முன்னாள் ஜனாதிபதிக்கு ஓய்வூதியமும் சம்பளமும்

3 இலட்சத்து 49 ஆயிரம் ரூபா பெறுகின்றார்

நிதியமைச்சர் தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸ, மாதாந்தம் இரண்டு கொடுப்பனவுகளை பெறுகின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதிக்கான ஓய்வூதியமும், குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாதாந்த சம்பளம் மற்றும் இப்பதவி தொடர்பான கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொண்டிருக்கின்றார் என அறிவிக்கப்படுகின்றது.
அப்படியானால் இவருக்கு இப்படி ஓய்வூதியமும் சம்பளமும் வழங்கப்படுவது நியாயம்தானா? அது எந்த வகையில் நியாயமாகும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்னும் அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை. தற்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல் செய்து கொண்டிருக்கிறார். (நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவை செய்கின்றாரா? நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்து கருத்துக்களைத் தெரிவித்துள்ளாரா? என்பதெல்லாம் வேறு விடயம்)
ஓய்வு பெறாத ஒருவருக்கு தற்போது வகிக்கும் பதவிக்கான சம்பளமும் கொடுப்பனவுகள் மாத்திரமே வழங்கப்படுவதுதானே நியாயம் என மக்கள் தெரிவிக்கின்றனர். அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாது போகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்கான ஓய்வூதியம் வழங்குவது பற்றி ஆராயமுடியும் எனவும் மக்களால் கருத்து தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் அவர்கள் தன்னுடைய ஓய்வூதியத்துடன் தனது கணவரின் ஓய்வூதியத்தையும் பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்தபோது இருவரில் ஓருவரின் ஓய்வூதியத்தையே பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஸ ஓய்வூதியமும் சம்பளமும் எவ்வாறு பெற்றுக் கொண்டிருக்க முடியும்? இது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் கருத்துக் கூறுகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் என்றவகையில் மஹிந்த ராஜபக்ஸ, மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவு அடங்களாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை மாதமொன்றுக்கு பெறுகின்றார்.

முன்னாள் ஜனாதிபதிக்கான ஓய்வூதிய கொடுப்பனவு உள்ளிட்ட இதர கொடுப்பனவாக கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் அவர் 3 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாயை பெறுகின்றார் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top