மர்ஹும் டாக்டர்
ஏ,எம்.அபூபக்கர் எழுதிய மரண சாசனம்
டாக்டர் ஏ.எம். அபூபக்கர்
( ஆதம்பாவா முஹம்மது அபூபக்கர் ) அவர்கள் வபாத்தாகி 12 வருடங்கள் ஆயிற்று. அவர்கள் தனது 21 ஆவது வயதிலேயே மரண சாசனம் ஒன்றையும் எழுதி விட்டார்கள். அன்னார்
எழுதிய மரண சாசனத்தை இங்கு தருகின்றோம்
டாக்டர் ஏ.எம்.அபூபக்கர் |
அன்புக்குரியவர்களே!
அஸ்ஸலாமு
அலைக்கும்.
நான்
உங்களுக்காக விட்டுச் செல்லும் மிகப் பெரும்
சொத்து இது.
ஆகவே, இதனைக்
கவனமாகப் படியுங்கள்.
இந்தச் சாசனத்தை
நிறைவேற்றுங்கள்.
எனக்காக
எனது பிரிவை
எண்ணி எவரும்
துக்கப்பட வேண்டாம்.
எனக்காக யாரும்
அழ வேண்டாம்.
மண்ணிலிருந்து படைக்கப்பட்டேன்; இப்போது அந்த மண்ணிலேயே
புதையுறப் போகின்றேன்.
ஏகமான அல்லாஹ்விடமிருந்து
புறப்பட்டு வந்தேன்; இப்போது அவனிடமே திரும்பிச்
செல்கிறேன். இத்தனை காலமும் நான் இந்த
மண்ணுக்குப் பாரமாக இருந்தேன். இப்போது அதே
மண் என்னை
உண்டு ஏப்பமிடப்
போகிறது. ”ஒவ்வொரு
பொருளும் அதன்
மூலத்தளவிலேயே மீளுகிறது” என்பது நாயக வாக்கு.
ஆகவே இது
பிரிவு அன்று;
இதுவே உண்மையான
சேர்க்கை.
பூங்காவின்
மலர்ச் செடி
ஒன்றிலே தனியாக
ஒதுங்கி நின்று
பாட்டிசைத்த புல்புல் பறவை பறந்து சென்று
விட்டது. அது
இனி திரும்பி
வராது. அது
தன்னோடு எதையும்
எடுத்துச் செல்லவில்லை.
அது எப்படி
வந்ததோ அது
அப்படியே போய்
விட்டது. அது
தன் இசையைக்
கேட்பதற்கு எவரும் இல்லாத பூங்கா ஒன்றிலே
நின்று சோக
கானம் பொழிந்து
விட்டு பறந்து
போயிற்று. ஆயினும்,
அதன் இனிய
கீதம் வளி
மண்டலத்திலேயே புதையுண்டு மறுமை நாள் வரை
ஒலித்துக் கொண்டே
இருக்கும். அந்தக் கானம் மனிதர்களின் காதுகளுக்குக்
கேட்காவிட்டாலும் அமரர்களுக்காவது கேட்கும் என்ற நம்பிக்கையோடுதான்
அது பூங்காவைத்
துறந்து செல்கிறது.
அந்த புல்புல்
நானே.
நான்
இந்த பிரபஞ்சத்தில்
வாழ்ந்த காலத்தில்,
உலகத்தின் வீடு
எனக்கு புகலிடம்
அளித்தது. இப்போது
அதன் திறவுகோலை
உங்களிடம் விட்டுச்
செல்கிறேன். உலகின் மீது எனக்கிருந்த உரிமைகள்
அனைத்தையும் விட்டுச் செல்கிறேன். என் ஆத்மா
மீது நான்
பெற்றிருந்த உரிமையோடு மட்டும் உங்களைப் பிரிந்து
செல்கிறேன்.
இவ்வுலக
வீட்டில் சொற்ப
காலம் வாழ்வதற்கே
நான் வந்தேன்;
வாழ்ந்தேன்; நீண்ட இரவில் இருளைக் கலைப்பதற்காக
விளக்கை ஏற்றினேன்.
இப்போது விளக்கு
அணைந்து விட்டது;
எண்ணெயும் தீர்ந்து
போயிற்று; இரவுப்
பொழுதும் அகன்று
விட்டது. வைகறைப்
பொழுது உதயமாயிற்று.
