சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருக்கு
அம்பாறை மாவட்டப்பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின்
முன்னாள் உப தலைவரின் தேர்தல் சம்பந்தமான திறந்த மடல்
அஸ்ஸலாமு அலைக்கும்,
நடைபெறவிருக்கின்ற தேர்தல் எமது சமூகத்தின் எதிர்காலத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது. நீண்டகாலமாய்ப் புரையோடிக்கிடக்கின்ற அரசியல் பிரச்சினைகளுக்கெல்லாம் நல்லாட்சி ஒன்றின் மூலம்தான் நிரந்தரத் தீர்வுகளை வழங்க முடியும் என்பது வெளிப்படையான உண்மையாக இருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் மக்களால் இதுவலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
இந்நாட்டு முஸ்லிம்களைப் பொறுத்தவரை இத்தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை காணமுடியவில்லை. இதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளின் போக்குகளே காரணமாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதுவித சலனங்களும் இல்லாமல் எமது சமூகம் நல்லாட்சியின் சின்னத்தின் பின்னால் அலையெனத் திரண்டு நின்றதை இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்
இலங்கை முஸ்லிகளைப் பொறுத்தவரையில் பல கட்சிகளும், குழுக்களும் எம்மத்தியில் இயங்கினாலும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பலம்மிக்க கட்சியாகவும், நீண்ட வரலாறு கொண்டதாகவும் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியதாகவும் இருந்து வருகிறது. எனவே இத்தேர்தலில் சமூகத்தின் உண்மையான உள் உணர்வுகளை மதித்து அக்கட்சி தனது தேர்தல் வியூகங்களை வகுத்தாகவேண்டியது அதன் தார்மீகக் கடமையாகும்.
இரு பெரும் தேசியக் கட்சிகளும் இம் முறை களமிறக்கவுள்ள வேட்பாளர்கள் குறித்து ஒரு விடயத்தை மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றன. ஊழல், மோசடி, போதைப் பொருள் கடத்தல் மற்றும் பஞ்சமாபாதங்களுடன் தொடர்புபட்டவர்களை களமிறக்குவதில்லை மாறாக மக்களுடன் நல்லுறவை வைத்துக் கொண்டு நல்லாட்சிக்காய் செயற்படக்கூடியவர்களுக்கே இம்முறை இடமளிக்கப் போவதாக அக்கட்சிகள் பகிரங்க அறிவிப்புச் செய்திருக்கின்றன.
இது விடயமாக முஸ்லிம் காங்கிரஸின் தலைமையிடமும், உயர்பீடத்திடமும் வினயமாக ஒன்றை வேண்டிக் கொள்கின்;றேன்.
அல்குர்ஆனையும், ஹதீஸையும் தமது கட்சியின் வழிகாட்டல்களாகக் கொண்டுள்ளோம் என கட்சியின் யாப்பில் கூறியுள்ள எமது கட்சி மேற்சொன்ன விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறி லங்கா சுதந்திரக் கட்சியும் விட ஒருபடி முன் சென்று மிகவும் நேர்மையானவர்களை இறையச்சமுள்ளவர்களை நாட்டிலும், எமது சமூகத்திலும் நல்லாட்சி மலர்வதற்கு இதயசுத்தியுடன் முன்னின்று செயற்படக் கூடியவர்களை எமது கட்சி சார்பாக களமிறக்க வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
மாறாக அரசியலை ஒரு சிறந்த வியாபார மார்கமாகக் காண்பவர்களையும் பொய், புரட்டு, பித்தலாட்டம் கொலை, கொள்ளை மற்றும் அடாவடித்தனம் போன்றவற்றை ஆயுதமாகக் காண்பவர்களையும் எமது கட்சி சார்பாக இனியும் களமிறக்குவது கட்சியின் வீழ்ச்சிக்கு மாத்தரமல்ல முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பிற்கும் நாட்டில் மலர்ந்துள்ள நல்லாட்சிக்கும் அச்சுறுத்தலாகவே அமையும்.
எனவே, இவ்விடயத்தைக் கருத்தில் கொண்டு கட்சியின் வேட்புமனுக்களை தயார்படுத்துவீர்கள் என நம்புகின்றேன்.
இவ்வண்ணம்
அன்புடன்
அல்ஹாஜ் யூ.கே. சம்சுத்தீன் (மிஸ்கீன்)
கல்முனைக்குடி பெரிய பள்ளிவாசல் முன்னாள் தலைவரும்
அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளி வாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவரும்
கல்முனை
0 comments:
Post a Comment