துருக்கியில் ராணுவப் புரட்சி
ஆட்சியை கைபற்றியதாக ராணுவம் அறிவிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒரே முஸ்லிம் நாடான துருக்கியில் சற்று முன்னர் ராணுவப் புரட்சியொன்று வெடித்துள்ளது.
துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. ஆட்சி அதிகாரத்தை கைபற்றியதாகவும், ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வீரர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் ராணுவம் மேலும் அறிவித்துள்ளது.
முக்கிய பாலங்களான போஸ்பரஸ், சுல்தான் முகம்மது ஆகிய பாலங்கள் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடம் டாங்கிகள் மூலம் தாக்கப்பட்டதாகவும், இஸ்தான்புல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையின் தலைமையகம் ராணுவ ஹெலிகாப்டர்களால் தாக்கப்பட்டதாவும், இஸ்தான்புல்லில் கூட்டத்தினரை நோக்கி ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை,ராணுவ நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என துருக்கி பிரதமர் பினாலி யிஸ்டிரிம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியில் நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
துருக்கி தலைநகர் அங்காராவில் துப்பாக்கி சூடு நடப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்காராவில் ஊரடங்கு சட்டம் அமலுக்கு வந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது. அங்காராவில் ராணுவ வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

இஸ்தான்புல்லிலுள்ள அததுர்க் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. துருக்கியின் முக்கிய விமான நிலையங்களின் வாயிலில் ராணுவ டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே துருக்கிய பிரதமர் இல்ட்ரிம் ராணுவ சதிப்புரட்சி குறித்த தகவல்களை மறுத்துள்ளார்.
பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ரஜப் தையிப் அர்துகானின் தலைமையிலான ஆட்சி தொடர்வதாகவும், பொதுமக்களால் மட்டுமே தமது அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதனை ராணுவ சதிப்புரட்சி என்று குறிப்பிட முடியாது என்றும், ராணுவத்தின் ஒருசிலர் மேற்கொண்டுள்ள சட்டவிரோத நடவடிக்கையே இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கியில் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
துருக்கியில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, தன் நாட்டின் எல்லைகளுக்கு ஈரான் சீல் வைத்துள்ளது.
இதேவேளை,துருக்கி நிலவரம் குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன்அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளார்.
துருக்கி நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள இங்கிலாந்து வெளியுறவுத்துறை, துருக்கியில் தங்கியுள்ள இங்கிலாந்து நாட்டவர் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் அங்காராவில் சிறப்பு காவல்படையின் தலைமையகம் மீது ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் நடத்திய தாக்குதலில் துருக்கி அதிகாரிகள் 17 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சதிப்புரட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள ராணுவத் தரப்பினர், நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை வென்றெடுக்கும் நோக்கில் தமது நடவடிக்கை அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தலைநகர் எங்கும் ராணுவத்தினர் மற்றும் தாங்கிகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதுடன், ராணுவத் தலைமை மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸ்கள் விரைந்த வண்ணம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top