இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய பின்
இரா.சம்பந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய பின் தமிழ் எம்.பி.க்கள் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் விரிவாக எடுத்துக் கூறினோம். வடகிழக்கில் தற்போது நடைபெறும் சம்பவங்கள் பற்றியும், இலங்கை அரசின் இராணுவமயமாக்கல், அரசியல் தீர்வு தொடர்பாக அங்கு நிலவும் மந்த நிலை, இலங்கை அரசின் நோக்கங்கள் ஆகியவை குறித்து விளக்கிக் கூறினோம்.
வடக்கு மாகாண சட்டசபை இயங்க விடாமல் பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வரும் இலங்கை அரசு, தமிழர் பிரச்சினைக்கு இனி அரசியல் தீர்வே தேவை இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இராணுவம் நிறைய ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறது. தமிழர்களின் கலாசார அடையாளத்தை சிதைப்பதற்கு அங்கு சிங்கள மக்களை குடியேற்றப் பார்க்கிறார்கள். வழிபாட்டுத்தலங்களும் சிதைக்கப்படுகின்றன. சில வெளிநாட்டு சக்திகளும் அங்கே ஊடுருவ முயற்சிக்கின்றன. சமீபத்தில் வடகிழக்கு பகுதியில் சீனாவின் உதவியுடன் சில வசதிகளை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்றது பற்றியும் இந்திய பிரதமரிடம் கூறினோம்.
இலங்கையில் இந்திய அரசு சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கை தமிழர்களின் நலனில் தொடர்ந்து அக்கறையுடன் செயல்படுவோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி எங்களிடம் தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதல்மந்திரி விக்னேஸ்வரன் நரேந்திர மோடிக்கு கொடுத்த கடிதம் ஒன்றை அவரிடம் கொடுத்தோம். அதைப் பெற்றுக் கொண்ட அவர், விக்னேஸ்வரனை தான் சந்திக்க விரும்புவதாகவும், விரைவில் அவருடைய சந்திப்புக்கு இந்தியாவில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.
இந்தியாவின் நிலைப்பாட்டில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவின் உதவியுடன் இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு இரா.சம்பந்தன் கூறினார்.

மீனவர்கள் பிரச்சினை பற்றி பிரதமரிடம் பேசினீர்களா? என்று கேட்டதற்கு; வெள்ளிக்கிழமை வெளியுறவுத்துறை மந்திரியுடனும், அதிகாரிகளுடனும் இந்த பிரச்சினை குறித்து பேசியதாகவும், பிரதமருடன் எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top