ஒன்றரை வயதில் 22 கிலோ
வினோத நோயால் உயிருக்குப் போராடும் குழந்தை!
இந்தியாவில் உள்ள மராட்டிய மாநிலம், புனே மாவட்டம், போசாரி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை ‘லெப்டின்’ எனப்படும் ஹார்மோன் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, நாளுக்குநாள் அதீதமான உடல் எடையுடன் வளர்ந்து வருகிறது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு வயிற்றுக்கு வேண்டிய அளவுக்கு சாப்பிட்டால் போதும் என்ற மனநிறைவு ஏற்படாது. அதற்கு மூளையில் இருக்கும் பகுதி இடமளிக்காது. மேலும், மேலும் பசிப்பது போன்ற உணர்வே தொடர்ந்து ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீஜித் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை பிறக்கும்போது இரண்டரை கிலோ எடை மட்டுமே இருந்ததாம்.
பின்னர், ஆறு மாதத்தில் 4 கிலோவாகவும், பத்து மாதத்தில் 17 கிலோவாகவும், தற்போது பதினெட்டு மாதத்தில் 22 கிலோவாகவும் அபரிமிதமான உடல் எடையுடன் இந்த குழந்தை வளர்ந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் மூன்று வயதுக்குள் சுமார் 40 கிலோ எடையை இந்த குழந்தை அடைந்துவிடும் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, ஸ்ரீஜித்துக்கு மும்பையில் உள்ள ஜச்லோக் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நோயை குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளும், மருந்துகளும் இந்தியாவில் இல்லை என்பதால் இங்கிலாந்தில் இருந்து மிகுந்த பணச்செலவின் மூலம் வரவழைக்கப்படும் விலையுயர்ந்த ஊசி மருந்தை ஒருநாளைக்கு இருவேளை செலுத்துவதன் மூலம் அந்த குழந்தையின் பசி நோயை டாக்டர்கள் ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வருகின்றனராம்.
சாப்பிட ஏதாவது தராவிட்டால் தொடர்ந்து அழுது, அடம்பிடித்து, வயிற்றை நிரப்பிக் கொள்ளும் ஸ்ரீஜித் மூச்சுத்திணறலால் அடிக்கடி சிரமப்படுவதாகவும், சுயமாக உட்காரவோ, எழுந்து நிற்கவோ சிரமப்படுவதாகவும் குழந்தையின் தாயார் ருபாலி தெரிவித்துள்ளார்.
இதற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் தற்போது ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள இந்த குழந்தைக்கு பல்வேறு நோய்களுக்கான பக்கவிளைவுகளும் தோன்றி, உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment