அமானிதத்தை ஏற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

வேட்பாளர்கள் தெரிவில் மக்கள் விருப்பத்திற்கு மாறாக

புளித்துப் போன தயிரை மக்களிடம் கொடுப்பதற்கு

முடிவு எடுக்கக்கூடாது


-புத்திஜீவிகளும் கட்சிப் போராளிகளும் வேண்டுகோள்


நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளாகப் போட்டியிடுவதற்கு  முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மக்களுக்கு முழு நேரமும் சேவை செய்யக்கூடிய சுறுசுறுப்பானவர்களாகவும், கல்வித்திறன், சமார்த்தியம், நாகரிகம் என்பன போன்ற சாதுரியம் கொண்டிருப்பதை கட்சித் தலைமைத்துவம் கண்டிப்பாக கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும் என சமூகத்திலுள்ள புத்திஜீவிகளும் கட்சிப் போராளிகளும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கட்சித் தலைமைத்துவத்தின் தெரிவும் முடிவும் இதுதான் எனக் கூறி புளித்துப் போன தயிரை மக்களுக்கு கொடுப்பதற்கு தலைமைத்துவம் முன் வரக் கூடாது எனவும் இவர்களால் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
கட்சித் தலைமைத்துவம் தனக்கு கிடைத்திருக்கும் தலைமைத்துவப் பதவியை ஜனநாயக அடிப்படையில் அமானிதமாகக் கருதி சகல நடவடிக்கைகளிலும் செயல்படுத்திக் காட்டல் வேண்டும் எனவும்  இவர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அமானிதத்தைப் பொறுப்பெடுத்திருக்கும் தலைமைத்துவம் மக்களுக்காக சேவை செய்ய முன்வருபவர்களை மக்கள் முன் நேரடியாகச் சென்று நேர்முகமான பரீட்சைகள் நடாத்தி மக்கள் அபிப்பிராயங்களையும் பெற்று தெரிவு செய்வதே ஜனநாயக முறையும் சிறப்பான பண்புமாகும் என கட்சிப் போராளிகள் கூறுகின்றனர்.
1970 ஆம் ஆண்டு  இவ்வாறான வேட்பாளர் தெரிவின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவமாக இருந்த  அமரர் டட்லி சேனநாயக்க அவர்கள் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கு நேரடியாக விஜயம் செய்து தனது கட்சிக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்துள்ளதை எமது முஸ்லிம் கட்சித் தலைமைத்துவம் உதாரணமாகக் கொள்ள வேண்டும் எனவும் அரசியல் அவதானிகள் ஆலோசனையாகத் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் கட்சி ஊடாக நாடாளுமன்றம் சென்றவர்களை மீண்டும் வேட்பாளர்களாக (தலைமைத்துவம் முடிவெடுத்துள்ளது எனக் கூறி) இம்முறையும் முன்நிறுத்தி புளித்துப் போன தயிரை மக்களுக்கு கொடுப்பது போல் வேட்பாளர்களை கட்சி சார்பாக ஒரு போதும் நிறுத்தக் கூடாது எனவும் கட்சிப் போராளிகள் கண்டிப்பான வேண்டுகோளை தலைமைத்துவ அமானிதத்தை ஏற்றிருக்கும்  கட்சித் தலைமைத்துவத்திடம் விடுக்கின்றனர்.

கட்சி ஊடாக நாடாளுமன்றம் சென்றவர்கள் ஆயுட்காலம் முழுவதும் நடாளுமன்றம் செல்வதற்கு ஆசைப்படாமல் புதிய திறமைசாலிகளுக்கும், இளைஞர்களுக்கும் இடம்கொடுத்து கட்சியின் முன்னேற்றத்திற்கு உழைப்பவர்களாகவும் ஆலோசகர்களாகவும் இருப்பதற்கு முன் வரல் வேண்டும். இதனையே கட்சித் தலைமைத்துவமும் இவர்களின் எண்ணத்திற்கு கொண்டுவரல் வேண்டும் என்றும் புத்திஜீவிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top