ஜெமீலை கட்சியை விட்டு புறம் தள்ளுவதா?

உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை நிறைவேற்றி

கட்சியையும் ஜெமீலையும் காப்பாற்றுவதா?

முடிவு எடுக்க வேண்டியது கட்சித் தலைமையின் பொறுப்பு




கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளரும் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் 2006 ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதிலிருந்து நேரடி அரசியலில் இறங்கி, அதனை தொடர்ந்து 2008ஆம் ஆண்டு முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி, பின்னர் 2012 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் போட்டியிட்டு அதிலும் வெற்றியடைந்து சுமார் 10 வருடங்களாக கட்சிக்காகவும் கட்சித் தலையின் நலனுக்காகவும் முழுநேர அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ளதை கட்சித் தலைவர் மற்றும் கட்சிப் போராளிகள் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
இருந்த போதிலும் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய வகையில் ஏ.எம்.ஜெமீலுக்கு அதிகாரம் எதுவும் சரியாக வழங்கப்படாமல் தலைவரால் தகுந்த பதவிகள் தருவதாக பலமுறை வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கின்றார் என்பது அவர் பிறந்த ஊரிலுள்ள கட்சிப் போராளிகளுக்கும் அவரை நம்பி வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்களுக்கும் நன்கு தெரியும்.
மாகாண அமைச்சர் பதவி வழங்குவதிலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு இவர் இருமுறை ஏமாற்றப்பட்ட விடயமும் கட்சிப் போராளிகள் மறந்து விடவில்லை. அமைச்சுப் பதவியை பொறுப்பேற்க காலையில் ஆயத்தமாக வருமாறு தலைமையால் அழைப்பு விடுக்கப்பட்டு ஜெமீல் ஆயத்தமாக கட்சிப் போராளிகள் சிலரோடு சென்றபோது  கட்சித் தலைமையால் வாக்குறுதி மீறப்பட்டு ஏமாற்றப்பட்டார். இதனால் அவர் அவமானம் அடைந்ததாகவும் மிகுந்த கவலை கொண்டதாகவும் அச்சம்பவம் கட்சிப் போராளிகளால் அன்று கவலையுடன் பார்க்கப்பட்டது.
இப்படியெல்லாம் ஏமாற்றப்பட்ட போதிலும் இறுதியாக கட்சிக்கு ஒரு போதும் துரோகம் செய்யாத செய்யத் துணியாத ஜெமீலுக்கு முதலமைச்சர் பதவியைத் தருவதாக வாக்குறுதி அளித்து மாகாண அமைச்சர்களின் செயலாளர்களை நியமிப்பதற்கு எனக்கே அந்த உரிமையை வழங்கிவிடல் வேண்டும் என்று ஜெமீலிடம் கேட்ட கட்சித் தலைமை திடீரென பல்டி அடித்து கட்சியின் சின்னத்தை தடை செய்து கட்சிக்கு துரோகம் செய்த நபருக்கு அப்பதவியை வழங்க முன் வந்தது எந்த வகையில் நியாயமான செயல்பாடு என நடுநிலைவாதிகளால் கட்சித் தலைமையிடம் கேள்வி எழுப்பப்படுகின்றது.
இப்படியாக பல கழுத்தறுப்புக்களும், ஏமாற்றங்களும் இடம்பெற்றுள்ள நிலையிலும் கட்சிக்காக முழுநேர அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ள ஜெமீல் அந்த நேரங்களில் கட்சிக்கு துரோகம் செய்யாமல் தற்போது ஏன் அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு மக்காவில் இருந்து கடிதம் எழுத வேண்டும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடன் இணைந்து முஸ்லிம் சமூகத்திற்காக தென் கிழக்கு பல்கலைக் கழகத்தை உருவாக்கியது போன்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் மூலம் அவரது சொந்த ஊரான சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை ஏற்படுத்தலாம் என்ற கனவுடன் இருந்து வந்த அவருக்கு இன்று ஏனோ ஏமாற்றம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் இவர் கட்சிக்காக மக்களை புறக்கணிப்பதா அல்லது மக்களுக்காக கட்சியை உதறித் தள்ளுவதா? என்று தீர்மானிக்குமாறு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் அவருக்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்கள் பேரினவாத சக்திகளினால் அச்சுறுத்தப்பட்டு நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட போது  ஜெமீலினுடன் சவூதி அரேபியா உட்பட அரபு நாடுகளுக்கு  சென்று இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மற்றும் சில அரபு அமைப்புகளையும் சந்தித்து இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை ஓரளவு உறுதிப்படுத்துவதற்கு முன்வந்த  அமைச்சர் ஹக்கீம் அவர்கள் இன்று  ஜெமீலின் நியாயமான வேண்டுகோள் ஒன்றை நிறைவேற்ற பின் தள்ளியிருப்பது ஜெமீலுக்கும் அந்த ஊர் கட்சிப் போராளிகளுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தத்தான் செய்யும்.
பல கழுத்தறுப்புக்களும், ஏமாற்றங்களும் இடம்பெற்றுள்ள நிலையிலும் கட்சிக்காகவும் கட்சித் தலைமையின் நலனுக்காகவும் முழுநேர அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்துள்ள ஏ.எம்.ஜெமீலை கட்சியை விட்டு புறம் தள்ளுவதா? இல்லை கட்சிக்காக வாக்களித்த மக்கள் கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும்  சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்து அந்த ஊர் மக்களின் எதிர்ப்பிலிருந்து ஜெமீலையும் கட்சியையும் காப்பாற்றுவதா?
இதற்கான சரியான முடிவை எடுக்க வேண்டியது கட்சித் தலைமையின் பொறுப்பாகும்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top