பயணத்தைத் தொடர
வேண்டிய வேளையும்
வந்து விட்டது.
இனி வீடோ
விளக்கோ எண்ணெயோ
தேவையில்லை. இதோ என் பயணத்தை மீண்டும்
ஆரம்பித்து விட்டேன். உங்கள் இரவு இன்னும்
கலையவில்லை என்பது உண்மை தான். ஆயினும்,
இரவுக்கு விடிவும்
உண்டு என்பதை
மறந்து விடாதீர்கள்.
என்
நீண்ட பயணத்தின்
இலக்காக இருந்த
அந்த முடிவில்லாத-
நிலையான- உலகம்
அதோ என்னை
வரவேற்கிறது. அந்த வரவேற்பு பொதுவானதா, சிறப்பானதா
அல்லது கடினமானதா
என்பதை நான்
அறியேன். ஆனால்,
நிலையான அந்த
உலக - வீட்டின்
வாயில் என்னை
நோக்கித் திறந்து
கொண்டு விட்டது.
நான் போகிறேன்;
போகிறேன். நீங்கள்
துயரப்பட வேண்டாம்.
உங்களையும் நான் அங்கு காணும் காலம்
வெகு தூரத்தில்
இல்லை. என்னை
அடக்கம் செய்வதற்கு
முன்னால், என்
முகத்தை ஒருமுறை
பார்த்துக் கொள்ளுங்கள். பின்னர், உங்கள் நிலையைச்
சற்றுச் சிந்தித்துக்
கொள்ளுங்கள்.
பிச்சைக்காரர்களும்
பரதேசிகளும் பிரயாணிகளும் தங்கும் ஒரு மடமாக
இருக்கும் இந்த
உலகம் நிலையில்லாதது;
நேற்று மலர்ந்த
மலர்கள் இன்று
இல்லை; இன்று
மலரும் பூக்கள்
நாளை இருக்கப்
போவதில்லை. பிறந்தோம்; வாழ்ந்தோம்; போகின்றோம். இதுதான்
வாழ்க்கை வட்டத்தின்
நியதி. பின்னர்,
ஏன் இந்த
உலகில் மாளாத
ஆசை வைத்திருக்கின்றீர்கள்?
எங்கே, என்
வதனத்தை மீண்டும்
ஒருமுறை பாருங்கள்.
பின்னர், உங்கள்
நிலையைக் குறித்து
எண்ணிப் பாருங்கள்.
மரணம்
எனக்கு சுகமாக
அமைந்ததா அல்லது
வேதனையில் முடிந்ததா
என்பதை உங்களுக்குத்
தெரிவிக்க அவகாசமோ
வாய்ப்போ இல்லாத
நிலையில் பயணப்பட்டு
விட்டேன். பிரயாணத்தின்
அடுத்த கட்டமும்
முடிவும் சுகமாக
அமையுமா இல்லையா
என்பதையும் நான் அறியேன். ஆனால் எனது
பயணம் துயரமும்
அயர்வும் இல்லாமல்
சுகமாக முடிய
வல்ல அல்லாஹ்வை
எனக்காகப் பிரார்த்தனை
செய்யுங்கள்.
நான்
முற்றும் துறந்த
முனிவனாகவோ பாவம் செய்யாத பரிசுத்தவானாகவோ என்
வாழ்நாள் முழுவதிலும்
இருந்ததில்லை. ஏனெனில், நானும் உங்களைப் போன்ற
சராசரி மனிதனேதான்.
சேறும் சகதியும்-
அதேவேளை தாமரையும்-
நிறைந்த ஒரு
குட்டையாகவே எனது வாழ்க்கை கழிந்தது. என்னால்
இயன்றவரை எனக்காகவும்
மற்றவர்களுக்காகவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு
கோரியிருக்கிறேன்; குற்றப் பரிகாரமும்
தேடியிருக்கிறேன். ஆயினும், நீங்களும்
எனக்காக பாவமன்னிப்புக்
கோருங்கள். உங்களுள் எவருக்கேனும் நான் உடலாலோ,
உள்ளத்தாலோ, உடமைகளாலோ தீங்கு செய்திருந்தால் அல்லாஹ்வுக்காக
என்னை இப்போதே-
அடக்கம் செய்வதற்கு
முன்னால்- மன்னித்து
விடுங்கள். அல்லாஹ்வைச் சாட்சியாக வைத்து, உங்கள்
வாயாலேயே அந்த
மன்னிப்பைத் தெரிவித்து விடுங்கள்.
