வாழ்க்கையோடு நான் பட்ட கஷ்டங்களும், அந்த அனுபவங்கள் தந்த பாடங்களுமே 
இந்த ஷாருக்கானை உருவாக்கியிருக்கிறது
தங்கத் தொட்டியில் குளிக்கும் ஷாருக்கான்


துறுதுறுப்பான அந்த சிறுவனுக்கு தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசை. தனது தந்தையிடம் அடம்பிடித்தான். அவரும், தியேட்டருக்கு அழைத்து சென்றார்டிக்கெட் வாங்க கியூவில் காத்திருந்தபோது மகனிடம், ‘இந்த சினிமாவைவிட அற்புதமான காட்சிகள் இடம்பெறும் நிகழ்ச்சி ஒன்றுக்கு உன்னை அழைத்து செல்லட்டுமா?’ என்று ஆசை காட்டியிருக்கிறார்.
சிறுவனும் சரி என்று சொல்ல, அவனை டெல்லியின் பரபரப்பான சாலை ஓரத்தில் கொண்டு போய் அமர்த்திவிட்டு வாகனப் போக்குவரத்து, பாதசாரிகள், சாலை ஓர காட்சிகளை எல்லாம் சுட்டிக்காட்டி, அதற்கு விளக்கமும் கொடுத்து சிறுவனை உற்சாகப்படுத்தி, வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.
வீட்டிற்கு சென்றதும் சினிமா பார்க்காமல் சாலை ஓர காட்சிகளை பார்த்ததை அம்மாவிடம் அவன் சொல்லவும், ‘உன் அப்பாவிடம் சினிமாவுக்கு டிக்கெட் வாங்க பணம் இல்லை. அதனால்தான் உன்னை அழைத்துச்சென்று சாலை ஓர காட்சிகளை பார்க்கவைத்துவிட்டார்என்ற உண்மையை போட்டு உடைக்கவும், அந்த சிறுவன் மனதில் சினிமாவை பற்றிய ஏக்கம் உருவாகிவிட்டது. அதுவே அவனுக்குள் ஆசை தீப்பொறியை பற்றவைத்துவிட்டது. அந்த சிறுவன்தான் இந்திய சினிமா ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும்கிங் கான்என்று அழைக்கப்படும் ஷாருக்கான்.
மும்பையில் இருக்கும் ஷாருக்கானின் மிகப்பெரிய பல மாடி பங்களாவில் சினிமா பார்ப்பதற்கென்றே தனியாக ஒரு மினி தியேட்டர் உள்ளது. பணம் இல்லாததால் தன்னால் தியேட்டரின் உள்ளே சிறுவயதில் செல்ல முடியவில்லை என்ற பாதிப்பு இப்போதும் ஷாருக்கான் மனதில் இருக்கிறது. டெல்லியில் ஏழ்மையோடு போராடிய வாழ்க்கையின் இருண்ட பக்கங்களை அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார். அதுதான் தனது வெற்றிக்கு அடிப்படையாக இருந்ததாகவும் அவர் வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார்.
நான் பணத்தையும், புகழையும் அடையவேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்போது என் பாத்ரூமில் தங்கத்தில் செய்யப்பட்ட தொட்டி இருக்கிறது. நான்கிங்என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம்என்கிறார்.
இவர் தனக்கிருக்கும் புகழை ஒரு சுமையாக கருதுவதில்லை. “எல்லோருக்கும் என்னை தெரிவதால், எனது தனிமை பாதிக்கப்படுவதாக நான் நினைப்பதில்லை. பணமும், புகழும் எப்போதும் என்னோடு இருக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். எல்லோருக்கும் நான் தெரிந்தவனாக இருப்பதுதான் எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது.
வாழ்க்கையோடு நான் பட்ட கஷ்டங்களும், அந்த அனுபவங்கள் தந்த பாடங்களுமே இந்த ஷாருக்கானை உருவாக்கியிருக்கிறதுநான் சந்தித்த இன்னல்கள் ஒவ்வொன்றும் நான் மிகப்பெரிய உயரத்தை அடைய ஒத்துழைத்தது. அதனால் அப்படிப்பட்ட ஒரு காலம் என் வாழ்க்கையில் இருந்ததை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன்.
