இலங்கை – இந்தியா கூட்டுக்குழு கூட்டம்
கூட்டாக மீன்பிடிக்கும் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய முடிவு


டில்லியில் நேற்று நடந்த இந்தியா-இலங்கை கூட்டுக்குழு கூட்டத்தில், இரு நாட்டு மீனவர்கள், கூட்டாக மீன்பிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இந்தியா-இலங்கை பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டுக்குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.
மத்திய மீன்வளத்துறை இணைச் செயலாளர் ராஜ சேகர் வுந்ரூ தலைமையில் இந்திய பிரதிநிதிகளும், இலங்கை மீன்பிடித்துறை இயக்குனர் நிமல் ஹெட்டியாரச்சி தலைமையில் இலங்கை பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.  3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக, கூட்டத்துக்கு பின்னர் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் உள்ள விபரம்:
இந்தியாவில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கடலோர மாநிலங்களில், கூட்டு விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என இலங்கை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்தக்குழு இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது.இதன் மூலம், இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது, எப்..ஆர் போன்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், விரைவில் விசாரித்து விடுவிக்க முடியும். கூட்டு விசாரணை குழு இல்லாததால், கைது செய்யப்படும் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மீனவர்களை விடுவிக்க, காலதாமதம் ஏற்படுகிறது.இரு நாடுகளை சேர்ந்த மீனவர்கள் எவரும் தற்போது சிறையில் இல்லை என, கூட்டுக்குழு உறுதி செய்துள்ளது. இரு நாட்டு மீனவர்களும் கூட்டாக மீன்பிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைப்பதற்கான, சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யவும், இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.’’ இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கூட்டுக்குழுவின் அடுத்த கூட்டம், கொழும்பில் விரைவில் நடைபெறவுள்ளது. மீன்வளத்துறை தொடர்பாக வியட்நாம் போன்ற நாடுகளுடன், இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆனால், இலங்கையுடன் இதுபோன்ற ஒப்பந்தங்கள் எதுவும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இவை விரைவில் ஏற்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top