என்னை
அடக்கம் செய்வதில்
தாமதம் காட்டாதீர்கள்.
நான் மரணித்துக்
கூடியது பதினாறு
மணித்தியாலங்களுள் என்னை அடக்கம்
செய்து விடுங்கள்.
எவரையும் (எனது
சொந்தப் பிள்ளைகளையேனும்
சரி) எதிர்பார்த்து,
எனது அடக்கத்தைத்
தாமதப்படத்தி விடாதீர்கள். என்னைப் பள்ளிவாயில் மையவாடியிலோ
தனியாருக்குச் சொந்தமான மையவாடியிலோ அடக்கம் செய்ய
வேண்டாம். பரதேசிகளையும்
ஏழைகளையும் அடக்கம் செய்யும் – கட்டணம் அல்லது
வரி எதுவும்
அறவிடப்படாத – பொது மையவாடியிலேயே என்னைப் புதைத்து
விடுங்கள். கட்டணம் அல்லது வரி அறவிடப்படும்
மையவாடியிலே என்னை அடக்கம் செய்வதால், எனக்கு
மறுமையிலே ஏதாவது
நல்ல அந்தஸ்தும்
சலுகையும் கிடைக்கும்
என்று உங்களுள்
எவரேனும் ஆதாரங்களோடு
உத்தரவாதம் அளிக்க முடியுமானால் ஆயிரம் ஆயிரமாகக்
கொடுத்தேனும் என்னை அங்கே அடக்கம் செய்யுங்கள்.
பிணத்திற்குப் பணம் வாங்கும் உங்கள் கேடுகெட்ட
பழக்கம் ஒழியாதவரை
உங்கள் இழிய
நிலை மாறப்
போவதில்லை என்பதையும்
இஸ்லாமிய ஷரீஅத்தில்
அனுமதிக்கப்படாத வரிகளையும் கட்டணங்களையும் இஸ்லாமிய நிறுவனம்
அல்லது அரசு
அறவிடுதல் ஹராம்
என்பதையும் நினைவிற் கொள்ளுங்கள்.
எனது
அடக்கத்தலத்தின் மீது பூஞ்செடி ஒன்றை வளர
விடுங்கள். அது தன் மலர்களை தன்
புதை குழிமீது
சொரிந்து கொண்டே
இருக்கட்டும். மேகத்திலிருந்து சிந்தும் பனித்துளிகள் எனது
‘கபுரை’ நீராட்டட்டும்.
கானம் இசைக்கும்
குருகுகள் என்னை
வாழ்த்தட்டும். என் புதைக்குழியைச் சூழ வளரும்
புற்களும் செடிகளும்
என் ‘கபுரி’ன் மணற்பரப்பை
மரகதமாக்கட்டும்.
உங்களால்
முடியுமானால், அப்பாவியாகவும் அல்லாஹ்வின்
நல்லடியாராகவும் வாழ்ந்து மரணித்த நல்ல மனிதர்
ஒருவரின் அடக்கத்தலத்திற்கு
அருகே என்னை
அடக்கம் செய்யுங்கள்.
உங்களுள்
எவருக்கேனும் அன்பும் பாசமும் இருந்தால்- என்மீது
எவரேனும் அனுதாபம்
கொண்டிருந்தால்- அவர் எனக்காக எனது பாவமீட்சிக்காக-
மனமுருகி அல்லாஹ்வை
இறைஞ்சட்டும்; எனது ஆத்மாவின் சாந்திக்காக அல்லாஹ்வை
அவர்கள் பிரார்த்திக்கட்டும்;
அவர்கள் எனக்காக
தானதருமம் செய்யட்டும்;
செல்வத்தால் செய்யக் கூடிய நற்செயல்களைத் தாமே
செய்து, அவற்றால்
கிடைக்கும் நன்மைகளை எனக்கு அன்பளிப்பு செய்யட்டும்;
அவர்கள் எனக்காக
அல்குர்ஆனின் ஒரு அத்தியாயத்தையேனும் தாமாக ஓதி,
அதனால் கிடைக்கும்
நன்மையை எனக்கு
அளிக்கட்டும். இவற்றைத் தவிர, கூலிக்கு ஆள்
பிடித்துச் செய்யும் சடங்கு எதையுமே செய்யாதீர்கள்.
