அளுத்கமயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தில்
பொதுபல சேனாவின்  ‘தர்கா நகர் சதி நாடகம்

– லதீப் பாரூக்

பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆற்றிய உணர்ச்சியைத் தூண்டும் உரை, அளுத்கமை, தர்கா நகர், பேருவளை போன்ற பிரதேசங்களில் உயிரிழப்புக்கள், சொத்தழிப்பு, சூறையாடல் என்பவற்றிற்கு தூபமிட்டு, இலங்கை வரலாற்றின் மற்றொரு வெட்கக் கேடான, மறக்க முடியாத வடுவை ஏற்படுத்தி இருக்கிறது.
ஞானசார தேரரைப் பேச அனுமதித்ததுதான் அழிவின் ஆரம்பம். ஞானசாரரின் பேச்சுக்கள் சிங்கள சமூகத்தின் உணர்ச்சிகளை தூண்டி விடக் கூடியவை.
எதிர்பார்த்த்து போன்றே சிங்கள சமூகத்தின் உணர்ச்சிகளை அவரது உரை தூண்டி விட்டது. அப்பாவி முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதல்களுக்குத் தூபம் இட்டது. அநியாயமாக உயிர்களைப் பலி எடுத்தது. எதுவிதக் காரணமும் இன்றி, முஸ்லிம் சொத்துக்களை அழித்தது.
பொது பல சேனாவின் செயற்பாடுகளை அவதானித்தால், முஸ்லிம்களைப் படுகொலை செய்து, அவர்களின் பொருளாதாரத்தின் ஆணிவேரில் கைவைத்து, பொருளாதார ரீதியாக அவர்களை ஒட்டாண்டியாக்குவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
நேரடியாகவும், மறைமுகமாகவும் அவரகளுக்குக் கிடைக்கின்ற அதிகாரத்தின் ஆசீர்வாதத்ததுடன், இவர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, இனங்கள் இடையில் நிலவி வந்த அமைதியை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். (எவ்வாறாயினும், பொது பல சேனா போன்ற கடும்போக்குவாதிகள், எந்தவிதத்திலும் ஒட்டுமொத்த சிங்கள சமூகத்தையும் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் அல்லர் என்பதை நாம் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்).
அளுத்கமயைப் பொறுத்தவரை, இப்பிரச்சினை கடந்த இரண்டு மாதங்களாகப் புகைந்து கொண்டிருப்பதுதான்.
கடந்த ஏப்ரல், 29 ஆம் நாள் அஹ்மத் கான் என்பவரின் கடை அதிகாலை 3.30 மணி அளவில் தீக்கிறையாக்கப்படுகிறது. சாதாரண நடைபாதை வியாபாரியாக இருந்து, வளர்ந்திருந்திருந்த இவருடைய வாழ்நாள் உழைப்பு, ஒரே இரவில் சாம்பலாகிப் போகிறது.
ஜூன், 12 ஆம் நாள் மற்றொரு சிறு சம்பவம். புத்த பிக்கு ஒருவரின் சாரதிக்கும், முஸ்லிம் ஒருவருக்கும் இடையில் சிறியதொரு பிரச்சினை ஏற்படுகிறது. பிக்கு தலையீடு செய்யவும், பிரச்சினை அந்த இடத்திலேயே முடிவுக்கு வந்தாலும், யாரோ சிலரின் அழுத்தம் காரணமாக (அந்த யாரோ சிலர் யார் என்பதை ஊகிப்பது கஷ்டமானதல்ல), இது தொடர்பிலான பொலிஸ் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருக்கிறார்.
மற்றொரு சம்பவத்தில், பிரதேசத்தின் பிரபல சிங்கள, பெண் வைத்தியர் ஒருவரின் வீட்டிற்கு ஒரு கல் எறியப்பட்டுள்ளது. இதை எறிந்தவர்கள் முஸ்லிம்களே என்றும், அது தொடர்பில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்யுமாறு அவருக்கும் அழுத்தம் வழங்கப்பட்ட போதிலும், அவர் அதனை மறுத்திருப்பதாகத் தெரிய வருகிறது.
