அதிகாரங்களை பகிர்ந்தளிக்க
இலங்கையை இந்தியா நிர்ப்பந்திக்கும்:

தமிழ் எம்பிக்களிடம் பிரதமர் மோடி உறுதி

இலங்கை தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய வகையில் அரசியல் தீர்வு காண, சம்பந்தப்பட்ட அனைவரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று தமிழ் எம்பிக்களிடம் இந்திய பிரதமர் மோடி உறுதி கூறியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் கொண்ட குழு, இந்தியாவுக்கு சென்றுள்ளது. இக்குழுவுக்கு சம்பந்தன் தலைமை வகிக்கிறார்.  இக்குழுவினர் நேற்று முன்தினம் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினர். நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.பிரதமருடன் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் மொழி மற்றும் கலாசார அடையாளத்தை அழிக்க இலங்கை அரசு முயற்சிப்பதாகவும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை இராணுவ மயமாக் கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு, நிவாரணப் பணிகளுக்கு இந்தியா செய்து வரும் உதவிகள் தொடர்ந்து செய்யப்படும் என்றும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடக்கும் மறுகட்டமைப்பு பணிகள் தொடரும் என்றும் இலங்கை எம்.பி.க்கள் குழுவிடம் மோடி உறுதி அளித்தார்.இலங்கை தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவும், மறு குடியமர்த்துதல் விஷயத்தில் துரிதமாக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்படும்; இராணுவ அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்  என்றும் கண்டிப்புடன் கூறுவோம் என்றும் மோடி உறுதி கூறினார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சந்திப்பு பற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை தமிழ் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றக் கூடிய வகையில் அரசியல் தீர்வு காண்பதற்கு, சம்பந்தப்பட்ட அனைவரும் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். தமிழ் மக்களுக்கு சமத்துவம், கெளரவம் மற்றும் நீதி கிடைக்கவும், அவர்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படவும் ஒருங்கிணைந்த இலங்கை என்ற வரையறைக்குள் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தின் அடிப்படையில், இலங்கை தமிழர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கப்பட வேண்டும். அதிகாரங்களை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க இலங்கையை வற்புறுத்துவோம் என்றும் இலங்கை எம்.பி.க்கள் குழுவிடம் பிரதமர் தெரிவித்தார். பிரதமரை சந்தித்த பிறகு சம்பந்தன் அளித்த பேட்டியில், எங்களது கருத்துக்களை பிரதமர் மோடி முழுமையாக கேட்டறிந்தார். இலங்கை தமிழர் பகுதிகளில் நடக்கும் பணிகள் குறித்தும் அவரிடம் சொன்னோம்; வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்து பேச ஆர்வமாக இருப்பதாக மோடி எங்களிடம் தெரிவித்தார் என்றார் என இந்திய ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top