பொத்தானைத் தட்டினால் உணவு!
இங்கிலாந்தில் வசிக்கும் 69 வயது பீட்டர் ப்ரெளனி காலை உணவு தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். பொத்தானை தட்டினால் ஒரு பக்கம் சூடான தேநீர் கோப்பைக்குள் விழுகிறது. இன்னொரு பக்கம் ஒரு கிரேன் மேஜையில் இருக்கும் முட்டையை எடுத்து, கொதிக்கும் நீரில் வேக வைக்கிறது. சரியான பதத்தில் வெந்த உடன் முட்டையை எடுத்து, தட்டில் வைக்கிறது. இன்னொரு கருவி பிரெட்டை நன்றாக வாட்டி, தட்டில் தள்ளுகிறது. மற்றொரு கருவி வெளியில் இருக்கும் செய்தித்தாளைக் கொண்டு வந்து மேஜையில் போடுகிறது. பிரெட், வேக வைத்த முட்டை, சூடான தேநீருடன் காலை உணவைச் சாப்பிட்டுக்கொண்டே செய்தித்தாளைப் படிக்க வேண்டியதுதான்.
“இப்படி ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. இதற்காக 1000 மணி நேரங்களைச் செலவு செய்து, உருவாக்கியிருக்கிறேன். 1968-ம் ஆண்டு வெளிவந்த‘சிட்டி சிட்டி பேங் பேங்’ என்ற திரைப்படம்தான் இந்தக் கருவியை உருவாக்கும் யோசனையைக் கொடுத்தது. நான் இந்தக் கருவியை என் வீட்டில் வைத்து, தினமும் பயன்படுத்தப் போவதில்லை. ஒரு இயந்திரத்தால் காலைச் சிற்றுண்டியைச் செய்து தர முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே இதை உருவாக்கியிருக்கிறேன். அதனால் விரைவில் ஓர் அருங்காட்சியகத்தில் இந்த இயந்திரத்தை வைத்துவிடப் போகிறேன். பொதுமக்கள் பார்த்துப் பயன்படுத்திக்கொள்ளட்டும்’’ என்று தெரிவித்துள்ளார் இதை உருவாக்கிய
பீட்டர் ப்ரெளனி.
0 comments:
Post a Comment