எனவே, பொது பல சேனாவைப் பொறுத்த வரை, தமது நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செல்வதற்காக, எத்தகைய அண்டப் புலுகலை வேண்டுமானாலும் கட்டவிழ்த்து விடுவதே அதன் கைங்கர்யமாகும்.
இத்தகைய இழிவான, மூன்றாம் தர முறைகள் மூலம், பிரதேசத்தில் அசாதாரண சூழ் நிலை ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் 15, ஜூன், 2014, ஞாயிற்றுக் கிழமையன்று நடாத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம் நிலவரத்தை மேலும் உறுதியற்றதாக மாற்றி விட்டது.
நிலமையைக் கட்டுப்படுத்துவதற்காக அங்கு சென்ற அமைச்சர் குமார வெலகமவின் வாகனத்தின் மீது வேறு, இக்காடையர்கள் தாக்குதல் நடாத்தி இருக்கிறார்கள்.
நிலமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக வேண்டி, கண்ணீர் புகை பாவிக்க வேண்டிய நிலைக்குப் பொலிஸார் தள்ளப்பட்டனர். இவ்விதம் நிலமை கட்டுக்கடங்காமல் இருந்த நிலையில்தான், ஞானசார தேரர் ஊர்வலத்தில் உரை நிகழ்த்துவதற்காக வந்தார்.
இவ்விதம் ஏற்கனவே, பிரச்சினைகள் எரிந்து கொண்டிருந்த ஒரு பிரதேசத்தில், ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கு அனுமதி வழங்கியமை பற்றி ஊடகவியலாளர் டரிஸ்டா பாஸ்டியன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“What kind of Government that permits Buddhist hardliners to rally in a town where ethnic tension raged only two days ago?”
இது என்ன வகையான (பொறுப்பற்ற) அரசாங்கம் ? இரண்டு நாட்களுக்கு முன்புதான் இன ரீதியான பூசல் இடம்பெற்றிருந்த ஒரு பிரதேசத்தில், பௌத்த கடும்போக்குவாதிகள் ஓர் ஊர்வலத்தை நடாத்துவதற்கு அனுப்பதி வழங்கி இருக்கிறது”.
பிறகு இவர்கள் வாகன ஊர்வலமாக தர்கா நகரை நோக்கிப் போனார்கள். அன்று மாலை 6.45 அளவில், அளுத்கமயிலும், சுற்று வட்டாரத்திலும் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்தது. தாம் இருந்த இடங்களிலேயே முஸ்லிம்கள் முடங்கிப் போக வேண்டிய நிலை உருவானது. ஆனால், ஊரடங்கு ஏற்கனவே அமுலில் இருந்த நிலையில், பொது பல சேனாக்காரர்கள் தாக்குதல் நடாத்தினார்கள்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக தமது சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம்களால் வெளியே செல்ல முடியவில்லை. ஆனால், பொது பல சேனாவைச் சேர்ந்த காடையர்கள் பாதைகளில் தென்பட்டார்கள். வாகனகங்களிலும் தடை இல்லாமல் அங்கும் இங்கும் சென்று வந்தார்கள். (முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது போன்று).
அன்று ஒன்பது மணி அளவில், அதிகாரிகொடயில் ஆறு வீடுகளுக்குத் தீ வைக்கப்படுகிறது.
இவற்றில் நான்கு வீடுகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானவை. இவற்றுள் ஒன்று ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஒருவருக்குச் சொந்தமானது.
வீடுகள் தீவைக்கப்பட்ட பயங்கரத்திற்கிடையே, அவசர அழைப்பு இலக்கமான 119 ஐச் சுழற்றினார்கள். பதிலில்லை. பொலிஸாரை அழைத்தார்கள். பதில் இல்லை. தீயணைப்புப் பிரிவை அழைத்தார்கள். பதில் இல்லை. இனி அவர்கள் என்ன செய்வார்கள்?
