இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் முன்னணி வீரர்

முஹம்மது ஷாஹித் மரணம்


இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் முன்னணி வீரர் முஹம்மது ஷாஹித் (56 வய து) மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.45 மணியளவில் மரணம் அடைந்ததாக அவரது மகன் முஹம்மது சைப் தெரிவித்துள்ளார்.
ஷாஹித், மஞ்சள் காமாலை மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் குர்கான் நகரில் உள்ள மெடென்ட்டா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவரது சிகிச்சை செலவுக்கு உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உள்ளிட்டோருக்கு பிரபல ஹாக்கி வீரரான தன்ராஜ் பிள்ளை வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக, தன்ராஜ் பிள்ளை வெளியிட்ட அறிக்கையில், ‘ஹாக்கியின் மூலம் இந்தியாவுக்கு உலக அரங்கில் பெருமை சேர்த்த ஷாஹித் போன்ற ஜாம்பவானின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சிகிச்சை செலவுக்கு இந்திய பிரதமர், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மற்றும் நாட்டிலுள்ள ஹாக்கி சங்கங்கள் தங்களால் இயன்ற உதவியை செய்ய முன்வர வேண்டும்என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஷாஹிதின் சிகிச்சை செலவுக்கு உடனடியாக பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத் துறை மந்திரி ஜிதேந்திரா சிங் அறிவித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முகமது ஷாஹித்தை கடந்த இரண்டாம் தேதி நேரில் சென்று பார்த்த ஜிதேந்திரா சிங், முகமது ஷாஹித்துக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. மேற்கொண்டு அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக ரூ.10 லட்சம் உடனடியாக வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், முஹம்மது ஷாஹித்(56)   உடலின் முக்கிய உறுப்புகள் ஒரேவேளையில் செயலிழந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக தெரிவித்துள்ள முஹம்மது சைப், அவரது சொந்த ஊரான வாரணாசியில் முஹம்மது ஷாஹிதின் உடல் அடக்கம் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். .

1980-ம் ஆண்டு மாஸ்கோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரரான முஹம்மது ஷாஹித் பங்கேற்ற இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. பின்னர், இவர் இடம்பெற்ற இந்திய அணி 1982-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாடுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 1986-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவரது தலைமையின்கீழ் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அந்நாட்டுக்கு பெருமை சேர்த்தது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top