மறக்கமுடியாத மனித நேயன் மர்ஹூம் சாஹுல் ஹமீத்


- .ஷபாஅத் அஹமத்-

சமாதானத்திற்கும்,சமுக ஐக்கியத்திற்கும்,இன ஒற்றுமைக்கும் பெயர்போன ஊராக இன்றும் கிழக்கிலங்கை மக்களிடையே பேசப்படுவது நிந்தவூராகும். இயற்கை எழில்கொஞ்சும் இக்கிராமத்தின் உயிர்நாடியாகத் திகழ்ந்தவர் அல்ஹாஜ்.எம்சாஹுல் ஹமீத் அவர்களாவார். அன்னார் 12வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தில்(2002.06.20) அக்கரைப்பற்றில் நடைபெற்ற வடகிழக்கு சமாதானத் தீர்வுத்திட்டக் கருத்தரங்கில் அமெரிக்கத் தூதுவர்,மற்றும் கல்விமான்கள்,அறிஞர்கள் புடைசூழ அமர்ந்திருந்தவேளை திடீரென மாரடைப்பால் காலமானார்.

தன்னுடைய 42 வருட கல்விப் பணியில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றதுடன், ஆழ்ந்து சிந்திக்கும் மனப்பாங்கினால் செல்வாக்குப் பெற்றதுடன்,ஒரு கல்விமானாக , சமுக சேவகராக,சிறந்த விவசாயியாக,மார்க்கப்பற்றுமிக்க பள்ளிவாயல் நிர்வாகியாக,ஒரு பேச்சாளராக, மொழிபெயர்ப்பாளராக மட்டுமல்லாது இலக்கிய ஆர்வலராயிருந்து கவிதை,கட்டுரைகளையும் எழுதி விமர்சனத் துறையிலும் தடம் பதித்தார்.
ஆரம்ப காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் குழு,இணக்க சபை போன்றவற்றில் நிதானத்துடன் செயல்பட்டவர் என்ற பாராட்டையும் பெற்றார். அனைத்துக்கும் மேலாக வடகிழக்கில் அமைதியின்மை ஏற்பட்டபோது இன ஐக்கியத்தை ஏற்படுத்தவும் ,பிரதேச வாதங்களைக் களைந்தெறியவும் ஒன்றிணைந்து அப்போதைய ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மர்ஹூம்.MAM.ஹுஸைன் அவர்களின் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பின் செயலாளராகப் பணியாற்றினார்.

தன் வாழ்நாளில் எப்போதுமே ஒரு நேர்மையாளராகவும்,சரியான கருத்துக்களைத் தீர்க்கமாகவும்,ஆணித்தரமாகவும் மக்களைச் சென்றடையக்கூடியவாறு எடுத்துக்கூறியும்,சன்மார்க்க நெறிகளை தவறாது கடைப்பிடித்தும் வந்தவரான மர்ஹூம்.ஹமீத் அவர்கள் நிந்தவூரின் ஒவ்வொரு நிழ்வுகளின்போதும் தேவைப்பட்டவராகவே இருந்தார்.

அன்னார் கல்விப் பணியில் ஓய்வுபெற்றபோது நிந்தவூர் அல் அஷ்றக் தேசிய பாடசாலையினால் வெளியிடப்பட்ட அன்னார் தொடர்பான "வெண்மதி" சிறப்பு மலரில் இன்றைய மாகாணக் கல்விப் பணிப்பாளராகவிருக்கும் MT. அப்துல் நிஸாம் அவர்கள் மர்ஹூம்.ஹமீத் அவர்களைபற்றிக் கூறியிருந்த பின்வரும் கருத்துக்கள் அன்னாரை சரியான அளவுகோலாக கொள்ளத்தக்கதாகும்.

" மனதை அப்படியே உடையாய் உடுத்தி அதிபர் பதவிக்கு மரியாதை சேர்த்தவர், பதவிக்கும் பணியாமல் பதவியை அலங்கரித்தவர், கை சுத்தமானதால் கைசேதப்படாதவர்,கயமைக்கெதிராக்க் கர்ஜித்தவர், அநீதிக்கெதிராக வெகுண்டெழுந்தவர்,அன்புக்கு அடிமையாய்ப் பணிந்தவர், மொழியின் வித்தகர்,பல்கலையின் சொத்திவர்...என்போன்ற மாணவ மனங்களில் கொலுவீற்றிருக்கும் முத்து இவர். குருவின் இலக்கணமானவர் அதனால் மாணவ உள்ளங்களில் குருநாதனாதரானவர்".
ஒரு அழகான குடும்பத்தையும்..தன்னைச் சுற்றிய ஒரு பெரும் கூட்டத்தையும் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டார்.
 அன்னாரின் 12 வது வருட நினைவு தினமான இன்று அவரை நினைவுகூர்வதில் அன்னார் வளர்த்தெடுத்தவன் என்னும் வகையில்
பெருமையடைவதுடன், அன்னாரது ஆன்மா ஈடேற்றத்திற்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்...ஆமீன்!


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top