இவ்விதம் பாதிக்கப்பட்ட சொத்துடமையாளர்களுள் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்: “இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு சட்டத்தின் பாதுகாப்புக் கிடையாது…”.
அச்சமும் திடுக்கமும் எங்கும் பரவியிருந்தது. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த அந்தப் பயங்கர இரவு முழுவதும் தாக்குதல் தொடர்ந்தது. அண்ணளவாக இருபது வீடுகளும், வியாபர ஸ்தலங்களும் சேதமாகி இருப்பதாக அடுத்த நாள் காலையில் ஊர்வாசிகள் தெரிவித்தார்கள்.
அளுத்கமயைப் பொறுத்த வரை, சிங்களவர்களுக்குச் சொந்தமான கட்டிடங்களில் இயங்கிய முஸ்லிம் வியாபார நிலையங்கள் பாதிக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்குச் சொந்தமான கட்டிடங்களில் இயங்கிய வியாபார நிலையங்களே சேதமாகி இருக்கின்றன. தர்கா நகரில், முஸ்லிம் வியாபாரி ஒருவருக்குச் சொந்தமான கடைத் தொகுதி ஒன்றையே, திங்கள் அதிகாலையில், பிக்குகள் உட்பட இருநூறு பேர் சேர்ந்து, தீ வைத்து விட்டார்கள்.
திங்கள் காலையில் சுமார் எண்பது பேர் வரை காயம் அடைந்திருந்தார்கள். பொலிஸ் அறிக்கைகளின் படி, சுமார் 3 பேர் கொல்லப்பட்டும், 55 முஸ்லிம்கள் காயமடைந்து, வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டும் இருந்தார்கள்.
வலபிடிய பிரதேசத்தில் காயமடைந்தவர்களைப் பொறுத்த வரை, அவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அவர்கள் கொழும்பில் உள்ளவர்களை அழைத்து, மருந்து மற்றும் போக்குவரத்து வசதி என்பவற்றை செய்து தருமாறு கோரிக் கொண்டிருந்தார்கள்.
ஆறு மணியளவில், காடையர்கள் தாக்குதல்கள் மற்றும் விசேட அதிரடிப் படையினர் நடாத்திய துப்பாக்கிச் சூடு என்பவற்றில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருந்துத் தேவை தீவிரமாகி, அதற்காக கொழும்பிற்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்கள்.
மருந்துப் பொருட்களும், அம்பியூலன்ஸ் வண்டிகளும் தயாராக இருந்தன. ஆனால், பிரதேசத்தில் நிலவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக, பிரதேசத்திற்குள் செல்ல முடியவில்லை.
விசேட அதிரடிப்படையினர் தம்மை வீடுகளுக்குள் முடக்கி வைத்திருந்ததாகவும், வீட்டு நுழைவாயில்கள் வரை கூட வர விடவில்லை என்றும், ஆனால், காடையர்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்தார்கள் என்றும், வாகனங்களைக் கூடச் செலுத்திக் கொண்டிருந்தார்கள் என்றும் முஸ்லிம்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதிரடிப் படை ஓர் இடத்தில் இருந்து வெளியான உடன், அப்பிரதேசம் தாக்குதலுக்கு உள்ளாகும். தாக்குதல் முடிந்த பிறகுதான் மீண்டும் அதிரடிப் படை திரும்பி வரும் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிடுகிறார்கள்.
எதுவிதக் காரணமும் இல்லாமல், அவர்களது ஜீவனோபாயம் இப்போது நாசமாக்கப்பட்டு விட்டது. “அவர்கள் எமது கடைகளைத் தாக்கி, எமது வயிறுகளில் கைவைத்து விட்டார்கள். நேற்று இரவு அளுத்கம முஸ்லிம்களைக் காளி செய்து விட்டார்கள்….” என்கிறார் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுள் ஒருவர்.
இவர்கள் கூறுகின்ற மற்றொரு விடயம்தான், குறித்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இப்பிரத்தைச் சேர்ந்த்வர்கள்ளல்லர் என்பது. அநேகமாக வேறு பிரதேசங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களாக இவர்கள் இருக்கலாம். நாட்டின் வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் போதும், இவ்விதம் வெளிப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே தாக்குதலில் ஈடுபட்டார்கள். பொது பல சேனாவிடம் பயிற்சி பெற்றதொரு தொண்டர் படை ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகமும் இவ்விடத்தில் எழுகிறது. ஒரு வேளை நாட்டை இரத்தக் காடாக்கி, அதில் குளிர்காய நினைக்கும் ஏதேனும் ஒரு சக்தி இவர்கள் பின்னணியில் இருக்கவும் கூடும்.
ஜூன், 16 ஆம் திகதி, திங்கட் கிழமை, காடையர்கள் தொடர்ந்தும் தாக்குதல் நடாத்துவதாகவும், கடைகளை நொருக்குவதாகவும் பேருவளை மஹகொடயைச் சேர்ந்தவர்கள் முறையிட்டார்கள். இந்நிலையில், விளக்குகளை அணைத்து விட்டு, வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்கள்.தாக்குதலுக்கு இலக்கான குடும்பங்கள் பள்ளிவாயல்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.
ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் தப்பிச் செல்ல முனைந்த வேளையில் வெட்டப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி, நளீமிய்யா வளாகத்தில் தஞ்சம் அடைந்திருந்த வேளை மரணம் அடைந்த கோரச் சம்பவமும் நடந்தேறியுள்ளது.
இவ்விதம் பாதுகாப்பிற்காக வீடுகளை விட்டு வெளியேறியோரின் வீடுகள் சூறையாடப்பட்டன. நகைகள் போன்ற பெறுமதியானவற்றை இக்காடையர் கும்பல் தமது ஆடைகளுக்குள் சொருகிக் கொண்டது. மனசாட்சி மரத்துப் போன இக்காடையர்களின் செயல்பாடுகள் இவ்வாறு இருந்த நிலையில், கொழும்பில் இருந்து உதவிகள் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை நோக்கி சென்றடைந்து கொண்டு இருந்தன.
இத்தாக்குதலுக்கு முன்னைய நிகழ்வுகள், தாக்குதல் இடம்பெற்ற விதம் என்பவற்றை நோக்கும் போது, இது தற்செயலாக நடந்த ஒற்றைச் சம்பவமல்ல என்பதையும், பொது பல சேனாவின் மூலம் மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதி நாடகத்தின் ஓர் அங்கம் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
உள்ளூர் ஊடங்கள் வழமை போல் என்னதான் மழுப்பப் பார்த்தாலும், சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க இது தவறவில்லை. சர்வதேச நாடுகள் பலவும் இத்தாக்குதலை கண்டித்திருக்கின்றன. கொழும்பில் அமெரிக்கத் தூதரம் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் (இலங்கை) அரசாங்கத்திடம் (சட்டம்) ஒழுங்கை நிலைநிறுத்துமாறும், குடிமக்களின் உயிர்களையும், வணக்கத்தளங்களையும், சொத்துக்களையும் பாதுகாக்குமாறும் கோருகின்றோம். இத்தாக்குதல் குறித்து விசாரணை நடாத்தி, பொறுப்பானவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வருமாறும் நாம் கோருகின்றோம். வன்முறையைத் தவிர்ந்து கொள்ளுமாறும், சுய கட்டுப்பட்டை மேற்கொள்ளுமாறும், சட்டத்தின் ஆட்சியை மதிக்குமாறும் சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் நாம் கோருகின்றோம்….”

நன்றி; மீள்பார்வை






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top