விரல் சூப்பும் பழக்கம்
குழந்தைகளுக்கு ஏன் வருகிறது?
குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை தடுப்பதற்காக இளம் தாய்மார்கள், குழந்தைகளின் விரல்களில் வேப்பிலை எண்ணெயை தடவுவார்கள். ஆனால் இவை எல்லாம் அவசியம் இல்லை என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். இதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு
45 நாட்களில் இருந்து, 2 மாதங்களுக்குள் விரல் சூப்பும் பழக்கம் ஆரம்பிக்கலாம். ஆரம்ப நிலையில் குழந்தைகள் ஒவ்வொன்றையும் புதியதாக தெரிந்துகொள்ள முற்படும் ஆர்வம் காரணமாகத்தான் விரலை சூப்பத் தொடங்குகின்றன. 6 மாதம் வரை விரல் சூப்புவது தப்பில்லை. அந்தக் காலங்களில், குழந்தையின் கையை தட்டிவிடுவது, விரல்களில் வேப்பிலை எண்ணெயை தடவி விரல் சூப்பும் பழக்கத்தைத் தடுப்பதெல்லாம் அவசியமே இல்லை.
இந்த அணுகுமுறைகளால், குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. குழந்தைகளிடம் அன்பாக பேசி, விரல் சூப்பும் பழக்கம் தவறானது எனப் புரிய வைத்து, அப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்ய வேண்டும்.
அம்மா, அப்பா தன்னுடன் இல்லை என்கின்றஅச்சம், அதனால் ஏற்படுகிற பாதுகாப்பின்மை உணர்வு, இன்னொரு குழந்தை பிறந்த பிறகு, தனக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை என்ற எண்ணம் போன்ற காரணங்களால், விரல் சூப்பும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
இதற்கும் பரம்பரைத்தன்மைக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. நடக்கப் பழகத் தொடங்கும் 9 மாதக் குழந்தைகளின் மூளை மற்றும் விரல்களுக்கு ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
பெற்றோர் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளுக்கு இரண்டரை வயது ஆகும் போதுதான், இப்பழக்கம் பற்றி அம்மா-அப்பா குழந்தையிடம் பேச வேண்டும். அவர்களிடம் நம்பிக்கை உண்டாக்கி, அவர்களுக்கே தெரியாமல் இப்பழக்கத்தை மாற்ற வேண்டும். பெற்றோர் தங்கள் மன அழுத்தத்தை குழந்தைகளிடம் வெளிப்படுத்தக் கூடாது.
3-4 வயது வரை சொல்லியும் புரியவில்லை என்றால், விரல் சூப்பும் பழக்கம் உடைய குழந்தைகளைக் கண்டிப்பாக உளவியல் நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அவர் குழந்தையின் வயது அடிப்படையில், எல்லா செயல்களையும் ஒழுங்காக செய்கிறதா என்று பரிசோதனை செய்வார். விரல் சூப்பும் பழக்கம் உடைய குழந்தைகளிடம் பள்ளிக்கூடத்தில் நடந்த விஷயங்கள் பற்றி பெற்றோர் பேச வேண்டும். 3 வயதுக்கு மேல் விரல் சூப்பும் பழக்கத்தை வளரவிட்டால் குழந்தைகள் இப்பழக்கத்துக்கு நிரந்தரமாக அடிமையாகிவிடுவார்கள்.
விரல் சூப்பும் பழக்கம் உடைய குழந்தைகளுக்கு முன்வரிசை பல் (Incisor teeth) முறையாக வளராது. அவற்றின் வடிவம் சரியாக இருக்காது. முன்னும் பின்னுமாக மாறி மாறி வளரும். விரல்கள் சுத்தமாக இருக்காது. அவற்றை வாயில் வைக்கும்போது, கிருமிகள் வயிற்றினுள் போகும். இதன் காரணமாக, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தொற்றுநோய் வரலாம். எனவே, இப்பழக்கம் உடைய குழந்தைகளின் மனதை பெற்றோர் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
0 comments:
Post a Comment