நிந்தவூருக்கு இப்படியும் ஒரு வைத்தியசாலை தேவையா?
எம்.சஹாப்தீன்
நிந்தவூர்
மாவட்ட வைத்தியசாலை
இரவு வேளையில்
இருளில் மூழ்கிக்
கிடக்கின்றது. இந்த வைத்தியசாலைக்கு மின்சார இணைப்பு
துண்டிக்கப்படாமல் இருக்கின்ற போதிலும்,
தினமும் இரவு
வேளையில், அதுவும்
இரவு 11 மணிக்கு
பிறகு வைத்தியசாலை
முற்றாக இருளில்
மூழ்கின்றது. இவ்வைத்தியசாலையில் இந்த அவலம் கடந்த
மூன்று மாதங்களாக
இருப்பதாக வைத்தியசாலையில்
கடமையாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றார்கள்.
வைத்தியசாலையின்
இக்குறைபாடு காரணமாக நிந்தவூர் பிரதேச மக்கள்
தமது வைத்திய
தேவைக்கு இரவு
வேளைகளில் கல்முனை
சாய்ந்தமருது வைத்தியசாலைகளுக்கு செல்லுகின்றார்கள்.
பகலில் வார்ட்டில்
அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்கள் இரவில்
மின்சாரம் இல்லாதிருப்பதனால்
பயந்தவர்களாகவே இரவை கழிக்கின்றார்கள்.
நிந்தவூர்
மாவட்ட வைத்தியசாலையில்
இரவு வேளையில்
மின்சாரம் துண்டிக்கப்படுவதன்
காரணமாக பகலில்
வைத்திய தேவைக்கு
செல்லுகின்றவர்களின் தொகையும் குறைந்து
கொண்டு வருவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இரவு
வேளையில் மின்சாரம்
இல்லாதிருப்பதன் காரணமாக வைத்தியசாலையில் இரவு கடமைக்கு
போட்டி காணப்படுவதாகவும்
தெரிவிக்கப்படுகின்றன.
30.08.2014 அன்று இரவு
சிறுபிள்ளை ஒன்றுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
இதனால், குழந்தையின்
தாய் மற்றும்
உறவினர்கள் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு அன்றிரவு
11.10 மணியளவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது,
வைத்தியசாலை முற்றாக இருளில் இருந்தது. ஒரு
குப்பி விளக்கு
கூட அங்கிருக்கவில்லை.
என்றாலும்,
குழந்தையின் தாய் வைத்தியசாலைக்குள் நுளைந்த போது,
அங்கு இருளில்
கடமையில் இருந்த
ஊழியர்கள், குழந்தைக்கு என்ன கொடுத்தீர்கள், மருந்து
கொடுத்தால், அதனைக் கொண்டு வாருங்கள் என
கூறியுள்ளார்கள்.
வைத்தியசாலை
இருளில் இருக்கின்ற
நிலையில், இந்தக்
கேள்வி அவசியமா?
மூன்று மாதங்களுக்கு
மேலாக இதுதான்
நிலைமை என்றால்,
வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியும், நிர்வாக
உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருகின்றார்கள்? ஊரில் இரண்டு எம்.பிக்கள்,
ஒரு மாகாண
சபை உறுப்பினர்,
பிரதேச சபை
தவிசாளர் மற்றும்
உதவித் தவிசாளர்
மற்றும் உறுப்பினர்கள்
என்ன செய்து
கொண்டிருக்கின்றார்கள்?
மின்சாரம்தான்
துண்டிக்கப்பட்டதென்றால், வைத்தியசாலைக்கு வருகின்றவர்ளை
அவசர தேவைக்காக
அம்புலன்ஸ் வண்டியில் கொண்டு செல்லுவதற்கு கூட
ஏற்பாடுகளில்லை.
இந்நிலையில்
குறிப்பிட்ட தாய், முச்சக்கர வண்டியில் கல்முனை
அஸ்ரப் ஞாபகார்த்த
வைத்திசாலைக்கு குழந்தையை எடுத்துச் சென்று இரவு
11.45 மணிக்கு வார்ட்டில் அனுமதித்துள்ளார்.