என்னை
அடக்கம் செய்த
பின்னர் ‘தல்கீன்’
ஓதுவதைக் கைவிட்டு
விடாதீர்கள். அறபு மொழி தெரிந்த ஒருவரே
எனக்கு மட்டுமன்றிப்
பிறருக்கும் பயன் தரத்தக்க வகையில் ‘தல்கீன்’
ஓத வேண்டும்.
சொத்து
என்ற வகையில்
நான் எதையும்
விட்டுச் செல்லவில்லை.
நான் விட்டுச்
செல்லும் பெறுமதி
வாய்ந்த ஒரே
சொத்து என்னுடைய
பன்னிரண்டு வயது முதல் இன்று வரை
சேகரித்த பல
இலட்சம் ரூபா
பெறுமதி உள்ள
நூல்களே ஆகும்.
இந்த நூல்கள்
எனது மகனுக்கும்
அவர் மூலம்
மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பதே என்
விருப்பம் ஆகும்.
எனது மகனின்
நிலை இதற்கு
உடன்பாடானதாக இருந்தால் எனது நூல்கள் யாவும்
அவருக்கே செல்ல
வேண்டும்.
உங்களுள்
எவருக்கேனும் என்மீது அன்பும் அறிவுப் பணியில்
ஆர்வமும் போதிய
வசதியும் இருக்குமாயின்,
அவர் நான்
கையெழுத்துப் பிரதிகளாக விட்டுச் செல்லும் நூல்களை
அச்சிட்டு வெளியிடட்டும்.
அவ்வாறு எவரேனும்
செய்ய முன்வருவாராயின்,
நான் மரணப்
பரியந்தம் கடைப்பிடித்து
வந்த சுய
கௌரவத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அவர் நடந்து
கொள்ள வேண்டும்
என்று கேட்டுக்
கொள்கிறேன்.
எனது
மனைவி, மக்கள்,
பாதுகாப்பில் இருந்தோர் அனைவரையும் அல்லாஹ்வின் பொறுப்பிலே
விட்டுச் செல்லுகிறேன்.
அவர்களுக்கு நேர்வழிகாட்டவும் உதவவும் அவனே போதுமானவன்.
அவர்களின் இரு
உலக நல்வாழ்வுக்காக
என்மீதும் என்
குடும்பத்தார் மீதும் அனுதாபம் கொண்டோர் அல்லாஹ்விடம்
பிரார்த்தனை புரியட்டும்.
எங்கே,
எனக்கு விடை
தாருங்கள்; நான் பிரிந்து செல்ல விடை
தாருங்கள்; மலர்ந்த முகத்தோடு விடை தாருங்கள்.
நீங்கள் விடை
தந்தாலும் சரி,
தராவிட்டாலும் சரி, நான் என் பயணத்தை
மீண்டும் தொடர்ந்து
விட்டேன். எத்தனையோ
இலட்சியங்களோடும் ஆசைகளோடும் வாழ்ந்த ‘பக்கீரி’ன்
வாழ்நாள் இன்றோடு
முடிந்து விட்டது.
அவன் உலகச்
சிறையிலிருந்து தப்பிவிட்டான். கைதி என்ற ஸ்தானத்திலிருந்து
தப்பி, சுதந்திர
உலகை நோக்கி
ஓடிக் கொண்டிருக்கிறான்.
மீண்டும் அவனை
உலகச் சிறையிலே
தள்ளிவிட எவராலுமே
முடியாது. ஆயினும்,
அந்தச் சுதந்திர
உலகிலே அவனுக்குக்
கிடைக்க இருப்பது
சுகமான வாழ்வா
அல்லது துயர்
நிறைந்த சிறைவாசமா
என்பது அவனுக்கே
தெரியாது. ஆட்டக்காரனின்
கையிலிருந்த நூலிலே நின்று ஆடிய அவன்
இப்போது உருட்டி
விடப்பட்ட பந்தாக
ஓடிக் கொண்டிருக்கிறான்.
அழாதீர்கள். ஒரு பரதேசி உலகின் கொடிய
சிறையிலிரந்து விடுதலையாகி விட்டான் என்பதை எண்ணி
ஆனந்தம் அடையுங்கள்.
நீங்களும் என்
பின்னே வர
ஆயத்தமாகுங்கள்.
