பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கலவரத்தால்
7 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீடு நோக்கி பேரணியாக சென்றவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதால் இஸ்லாமாபாத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. முன்னதாக பிரதமர் நவாஸ் இல்லம் நோக்கி பேரணியாக சென்றவர்கள் மீது அந்நாட்டு பொலிஸார் தடியடி நடத்தினர். இதனையடுத்து பேரணி சென்றவர்களும் பொலிஸார் மீது கல் வீசித்தாக்குதல் நடத்த துவங்கினார். இதில் மோதல் முற்றியதில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர் என அறிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக கோரி எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முறைகேடுகள் செய்து ஷெரீப் ஆட்சியை பிடித்ததாக அந்நாட்டு எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. பாக் அவாமி தெஹ்ரிக் கட்சித் தலைவர் தாஹீர் உல்காத்ரி தலமையில் நவாஸ் பதவி விலக கோரி, அவரது இல்லம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது ஏற்பட்ட கலரவரத்தில் பெண் உட்பட போராட்டக்காரர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பிரதமர் நவாஸ் பொறுப்பேற்க வேண்டும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். நவாஸ் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெரும் போராட்டம் வெடித்துள்ள நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் திடீரென்று லாகூருக்கு சென்று விட்டார். தாம் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் இன்று தான் நவாஸ் ஷெரீப் ஆட்சியின் கடைசி நாள் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளதால் பெரும் பதற்றம் நீடிக்கிறது.
0 comments:
Post a Comment