கசப்பான யுகம் நாட்டில் மீண்டும் உருவாக
பொலிஸ் திணைக்களம் அனுமதிக்காது
-    பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண

Ø   இனக் குரோதம், குழப்பம் ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு நாட்டில் இடமில்லை.
Ø அப்பாவி மக்களைத் தூண்டிவிடும் வாசகங்கள் அடங்கிய  துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பது குற்றம்.
Ø  ஊர்வலம் நடத்துவதற்கு  குறைந்தது 6 மணித்தியாலங்களுக்கு முன்னராவது அனுமதி பெறுவது அவசியம்.
நாட்டில் இன, மத, மொழிகளுக்கிடையே குழப்பம், குரோதம் மற்றும் அசாதாரண நிலைமையை ஏற்படுத்தும் வகையிலான ஊர்வலம், ஆர்ப்பாட்டம் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு இடமளிப்பதில்லையென்பதில் பொலிஸ் திணைக்களம் உறுதியுடன் இருப்பதாக ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இலங்கை அரசியலமைப்புக்கு முழுமையாக கட்டுப்பட்டுள்ள பொலிஸ் திணைக்களம் நாட்டு மக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் அதேநேரம் இனங்களுக்கிடையிலான சமத்துவத்தை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளை கண்டிப்புடன் கையாள பின்வாங்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்கள். ஆகக்குறைந்தது ஆறு மணித்தியாலங்களுக்குள்ளாயினும் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் அறிய தந்த பின்னர் நாட்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் ஆர்ப்பாட்டங்கள். ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களை நடத்த முடியும். எனினும் இந்தச் செயற்பாடுகள் இனங்களுக்கிடையேயான முறுகல் நிலையை உருவாக்கும் விதத்திலோ அல்லது ஊக்குவிக்கும் வகையிலோ அமையக் கூடாது.
இதேவேளை. இவ்வாறான செயற்பாடுகளுக்கிடையே மக்களைத் தூண்டி விடும் வகையிலான கருத்துக்கள். வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதும் குற்றமாகுமெனவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்களிடையே இன, மத, குரோதத்தை ஏற்படுத்திய கசப்பான யுகம் மீண்டும் நாட்டில் உருவாக பொலிஸ் திணைக்களம் அனுமதிக்காது எனவும் அவர் உறுதியாக தெரிவித்தார்.நாட்டின் சட்ட திட்டங்களையும், மனித உரிமைகளையும் மீறி, இன, மத, மொழிகளுக்கிடையே பிரிவினையையும் குரோதத்தையும் உண்டுபண்ணும் வகையில் செயற்படும் எந்தவொரு நபரும் 2007 ஆம் ஆண்டின் 50 வது சட்டத்தின் 03 வது சரத்தின் கீழ் தராதரம் பாராது கைதுசெய்யப்படுவார் எனவும் அவர் வலியுறுத்திக் கூறினார். எனவே நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையிலான இதுபோன்ற செயற்பாடுகளில் பங்கெடுப்பதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும் பொலிஸ் பேச்சாளர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top