சாய்ந்தமருது
உள்ளூராட்சி மன்ற விவகாரம்
அமைச்சர் ஹக்கீம் அவர்களோடு மீண்டும்
ஒரு சந்தர்ப்பம்
பள்ளிவாசலில் தீர்மானம்!
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஏற்படுத்துவது
தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்
அவர்களை இறுதியாக ஒரு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என சாய்ந்தமருது
ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இன்று நடைபெற்ற முக்கிய கூட்டம் ஒன்றில்
தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற முன்னெடுப்பு மந்த கதியில்
இடம்பெறுவது தொடர்பில் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம், சாய்ந்தமருது நலன்புரி அமையம் என்பவற்றின் பிரதிநிதிகள் இன்று 2ஆம் திகதி
வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரை சந்தித்து
நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இதற்கான இணக்கம் எட்டப்பட்டு முத்தரப்பினரும்
இணைந்து மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர்
சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்கள் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்ற
போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை வர்த்தமானிப்
பிரகடனம் செய்யும் வகையில் நடவடிக்கையை துரிதப்படுத்துவது தொடர்பில் நீண்ட நேரமாக
இக்கூட்ட்த்தில் ஆராயப்பட்டு, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.
இதன் பொருட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்
அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை அடுத்த ஒரு சில தினங்களுக்குள் சாய்ந்தமருது
பெரிய பள்ளிவாசலுக்கு வரவழைத்து பேசுவது எனவும் அதில் சாய்ந்தமருதை
பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு உறுப்பினர்களையும் பங்கேற்க
அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்ட்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை தேர்தலுக்கு
பின்னர் நிறைவேற்றித் தருகின்றோம் என்று தரப்படும் வாக்குறுதிகளை ஏற்றுக்
கொள்வதில்லை எனவும் ஏற்கனவே அமைச்சர்களான கரு ஜெயசூரிய, ரவூப் ஹக்கீம் ஆகியோர் உத்தரவாதம் அளித்தபடி
தேர்தலுக்கு முன்னர் வர்த்தமானிப் பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்ற
நிலைப்பாட்டில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு இணங்குவதில்லை எனவும் இக்கூட்டத்தில்
வலியுறுத்தப்பட்ட்தாகவும் கூறப்படுகின்றது.
அமைச்சர் ரவூப் ஹக்கீமுடனான சந்திப்பின் பின்னர் சாய்ந்தமருது
பெரிய பள்ளிவாசல் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து ஊடக மாநாடு ஒன்றை நடத்துவது
எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு
முன்னர் சாதகமாகா விட்டால் இத்தேர்தல் தொடர்பில் பெரிய பள்ளிவாசல் மற்றும் பொது
அமைப்புகள் இணைந்து மாற்றுத் தீர்மானங்களை மேற்கொள்வது எனவும் இக்கூட்டத்தில்
வலியுறுத்தப்பட்ட்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடியை போன்று நாமும் ஹக்கீமை விரட்டுவோம் - சாய்ந்தமருது மக்கள்
ReplyDeleteஎங்களை கால காலமாக ஹக்கீம் ஏமாத்தி வருகின்றமையினாலும் ஹக்கீமின் வார்த்தைகளில் உண்மை தன்மை இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் .
இதனால் வருகின்ற தேர்தலில் ஹக்கீமிற்கு சரியான பாடம் கற்பிக்க உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.