பாஸிகர்சினிமா ரிலீஸ் ஆன பின்பு நான் நியூயார்க் சென்றிருந்தேன். அங்கு விலை உயர்ந்த கைகடிகாரம் ஒன்றை பார்த்தேன். அந்த வாட்சை வாங்க, என்னிடம் ஐம்பது டாலர் குறைவாக இருந்தது. அங்கிருந்த விற்பனை பணியாளர் நல்ல இந்தியர். ‘நீங்கள் சினிமா நடிகர். பணத்தை ஒரு பொருட்டாக நினைக்காதீர்கள். இதை வாங்கி அணிந்துகொள்ளுங்கள்என்று கூறி, என்னிடம் இருந்த பணத்தை வாங்கிக்கொண்டு அந்த வாட்சை கொடுத்தார். அதுதான் நான் முதன்முதலில் வாங்கிய பிராண்ட்டட் வாட்ச். டாக் என்பது அதன் பெயர். அந்த வாட்ச் இப்போதும் என் கையில் இருக்கிறது. எதிர்காலத்தில் அதை என் மகன் ஆர்யனுக்கு கொடுக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்என்கிறார். இதில் பெரிய திருப்பம் என்னவென்றால், இப்போது அந்த கடிகார நிறுவனத்தின் விளம்பர தூதரே ஷாருக்கான்தான்.

இவரிடம் இருந்த சினிமா வெறிக்கு ஒரு எடுத்துக்காட்டு:

பள்ளிப் பருவத்தில் ஷாருக்குக்கு இந்தி மொழியை புரிந்துகொண்டு எழுதி மதிப்பெண் வாங்குவது சிரமமான காரியமாக இருந்தது. நூறுக்கு மூன்று மார்க்தான் வாங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு நாள் அம்மா, ‘இந்தி பாடத்தில் நீ முழு மதிப்பெண் வாங்கினால் உன்னை இந்தி சினிமாவுக்கு அழைத்து செல்வேன்என்றிருக்கிறார்.
சினிமா பார்க்கவேண்டும் என்ற ஆசையில் இரவு பகல் பாராமல் இந்தியை படித்து, நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறார். அதுதான் அவர் முதன் முதலில் சினிமா பார்க்க காரணமாக இருந்திருக்கிறது. “நான் இந்தி மீதும், இந்தி சினிமா மீதும் பெரும் ஆர்வம் கொள்ள அந்த சம்பவம்தான் காரணமாக இருந்ததுஎன்கிறார், ஷாருக்.
நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் வாய்ப்பு கிடைத்த எல்லா படங்களிலும் நடித்தேன். அதற்கு காரணம் பணம்தான். பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுவிடக்கூடாதே என்பதற்காக கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டேன். அதில் சில படங்கள் மற்ற நடிகர்கள் வேண்டாம் என்று நிராகரித்ததாகும். பாஸிகர் படத்தில் நடிக்க சல்மான்கான் மறுத்தார். ‘டர்படம் அமீர்கான் நிராகரித்ததால் எனக்கு கிடைத்தது. அப்போது நான் கதாபாத்திரம் என்னவென்று விசாரிக்கவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று தான் கருதினேன். வேலையில்லாமல் சும்மா இருந்துவிடக்கூடாதே என்பதற்காக நடித்தேன். அதிர்ஷ்டவசமாக அந்த படங்கள்கூட வெற்றிபெற்றுவிட்டன.
நான் சிறுவயதில் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டதால் ஏழ்மையை நினைத்தால் எனக்கு பயம் வந்துவிடும். ஏழ்மையை வாழ்க்கையின் தோல்வியாக நான் கருதினேன். ஏழ்மை பயம், கவலை, நெருக்கடியை உருவாக்குகிறது. அவைகளுக்குள் என் பெற்றோர் அகப்பட்டதை நான் உணர்ந்திருக்கிறேன்என்கிறார்.
ஷாருக்கின் தந்தை மிர் தாஜ் முகமது வக்கீல். தாயார் பாத்திமா மாஜிஸ்திரேட்.
