தெஹிவளையில் உள்ள அதிசொகுசு வீடுகள்
யோசிதவுக்கே சொந்தமாம்
சிங்கள ஊடகம் தெரிவிப்பு!
தெஹிவளையில் உள்ள அதிசொகுசு வீடுகள் இரண்டும் யோசிதவுக்கு சொந்தமானது என உறுதிப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் உரிமையாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வருமான யோசிதவினால் தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் 65 பேர்ச்சர்ஸ் நிலம் கொள்வனவு செய்யப்பட்டு, பல கோடிகள் பெறுமதியான சொகுசு வீடுகள் இரண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்டன் நெட்வேர்க் நிறுவனமான (C.S.N) நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் நிதி குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு அமையவே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 65 பேர்ச்சர்ஸ் இடமானது பகுதிபகுதிகளாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், தெஹிவளை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான 5 பேர்ச்சர்ஸ் இடமும் சந்தை விலையை விட மிகவும் குறைந்த விலையில் இவர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பகுதிபகுதிகளாக கொள்வனவு செய்யப்பட்ட இடத்தில் 35 பேர்ச்சர்ஸ் யோசிதவின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், மிகுதி இடம் திருமணமாகாத 88 வயதான பெண் ஒருவரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சொகுசு மாடி வீடுகள் இரண்டிலும் மின் உயர்த்தி (Lift) வசதிகள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத் தகவல்களை சிங்கள ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment