ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதற்கு எதிராக
பிரிட்டனில்  இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பத்வா



இஸ்லாமிய தேச (.எஸ்.) போராட்ட இயக்கத்தில் பிரிட்டிஷ் முஸ்லிம்கள் சேர்ந்து சிரியா, ஈராக் போன்ற இடங்களில் சண்டையிடச் செல்வதற்கு எதிராக "பத்வா' வழங்கப்பட்டு  தடை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன், மான்செஸ்டர், பர்மிங்ஹாம், லீட்ஸ், லீஸ்டர் ஆகிய இடங்களைச் சேர்ந்த 6 மூத்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் இந்த பத்வாவை வழங்கி தடை உத்தரவையும் வெளியிட்டுள்ளனர் என "சண்டே டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
இவர்கள் சார்பாக கிழக்கு லண்டனில் உள்ள மஸ்ஜித் அல்-தெளஹீத் மசூதியின் முன்னாள் இமாம் ஷேக் உசாமா ஹஸன் இந்த பத்வாவை எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ள விவரம்:
இஸ்லாமிய மதச் சட்டங்களின் கீழும், நீதி முறையின் கீழும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்தவர்கள், அவரவர் நாட்டுக்கு கடமையாற்றக் கட்டுப்பட்டவர்கள். இதை மீறி சிரியாவில் எந்தப் பிரிவுடனாவது சேர்ந்து சண்டையிடுவதற்காகச் செல்வது தடை (ஹராம்) செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) இயக்கமானது, அடக்குமுறையும் கொடுங்கோன்மையும் கொண்டுள்ளது என இந்த பத்வா குறிப்பிடுகிறது.
விஷத்தன்மை மிக்க அவ்வியக்கத்தின் சித்தாந்தத்தைப் பரப்புவதை, குறிப்பாக பிரிட்டனில் பரப்புவதை, முஸ்லிம்கள் எதிர்க்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டனுக்கு எதிரான .எஸ். போராளிகளின் அச்சுறுத்தல் "குறிப்பிடத் தகுந்தது' என்ற நிலையிலிருந்து "தீவிரமானது' என்று அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. பிரிட்டனுக்கு எதிராகத் தாக்குதல் நிகழ அதிக வாய்ப்புள்ளது என்பது இதன் பொருள். இந்நிலையில், பத்வா வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து ஈராக், சிரியா போன்ற இடங்களுக்குச் சென்று, ஜிஹாத் புனிதப்போரில் கலந்துகொண்டவர்கள் மீண்டும் நாடு திரும்புவதை தடை செய்ய உதவும் சட்டம் ஒன்றை இயற்றுவது குறித்து அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் இன்று திங்கள்கிழமை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்களின் பாஸ்போர்ட்டை இரத்து செய்வது உள்ளிட்ட சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவது குறித்து பிரிட்டிஷ் அரசு ஆலோசித்து வருகிறது.
தீவிரவாதக் கொள்கைகளில் ஈடுபாடு காட்டி வரும் பிரிட்டிஷ் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் இப்போது பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அறிவிக்கப்படுகின்றது..
தீவிரவாதத்தில் ஏற்பட்டுள்ள ஆர்வத்தைப் போக்கி, முஸ்லிம் இளைஞர்களை நல்வழிக்குத் திருப்பும் "சேனல்' என்கிற ஆலோசனைத் திட்டத்தை பிரிட்டிஷ் அரசு செயல்படுத்தி வருகிறது.
பிரிட்டனின் தலைமைக் காவல் அதிகாரிகள் சங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 2012-13ஆம் ஆண்டில் 748 இளைஞர்களுக்கு தீவிரவாதத்துக்கு எதிரான ஆலோசனை வழங்கப்பட்டது. 2013-2014ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,281-ஆக அதிகரித்தது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈராக், சிரியாவில் நடைபெற்று வரும் சண்டையில் பிரிட்டிஷ் இளைஞர்கள் ஈடுபட்டுள்ள விவரம் வெளியானதிலிருந்து, "சேனல்' திட்டத்தில் ஆலோசனை பெறுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top