கல்முனை பிரதேச செயலாளா் நியமனம்

மக்கள் பீதியடையத் தேவையில்லை.

உடன் நடவடிக்கை எடுக்கப்படும்

.-  எச்.எம்.எம்.ஹரீஸ்

கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திற்கு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டமையையிட்டு பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை. அதனை இலகுவாக தீர்த்துக் கொள்ளும் சக்தி எம்மிடம் உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்திற்கு மகாஓயா பிரதேச செயலாளர் மொகான் விக்ரம ஆராட்சியை நியமித்தது தொடர்பில் எங்களுடன் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கலந்தாலோசிக்காமல் செய்துள்ளது. இவ்விடயம் குறித்து கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் என்ற ரீதியில் நடவடிக்கை எடுத்துள்ளேன்.
கல்முனை பிரதேசம் நூறு வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசமாகும். இப்பிரதேச நிர்வாகக் கடமையினை பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரினால் மேற்கொள்ள முடியாது. இந்நியமனம் குறித்து மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
இந்நியமனம் அண்மையில் கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல் சம்பந்தமாக தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடலினை தொடர்ந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. எது எவ்வாறாயினும் மக்களின் விருப்பத்திற்கு முரணாக அரசாங்கம் செயற்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை. நான் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்கென்று ஒரு தார்மீகப் பொறுப்பு இப்பிரதேச அபிவிருத்தியிலும் சரி, ஏனைய மக்கள் நலன்சார்ந்த விடயங்களிலும் சரி இருக்கின்றது. இதில் ஒருபோதும் பின்னிற்கமாட்டேன்.
இவ்விடயம் பற்றி நானும் கட்சி தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் நேற்று விரிவாக கலந்தாலோசித்துள்ளோம்.
இவை சம்பந்தமாக நாளை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசவுள்ளோம். மேலும் இவ்விடயம் குறித்து ஜனாதிபதி கவனத்திற்கும் கொண்டு செல்லவுள்ளோம்.
முஸ்லிம் காங்கிரஸூக்கு தற்போதுள்ள பேரம் பேசும் சக்தியை கொண்டு இதனை இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும். இந்நியமனத்தினை வைத்து சிலர் மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை கூறி அரசியல் செய்ய முற்படுகின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் எனத் தெரிவித்திருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top