இறுதியாக,
உங்களுக்கு ஒன்று கூறுகிறேன். நல்லவன்- தீயவன், எசமான்-அடிமை, செல்வன்-ஏழை, வாலிபன்-மெலியன்
என்ற வேறுபாடு இல்லாமல் நீங்கள் அனைவருமே என்றோ ஒருநாள் அல்லாஹ்விடம் செல்ல இருப்பவர்கள்;
குற்றக் கூண்டிலே நிற்கும் கைதியைப் போல அவன் முன்னால் நிற்க இருப்பவர்கள். ஆகவே, அதற்குத்
தேவையான ஆவணங்களையும் ஏற்பாடுகளையும் வாழ்வுப் பாதை மூடப்படும் முன்னால் ஆயத்தம் செய்து
கொள்ளுங்கள். வாழ்வின் பல்வேறு கெடுபிடிகளுக்கும் தாக்குப் பிடித்து, எனது சமகாலத்தைச்
சேர்ந்த- என்னைப் போன்ற குணவியல்புகளையும் போக்கினையும் கொண்ட – எவருமே அடைந்திராத
அனுபவங்களைப் பெற்றவன் நான்; ஏமாற்றங்கள், தோல்விகள், துயரங்கள் ஆகியவற்றையே ஊதியங்களாகப்
பெற்று, வாழ்க்கையின் சுமை தாங்கியாகக் காலத்தைக் கழித்தவன். நான். இளமையில் முதுமையும்,
முதுமையில் இளமையையும், நோயில் சுகத்தையும், சுகத்தில் நோயையும் நுகர்ந்து வளர்ந்தவன்
நான்; இறைவனின் பல்வேறு விதமான சோதனைகளுக்கும் ஆட்பட்டு அவன் மூட்டிய நெருப்புக் கிடங்கிலே
கிடந்து பொசுங்கியவன் நான். அதனால், நான் பெற்ற அனுபவங்களைக் கொண்டு சொல்லுகிறேன்;
உலகில் எந்தப் பொருளிலும் ஆழமான பற்றுக் கொள்ளாதீர்கள். தாமரை இலையில் உள்ள நீரைப்
போல வாழுங்கள். இந்த உலகம் நல்லுள்ளமும் நல் உணர்வுகளும் உடையவர்களுக்கு எந்த விதத்திலும்
பொருத்தமானதன்று. போக்கிரிகள், போலிகள், ஏமாற்றுப் பேர்வழிகள், மனச்சான்று அற்றவர்கள்முதலானோருக்கே
இந்த உலகம்
பொருத்தமானது. பிறந்து விட்டோம் என்பதற்காக வாழுங்கள்;
வாழவே பிறந்தோம்
என்ற எண்ணத்தில்
இங்கே வாழாதீர்கள்.
அல்லாஹ்வைப் பயந்து பணியுங்கள். ஹலாலான பொருள்களாலும்
செயல்களாலும் உங்களின் குறுகிய- நிலையற்ற- வாழ்வை
அமைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு கணத்தையும்
அல்லாஹ்வின் நினைவிலே கழியுங்கள். பாவம் செய்யும்
சந்தர்ப்பம் ஏற்பட்டால்கூட அந்தப் பாவத்திலும் அல்லாஹ்வை
எண்ணிப் பயந்து
கொள்ளுங்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் இட்ட
கட்டளைகளை முழுமையாக
நிறைவேற்றுங்கள்.
இந்த
மரண சாசனத்தை
எனது ‘ஜனாஸா’வுக்கு வந்திருப்பவர்களின்
முன்னிலையில் ஒருமுறை வாசித்துக் காட்டுங்கள். அதன்
பின்னரே என்னை
அடக்கம் செய்யுங்கள்.
எனது மரணச்
செய்தியை உறவினர்கள்,
நண்பர்கள், அபிமானிகள் அனைவருக்கும் அறிவித்து விடுங்கள்.
தேவையற்ற
சடங்குகளைச்
செய்து, நேரத்தையும்
பணத்தையும் விரயமாக்காதீர்கள்.
ஏ.எம்.அபூபக்கர்
எழுதியது: 21-04-1967
புதுப்பித்து எழுதியது: 05-07-1968
புதுப்பித்து எழுதியது: 14-07-1986
புதுப்பித்து எழுதியது: 11-11-1997
0 comments:
Post a Comment