நவாஸ் ஷெரிப் பதவி விலகக்கோரி எதிர்கட்சிகள் பாரிய போராட்டம் 

பொலிஸாருடன் நடந்த மோதலில் 8 பேர் பலி

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக எதிர்க் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன. கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியும், மத குரு தார் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியும் இப்போது கூட்டணி அமைத்து, நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன. தேர்தலில் ஊழல் செய்து நவாஸ் ஷெரீப் ஆட்சியைப் பிடித்து விட்டதாக அவை குற்றம் சாட்டுகின்றன.
நவாஸ் ஷெரீப் பதவி விலகக்கோரி, தலைநகர் இஸ்லாமாபாத்தில் இவ்விரு கட்சிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் நவாஸ் ஷெரீப் பதவி விலக திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இம்ரான் கானும், தார் உல் காதிரியும், பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டின் முன்பாக கூடி தர்ணாவில் ஈடுபடும்படி தங்கள் கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரு கட்சி தொண்டர்களும், பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை நோக்கி அணி வகுத்துச் சென்றனர். போராட்டக்காரர்களை விரட்டியடிக்க கலவர தடுப்பு பொலிஸார் கண்ணீர்புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் வீசினர்.
ஏராளமான தொண்டர்கள் அருகில் உள்ள பாராளுமன்ற வளாகத்தினுள் நுழைந்து, தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் விரட்டியடித்தனர்.
இந்த சம்பவத்தின்போது போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பொலிஸாரை போராட்டக்காரர்கள் தடிகளால் தாக்கினர். கற்களை வீசினர். இதன் காரணமாக அந்த பகுதியே போர்க்களமாக மாறியது.
இந்த மோதலில் 3 பேர் உயிர் இழந்தனர். படுகாயம் அடைந்த 450-க்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாமாபாத் பாலிகிளினிக்கிலும், பாகிஸ்தான் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். போராட்டக்காரர்களின் தாக்குதலில் 75 பொலிஸார் காயம் அடைந்தனர். இதில் செய்தி சேகரிக்க சென்றிருந்த பத்திரிகையாளர்களும் சிக்கி படுகாயம் அடைந்தனர். கண்டெய்னர்கள், வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
இந்த கலவரத்தில் தனது கட்சி தொண்டர்கள் 7 பேர் பொலிஸார் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சி தலைவர் தார் உல் காதிரி கூறியுள்ளார். இம்ரான்கான் தனது கட்சி தொண்டர் ஒருவர் பொலிஸ் தாக்குதலில் பலியாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் மத்தியில் அவ்வப்போது இம்ரான்கான் பேசினார். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதற்காக நவாஸ் ஷெரீப் சகோதரர்கள், உள்துறை மந்திரி நிசார் அலிக்கான் ஆகியோர் மீது வழக்கு தொடரப்போவதாக அவர் அறிவித்தார்.
போராட்டம் 18-வது நாளை எட்டிய நிலையில், நவாஸ் ஷெரீப் பதவி விலகும் வரையில் ஓயப்போவதில்லை என்று இம்ரான்கான் கட்சியின் மூத்த தலைவர் பர்வேஸ் கட்டாக் அறிவித்தார். மத குருவும், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சி தலைவருமான தார் உல் காதிரியும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.
போராட்டக்காரர்கள் தாக்கு தலில் ஈடுபடக்கூடும் என கருதி, பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் லாகூர் இல்லத்தை நோக்கி செல்லக்கூடிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. பலத்த பாது காப்பும் போடப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் பதற்றம் நிலவிய சூழலில், நவாஸ் ஷெரீப் லாகூர் சென்று விட்ட தாக தகவல்கள் கூறின. ஆனால் அவர் பிற்பகலில் இஸ்லாமாபாத் திரும்பி விட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
தகவல் துறை மந்திரி பர்வேஸ் ரஷீத், “பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தி, போராட்டக்காரர்கள் குற்றம் செய்து விட்டனர்என கூறினார்.
லாகூரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் சியால் கோட் என்ற இடத்தில் உள்ள இராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் இல்லத்தை நோக்கி இம்ரான்கான் ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல் தொடுத்தனர். அவர்களை பொலிஸார் விரட்டியடித்தனர்.
இஸ்லாமாபாத்துக்கு வெளியே லாகூர், கராச்சி என பிற நகரங்களுக்கும் கலவரம் பரவி வருகிற நிலையில், கலவரத்தை தூண்டி விட்டதற்காக இம்ரான் கானுக்கும், தார் உல் காதிரிக்கும் பிற எதிர்க் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இஸ்லாமாபாத் திரும்பிய பிரதமர் நவாஸ் ஷெரீப் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் மூத்த அமைச்சர்கள் சவுத்ரி நிசார், சாத் ரபீக், அப்துல் காதிர் பலோச், கவாஜா ஆசிப் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தையும், தற்போதைய அரசியல் நிலவரத்தையும் எப்படி கையாள்வது என விவாதித்தனர். நாளை (செவ்வாய்க்கிழமை) பாராளுமன்ற கூட்டு கூட்டத்தை நடத்துவது என முடிவு எடுத்ததாக தகவல்கள் கூறுகின்றன.
கலவரம் தொடர்ந்து நடைபெறுவதால், இது தொடர்பாக விவாதிக்க இராணுவ உயர் அதிகாரிகளின் கூட்டத்தை இராணுவ தலைமை தளபதி ஜெனரல் ரஷீல் ஷெரீப் நேற்று மாலை கூட்டி ஆலோசனை நடத்தினார். அப்போது எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் தற்போது நிலவிவருகிற பதற்ற நிலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் குறித்து அவர் விவாதித்தார்.

இதற்கிடையே போராட்டக் காரர்களுடன் மீண்டும் பேச்சு நடத்த தயார் என செய்தித்துறை அமைச்சர் பர்வேஸ் ரஷீத் அறிவித்துள்ளார்.



ர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top