெரியவில்லை. எமது வீட்டுக்கு வெளியே பௌத்த கொடிகளை தொங்க விடுமாறும் கேட்டக் கொண்டனர் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கலவரம் முடிந்த பின்னர் கைக்குண்டுகள், ஆயுதங்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆகவே, இது ஏலவே, நிகழ்ச்சி நிரல்படுத்தப்பட்ட தாக்குதல். முன்னர் கூறப்பட்ட இரு விடயங்கள்தான் இந்தக் கலவரத்து காரணம் என்பது இட்டுக்கட்டப்பட்டு வலிந்து வைக்கப்பட்ட சாட்டுகளே தவிர வேறொன்றும் இல்லை

(நன்றி : விரகேசரி வாரவெளியீடு 22-06-2014)

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top