பகலில்
மட்டும் மின்சாரம்.
இரவில் மின்சாரம்
இருந்தும் இருளில்
வைத்தியசாலை என்றால், இப்படியொரு வைத்தியசாலை தேவையா?
இரவு வேளையில்
நோய்வாய்ப்பட்டு வருகின்றவர்களுக்கு முதலுதவி
செய்வதற்கு கூட வைத்தியசாலையில் மின்சாரம் இல்லையென்றால்,
நிந்தவூருக்கு எம்.பிக்கள், ஒரு மாகாண
சபை உறுப்பினர்,
பிரதேச சபை
தவிசாளர் மற்றும்
உறுப்பினர்கள் தேவையா?
இதே
வேளை, இரவில்
இருளில் வைத்தியசாலை
இருக்கின்ற அதே வேளை, இரவுக் கடமைக்கு
வருகின்றவர்கள் இருளில் நிம்மதியாக தூங்குகின்றார்கள். கேட்டால் மின்சாரம் துண்டிக்கபடுகின்றது நாங்கள் என்ன செய்வதென்று கேட்கின்றார்கள்.
என்ன நடவடிக்கை
எடுக்கப்பட்டதென்று கேட்டால் வைத்திய
அதிகாரியை குறை
சொல்லுகின்றார்கள்.
பெரியதோர்
கட்டிடத்தில் வைத்தியசாலை. ஆனால், கிராமிய வைத்தியசாலையை
விடவும் மோசமாக
நிந்தவூர் மாவட்ட
வைத்தியசாலை இருப்பது நிந்தவூருக்கு வெட்கமாகும். கிராமிய
வைத்தியசாலையில் 24 மணித்தியாலமும் மின்சாரம்
இருக்கின்றது. ஆனால், நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையில்
மாத்திரம் இரவு
வேளையில் மின்சாரம்
இல்லை. அதுவும்
இரவு 11 மணிக்கு
பிறகு அநேகமாக
மின்சாரம் இருக்காதாம்.
ஏன் இரவில்
11 மணிக்கு பிறகு மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது?
வைத்தியசாலை
இருந்தும் இல்லாத
ஊராகவே நிந்தவூர்
உள்ளது. நிந்தவூரில்
வீதிகளை அமைப்பதற்கு
காட்டும் அக்கரையை
வைத்தியசாலையில் காட்டுவதில்லை. வைத்தியசாலைக்கு
வரவின்றி நிதி
ஒதுக்க வேண்டும்.
வீதிகளுக்கு நிதி ஒதுக்கினால் வரவு கிடைக்கும்.
ஆனாலும், வைத்தியசாலையின்
வீதி இன்னும்
அரைகுறையாகவே உள்ளது.
நிந்தவூர்
மக்களே சிந்தியுங்கள்..!
நிந்தவூருக்கு அரசியல் அதிகாரம் இருக்கின்றது. அரசாங்கத்தின்
ஆதரவும் இருக்கின்றது.
இரண்டு எம்.பிக்கள், ஒரு
மாகாண சபை
உறுப்பினர், பிரதேச சபை தவிசாளர், உதவித்
தவிசாளர் மற்றும்
உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
நிந்தவூரில்
படித்தவர்கள் உள்ளார்கள். உயர் அதிகாரிகள் உள்ளார்கள்.
பணம் படைத்தோர்
உள்ளார்கள். ஒரு பக்கம் கடல் வளம்,
மறுபக்கம் வயல்
வளம் இப்படி
எல்லாம் இருந்தும்
வைத்தியசாலைக்கு இரவில் மின்சாரம் இருப்பதில்லை. வைத்தியசாலைக்கு
முறையான வீதி
இல்லை. மருந்து
இல்லை. மொத்தத்தில்
வைத்தியசாலை முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
குறைகள் நிவர்த்திக்கப்படல் வேண்டும் என்பதே ‘மக்கள் விருப்பம்”
0 comments:
Post a Comment