கல்முனை மாநகர சபை உறுப்பினராக
முழக்கம் அப்துல் மஜீத் சத்தியப் பிரமாணம்!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான முழக்கம் அப்துல் மஜீத், கல்முனை மாநகர சபை உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
கல்முனை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் முன்னிலையில் இன்று புதன்கிழமை பிற்பகல் இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
இது தொடர்பான விசேட நிகழ்வு கல்முனை மாநகர சபையில் அமைந்துள்ள முதல்வர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வில் முழக்கம் அப்துல் மஜீத் கலந்து கொண்டு கன்னியுரை நிகழ்த்தினார். இதன்போது முதல்வர் உட்பட ஆளும், எதிர்த் தரப்பு உறுப்பினர்கள் பலரும் புதிய உறுப்பினர் மஜீதை வரவேற்று வாழ்த்துரை நிகழ்த்தினர்.
பிரதி முதல்வராகிறார் முழக்கம் மஜீத்; நீண்ட இழுபறிக்குப் பின்னர் உறுப்பினராக நியமனம்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த துணைத் தலைவரும் முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான முழக்கம் .எல்.அப்துல் மஜீத் விரைவில் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
இதற்கு முன்னோடியாக அவர் கல்முனை மாநகர சபையின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்பின் பேரில் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி இவரது பெயரை கல்முனை மாநகர சபை உறுப்பினராக பரிந்துரை செய்து அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளருக்கு சில தினங்களுக்கு முன்னர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதன் பிரகாரம் தேர்தல்கள் ஆணையாளரினால் முழக்கம் மஜீதின் பெயர் வர்த்தமானிப் பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்.
அதனைத் தொடர்ந்து முழக்கம் மஜீதின் பெயர் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் பதவிக்கு சிபார்சு செய்யப்படவுள்ளது. இதற்கான தீர்மானம் கட்சித் தலைமைத்துவத்தினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு வசதியாக இடைப்பட்ட காலத்திற்கு தற்காலிகமாக பிரதி முதல்வராக நியமனம் செய்யப்பட்டு- பதவியேற்றுக் கொண்ட எம்..எம்.பிர்தௌஸ் விரைவில் அப்பதவியை ராஜினாமா செய்வார் என்று அறிவிக்கப்படுகிறது.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் உறுப்பினர் வெற்றிடத்திற்கே முழக்கம் மஜீத் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த வெற்றிடத்தை நிரப்புவதில் காணப்பட்ட இழுபறி காரணமாகவே முழக்கம் மஜீத் பிரதி முதல்வராக நியமிக்கப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டிருந்தது.
கடந்த கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுள் நற்பிட்டிமுனையை சேர்ந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எம்.எம்.தௌபீக் விருப்பு வாக்குகள் பட்டியலில் மஜீதை விட முன்னணியில் இருப்பதாலேயே உறுப்பினர் நியமனத்தில் இழுபறி நிலை காணப்பட்டிருந்தது.
இதனால் உறுப்பினரை நியமிப்பதற்கான கட்சிக்குரிய உரிமைக் காலம் காலவதியாகும் இறுதித் தினத்திலேயே மு.கா.செயலாளர் நாயகத்தினால் மஜீதின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: கல்முனை மாநகரம்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top