தேர்தலில் போட்டியிட்டு புதிய அரசை அமைப்போம்

- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு புதிய அரசை அமைப்போம் இதை எவராலும் தடுக்கமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸ தெரிவித்துள்ளார்.   
இன்று மெதமுலனவில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   
அவர் மேலும் தெரிக்குகையில்,தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர். அவர்களது விருப்பத்தை நான் புறக்கணிக்க மாட்டேன். அதற்கான உரிமை எனக்கு இல்லை. எனவே நாட்டையும் கட்சியையும் பாதுகாக்க அனைத்து மக்களும் 2015இல் எம்மோடு கைகோர்க்குமாறு அழைப்பு விடுக்கிறேன்.    அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு எங்களோடு இணைத்து கொள்ள வேண்டும்.
எமது ஆட்சி காலத்தில் குரோதம், பழிவாங்கல் போன்றவை குப்பையில் போடப்பட்ட நிலையில் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதனை மீண்டும் எடுத்து செயற்படுத்தி வருகிறது.   ஐக்கிய தேசியக் கட்சி 1989, 1990 காலத்தில் செய்த அநியாயங்களை மறக்க முடியாது. புலிகள் அமைப்புடன் 11 வருடங்களுக்கு முன்னர் செய்து கொண்ட நாட்டை காட்டிக் கொடுக்கும் ஒப்பந்தத்தை மறக்க முடியாது.    ஜனவரி 9ஆம் திகதி மக்கள் ஆணையை மதித்து நான் விலகிச் சென்ற விதம் இலங்கை அரசியல் வரலாற்றுக்கு ஒரு முன் உதாரணம். இதை சர்வதேச நாடுகளும் கண்டு அதிர்ச்சி அடைந்தன.
எனது ஆட்சி காலத்தில் விமான நிலைய  துறைமுக திறப்பு, அதிவேக வீதி திறப்பு என அபிவிருத்தி செய்திகளுக்கு பஞ்சமிருக்கவில்லை.    ஆனால் தற்போதைய அரசு தனது திட்டங்களை பாதை மாற்றி திறந்து வைக்கிறது. எனது ஆட்சி காலத்தில் நடந்த அபிவிருத்தியை பார்த்து இலங்கை மக்கள் பெருமை கொண்டனர். வெளிநாடு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்தனர்.    கொழும்பு நகர் துரித அபிவிருத்தி நகராக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய அரசு அனைத்தையும் தங்கள் திட்டம் என கூற முனைகிறது.
எனவே இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பு அபிவிருத்தியை மையமாக வைத்து தமிழ், சிங்கள, முஸ்லிம், பறங்கியர், மலே ஆகிய அனைத்து இன மக்களும் ஓர் இனமாகச் சேர்ந்து நாட்டை கட்டியெழுப்ப நாட்டின் தேசியக் கொடியை தலைநிமிரச் செய்ய எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன். அதற்கு அனைவரும் எங்கள் அணியுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top