மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு சாத்தியமில்லை:

இந்தியாவிடம் இலங்கை திட்டவட்டம்


மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து அளிப்பது சாத்தியமில்லை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் நாங்கள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம் என வெளி நாட்டுவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்..
இந்தியாவில் புதிதாக அமைந்துள்ள அரசுடன் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியிருந்தார். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டபோது அவருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை அவர் கோரியிருந்தார்.
அதற்குப் பதிலளித்து, நாடாளுமன்றத்தில் வெளிநாட்டு விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியதாவது:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சார்க் அமைப்பின் எதிர்காலம் தொடர்பான மோடியின் லட்சியத் திட்டம், பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது, மீனவர் பிரச்னை ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட்டன.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது அரசமைப்புச் சட்ட ரீதியிலான விஷயங்களில் நமது நிலையை விளக்கியுள்ளோம். இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் 1987இல் 13ஆவது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்போது முதல், நாட்டில் 5 வெவ்வேறு அரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. ஆனால் அந்த சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த முடியும் என்று அவற்றில் எந்த அரசும் கருதவில்லை.

இதை இந்தியத் தரப்பிடம் எடுத்துக் கூறியுள்ளோம். அதேபோல், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள் உட்பட எந்தவொரு மாகாணத்துக்கும் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது சாத்தியமற்றது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளோம். இதற்கும் இனப் பிரச்னைக்கும் சம்பந்தமில்லை.

நாட்டில் உள்ள எந்த மாகாணத்துக்கும் பொலிஸ் அதிகாரங்களை அளிப்பது என்பது விரும்பத்தக்கதல்ல என்பதையும் இந்தியாவிடம் இலங்கை எடுத்துக் கூறியுள்ளது என்று  அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தனது பதிலில் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top