அமைச்சர் அதாவுல்லாஹ்வை ஆதரிக்கும் கல்விப் பணிப்பாளர் நிஸாமின்

கருத்துகள் குறித்து ஒரு பார்வை

-.எச்.சித்தீக் காரியப்பர்

கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குகின்ற தகுதி அமைச்சர் அதாஉல்லாவுக்கு மாத்திரமே உள்ளது. இந்த பொறுப்பை அவர் தட்டிக்கழிக்கக் கூடாது. அவர் இதனை ஏற்கும் போது நாங்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம். ரி. . நிஸாம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கும் தகுதி அமைச்சர் அதாஉல்லாவுக்கு மாத்திரமே இருக்கின்றது. இன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் இருப்பு, பாதுகாப்பு போன்றன கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களுக்கு இவ்வாறு அச்சுறுத்தல்கள் ஏற்படும் போது, மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் அமைச்சர் அதாஉல்லா ஆக்ரோசமாக அவற்றை சுட்டிக்காட்டி தீர்வினை பெற்றுக்கொள்வதனை நாம் நேரடியாகக் கண்டுள்ளோம்,
முஸ்லிம்களுக்கு ஒரு கட்சி இருந்த நிலைமாறி இன்று பல கட்சிகள் எம்மிடையே உள்ளன. நமது ஒற்றுமை இவ்வாறு சிதைக்கப்பட்டதனால்தான் நாம் பலவீனப்பட்டுள்ளோம். கிழக்கு மாகாணத்தில் பல இன்னல்களை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அங்கு ஒரு நிர்வாகம் இருக்கின்றதேயன்றி, அதனால் முழுமையாக நன்மையடைந்து விட முடியாதுள்ளது என்றெல்லாம் நிஸாம் கூறியுள்ளார்.
ஒருவரை ஆதரிப்பதும் இன்னொருவரை நிராகரிப்பதும் அவரது ஜனநாயக உரிமை. இந்த அடிப்படையில் அவரை எவரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது.

அதேவேளை, கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குகின்ற தகுதி அமைச்சர் அதாஉல்லாவுக்கு மாத்திரமே உள்ளது என்ற அவரது நிலைப்பாடு தொடர்பிலும் நான் எதனையும் கூற முடியாது. அவரது கருத்துச் சுதந்திரம், அரசியல் நிலைப்பாடு குறித்து விமர்சிக்க முடியாது. அவருக்குப் பட்டதை அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் தங்கியிருந்த போதே நிஸாம் தனது நிலைப்பாட்டை இவ்வாறு பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அது ஒரு துணிச்சல்தான்.
அதுவும் தனது சகோதரனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளருமான ஹஸன் அலி எம்.பி அவர்களும் நிந்தவூரில் தங்கியிருந்த போது நிந்தவூரில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறானதொரு அசட்டுத் துணிச்சலுடன் கூறியிருப்பது நிஸாமின் இன்னொரு பலத்த பாய்ச்சலான விடயமே.
கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்குத் தலைமை தாங்குகின்ற தகுதி அமைச்சர் அதாஉல்லாவுக்கு மாத்திரமே உள்ளது என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும் கூறி இந்த விடயத்தை விவாதத்துக்கு உட்படுத்தாதவாறு நிஸாம் கடிவாளமும் போட்டு விட்டார்.
எது எப்படியிருப்பினும் நிஸாமின் இந்தக் கருத்தை மையமாக வைத்தே அவரது கல்விப் பணிப்பாளர் பணியுடன் கூடியதான அதிகாரங்கள், கடமைகள், செயற்பாடுகளை எதிர்காலத்தில் நோக்க வேண்டியதொரு நிலைமை கிழக்கு மாகாணத்தின் கல்வியுடன் தொடர்புடைய அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என்ற வகையில் அவரால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயற்பாடுகளும் எவ்வாறு அமையுமென்பது தொடர்பில் அவரது நகர்வுகள் கண்காணிக்கப்படும் என்ற ஒரு விடயத்தை இங்கு தெரிவிக்க வேண்டியுள்ளது. அவர் தனது கடமைகளை பொறுப்புடன் நியாயத்தின்பால் முன்னெடுப்பாரா என்ற கேள்வி எழுவதுடன் அவரால் ஒப்பமிடப்படும் ஒவ்வொரு கோப்புகளையும் அரசியல் கலப்புக் கொண்டனவா என்ற பரிசோதனைகளையும் செய்ய வேண்டியதொரு நிலைமை கிழக்கு மாகாண கல்விச் சமூகத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் அவர் ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற வகையில் தனது அரசியல் நிலைப்பாட்டினை பகிரங்கமாகக் கூறாமல் வேறு வழிகளில் வெளியிட்டிருக்கலாம் என்பதே எனது தாழ்மையான கருத்து.
பகிங்ரகமாக தெரிவிக்கப்பட்டுள்ள இந்தக் கருத்தானது எதிர்காலத்தில் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தும் என்ற அச்சம் என்னுள் எழுந்துள்ளது. அத்துடன் ஏதோ ஒரு வகையில் கிழக்கு மாகாண கல்விச் சமூகத்துக்கு விசேடமாக, முஸ்லிம் கல்விச் சமூகத்துக்கு நிஸாமின் இந்தக் கருத்தானது மன உலைச்சலை ஏற்படுத்தலாமென்றும் நான் கவலை கொள்கிறேன்.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாமும் நானும் சின்ன வயதிலிருந்தே நண்பர்கள். 1980 களில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவையில் கவியரங்குகளில் இருவரும் ஒன்றாகவே பங்கு பற்றுவோம். அவர் இனிமயாக குரல் வளத்தைக் கொண்டவர் என்ற குறிப்பினையும் இங்கு பதிவிட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top