பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வர கோரிக்கை
விளம்பர தட்டிகளால் நாடு முழுவதும் பரபரப்பு


பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வருமாறு தளபதி ரஹீல் ஷெரீப்புக்கு கோரிக்கை விடுத்து நாடு முழுவதும் விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த நாள் முதல் இதுவரையில், பல்லாண்டு காலம் ராணுவ ஆட்சியின்கீழ்தான் இருந்திருக்கிறது. அங்கு முதன் முதலாக 1958–ம் ஆண்டு ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 1958–1971, 1977–1988, 1999–2008 ஆகிய கால கட்டங்களில் அங்கு ராணுவ ஆட்சிதான் நடைபெற்றது.
தற்போது அங்கு நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப்) கட்சி ஆட்சி நடக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை அமல்படுத்துமாறு ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப்புக்கு வேண்டுகோள் விடுக்கும் விளம்பர தட்டிகள், முக்கிய நகரங்கள் அனைத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
லாகூர், கராச்சி, பெஷாவர், குவெட்டா, ராவல்பிண்டி, பைசலாபாத் உள்ளிட்ட 13 முக்கிய நகரங்களில் இந்த விளம்பர தட்டி, ‘மூவ் ஆன் பாகிஸ்தான்கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளது. ராணுவ சோதனை சாவடிகளுக்கு மத்தியிலும், ராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளிலும்கூட இந்த விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி பாகிஸ்தான் ராணுவத்தின் .எஸ்.பி.ஆர். என்னும் பொது மக்கள் தகவல் தொடர்பு அமைப்பு அமைதி காக்கிறது.
இது தொடர்பாகமூவ் ஆன் பாகிஸ்தான்கட்சியின் மத்திய தலைமை அமைப்பாளர் அலி ஹாஷ்மி கூறியிருப்பதாவது:–
பாகிஸ்தானில் தொழில் நுட்ப வல்லுனர்களைக்கொண்டு ஒரு ஆட்சியை அமைத்து, ராணுவ சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் பிரசாரத்தின் முக்கிய நோக்கம். அந்த ஆட்சியை ஜெனரல் ரஹீல் ஷெரீப் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட வேண்டும்.
பாகிஸ்தானில் 40 நாட்களுக்கு மேல் பிரதமர் நவாஸ் ஷெரீப் இல்லாமல், ஒரு ஆட்சி நடந்தது. இது, அரசியல் சார்ந்த அரசு அவசியம் இல்லை என்பதையே காட்டுகிறது. அப்போது யார் இந்த நாட்டை வழிநடத்தினார்களோ அவர்களே வழிநடத்தட்டும்.எங்கள் கட்சியின் விளம்பர தட்டிகளை லாகூரிலும், பைசலாபாத்திலும் அகற்றி விட்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 ‘மூவ் ஆன் பாகிஸ்தான்கட்சி, பாகிஸ்தான் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி. பைசலாபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் முகமது கம்ரான் இதன் தலைவராக உள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம், இதே கட்சி சார்பில் ராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப் ஓய்வு பெறக்கூடாது என வலியுறுத்தி நாடு முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியும், பதாகைகளை வைத்தும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
தற்போதைய வீதிகளில் விளம்பரத்தட்டிகள் குறித்து பாகிஸ்தான் அரசியல் ஆய்வாளர் ரானா கருத்து தெரிவிக்கையில், ‘‘இந்த பிரசாரத்துக்கு பின்னால் யாரோ சில சக்திகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாகிஸ்தானில் டி.வி. ஷோக்களிலும், சமூக ஊடகங்களிலும் விரிவான விவாதங்களும் நடைபெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top