உலகத்திலேயே தோல்வியில் முதலிடத்தை பிடித்தவராக என் தந்தை இருந்திருப்பார். ஆனாலும் நான் அவரை மதிக்கிறேன். வாழ்க்கையில் பல்வேறு பாடங்களை எனக்கு கற்றுத்தந்த ஜென்டில்மென் அவர். ஆனாலும் என் தந்தையைப் போல் வாழ்க்கையில் தோல்வி அடைய நான் விரும்பவில்லை. பொய் சொல்லாததால் அவரால் தனது தொழிலில் வெற்றிபெற முடியவில்லை. அவரது லட்சியம், சிந்தனைகள் போன்றவை என்னிடமும் உண்டு. ஆனால் நல்ல உணவு, நல்ல கார், நல்ல வீடு ஆகியவை என் ஆசையாக இருந்தது. பணம் இல்லாதவனாக நான் இருந்ததால் பணக்காரனாக ஆசைப்பட்டேன்.
எனது தந்தை புற்றுநோயால் இறந்தார். கடைசி காலத்தில் அவரால் பேச முடியவில்லை. அவர் இறந்தபோது டிரைவர் இல்லை. அப்போது எனக்கு பதினைந்து வயது. நானே காரை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். அம்மா என்னிடம், ‘எப்போது நீ டிரைவிங் படித்தாய்?’ என்று கேட்டார். நான் இன்றுதான் என்று கூறினேன். உண்மையை சொன்னால் நான் அன்றுதான் முதல் முறையாக கார் ஓட்டினேன்.
எனது மூத்த சகோதரி ஷகானாஸ்க்கு தந்தையை ரொம்ப பிடிக்கும். கல்லூரிக்கு சென்றிருந்த அவளிடம் தந்தை இறந்ததை கூறவில்லை. வந்தவள், அசைவற்ற உடலை பார்த்துவிட்டு நினைவிழந்து விழுந்தாள்இரண்டு வருடங்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து அவள் மீளவில்லை. ஒருமுறைஇனி அவள் பிழைக்கமாட்டாள்என்று இங்குள்ள டாக்டர்கள் கூறினார்கள். நான் சுவிட்சர்லாந்து கொண்டு சென்று உயிரைமீட்டேன். என் குழந்தைகள் என் மீதும், அவர்களது அம்மா கவுரி மீதும் செலுத்தும் அன்பைவிட அதிக அன்பை ஷகானாஸ் மீது செலுத்துகிறார்கள்..” என்கிறார்.
டெல்லி நகரத்தின்  மீது ஷாருக்குக்கு தனி பாசம் இருக்கிறது.
நான் பிறந்த நகரம் டெல்லி. என் சிறுவயது பருவம் அங்குதான் கழிந்தது. டெல்லிக்கு என் பிள்ளைகளோடு செல்லும்போது, நான் வளர்ந்த இடத்தை எல்லாம் அவர்களுக்கு காட்டுவது வழக்கம். பாலங்கள் நிறைந்த நகரமாக டெல்லி மாறிவிட்டாலும், நான் இப்போதும் வழி தப்பாமல் டெல்லியில் கார் ஓட்டுவேன். அந்த அளவுக்கு ஒவ்வொரு தெருவும் எனக்கு அத்துப்படி.
ஒரு தந்தையின் நெருக்கமான நண்பர்கள் அவர்களது பிள்ளைகள்தான் என்பது என் நம்பிக்கை. நான் எதற்கும் நாணம் கொள்ளாமல் எல்லா விஷயத்தையும் என் குழந்தைகளிடம் சொல்வேன். அப்ராம், சுஹானா, ஆர்யன் மூன்று பேரும் குழந்தைகளாக கிடைத்தது என் அதிர்ஷ்டம்.
எனக்கு 48 வயது முழுமையடைந்துவிட்டது. என் வயதில் பாதி கொண்ட கதாநாயகிகளோடு நான் டூயட் பாடி என் வாழ்க்கையை அனுபவிக்கிறேன். சண்டைக்காட்சிகளில் கட்டிடங்களின் மேல் நின்று குதிக்கவும் நான் விரும்புகிறேன். ரசிகர்கள் என்னை விரும்பும் காலம் வரை அதை எல்லாம் செய்துகொண்டிருப்பேன்..” என்று உற்சாகமாக சொல்கிறார், ஷாருக்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top