மூன்று சகாப்த அரசியல் கற்று தந்த பாடங்கள்!!

                                                                    -  -Maryam Naleemudeen

தொடர் 1
மேற்கத்தேய வாழ்க்கை என்பது நமக்கும் கடிகார முட்களுக்கும் நடுவிலே நடக்கின்ற ஒரு போராட்டம், நீயா நானா என்று? வென்று விட வேண்டும் என்ற வெறியில் எவ்வளவு தான் வேகமாக ஓடினாலும், கால்கள் ஓய்ந்து இரவு எம்மை ஓய்வெடுக்க அழைக்கும் போது, எம்மைப் பார்த்து வெற்றிக் களிப்பில் சிரிப்பது என்னவோ கடிகார முட்கள் தான். தனது பணியை ஒரு கணமும் தவறாது செய்து விட்டேன் என்ற மமதையில் சிரிக்கிறது அது. செய்ய நினைத்ததில் பாதியைக் கூட முடிக்கவில்லையே என்ற கவலையில் துடிக்கிறது என் மனது. எத்தனையோ நாட்கள் எழுத வேண்டும் என நினைத்து நிறை வேறாமல் போய் , மனப் பொக்கிஷத்தில் உறைந்து கிடக்கும் சில பல யதார்த்தங்கள் இவை.
இருக்கும் வேலைப்பளுவில் காலை நேரம் கை தந்து உதவாது என்று தெரியும். எப்படியாவது இதை எழுதி முடித்து விட வேண்டும் என்ற ஆதங்கம்! ஆதலால், இரவுடன் கை கோர்த்து, சில மணித்தியாலங்களை கடன் வாங்கி, எனது உறக்கத்துடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு இதோ நான் எனது நினைவலைகளுடன் …………..
இவைகள் வெறும் நினைவுகள் மாத்திரமல்ல, மூன்று சகாப்த அரசியலில் கற்றுக் கொண்ட பாடங்கள். தங்களது கொள்கைகளினால் என்னைக் கவர்ந்தவர்கள், அவர்களது செயல்களினால் என்னை வியக்க வைத்தவர்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தை உலக வரை படத்தில் உயர்வு படுத்திக்காட்டி சர்வதேச உலகத்தை எம்மை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர்கள்; கிழக்கிலங்கை மண் பெற்றெடுத்து தனக்கு பெயர் சூடிக்கொண்ட இந்த மண்ணின் மகத்தான மூன்று மைந்தர்கள்.
இன் நினைவுகளை உங்கள் மனப் புத்தகத்தில் பதிய நினைப்பதன் காரணம் எமது பிரதேச கல்வி, சமூக, மனித முன்னேற்றங்களுக்காக அரசியல் யாகம் செய்த அரசியல்வாதிகள் வாழ்ந்த எம் மண்ணின் வரலாறு இன்றைய சமூதாயத்திற்கும் இனி வரும் இளைய தலை முறைக்கும் எத்தி வைக்கப் பட வேண்டும் என்பதே.
முக நூலிலும் சரி வெளி உலகிலும் சரி, எனது தந்தையின் அரசியல் வாழ்க்கை பற்றி, அவர் கல்முனைக்கு ஆற்றிய சேவைகள் பற்றி, ஐக்கிய தேசிய கட்சியில் மாத்திரம் ஐக்கியமாகி இருந்து இறுதியில் Sri Lanka Muslim Congress உடன் அவர் இணைந்து கொண்ட காரணம் பற்றி எல்லாம் பலர் என்னிடம் கேட்பதுண்டு. அக் கேள்விகளுக்கெல்லாம் இவ்வாக்கம் பதிலளிக்கும் என்ற நம்பிக்கையுடனும், மரணிப்பதற்கு சில தினங்களுக்கு முன் மர்ஹூம் M.H.M.Ashroff அவர்கள் எனது தந்தையை சந்திக்க எங்கள் வீட்டுக்கு வருகை தந்ததும், கண்களில் கண்ணீர் மல்க அவர்கள் இருவரும் கட்டி அணைத்துக் கொண்ட அந்த உணர்வு பூர்ணமான காட்சியுடனும்....... இன்னும் பற்பல நினைவுகளுடன்……….......
1989 யின் ஆரம்பக் காலங்களில் ஒரு நாள் .........
நாங்கள் கல்முனை வீட்டில் இருந்தோம். அன்றைய கால கட்டம் அரசியல் களம் புதியதொரு பரிமாணம் பெற்று இருந்த காலம். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாசா வெற்றி பெற்று இருந்த காலம். ஐக்கிய தேசியக் கட்சின் வெற்றிக்கு முஸ்லிம் காங்கிரஸும் ஒரு காரணம் என்று அக்கட்சி பறை சாற்றிக் கொண்டிருக்க, மறு புறம் யார் ஆதரித்தாலும் இல்லா விட்டாலும் பிரேமதாசாவின் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒரு வெற்றி என்று ஐக்கிய தேசிய கட்சி வெற்றிக் களிப்பில் மிதக்க .......இறுதியில் பொதுத் தேர்தல் களம் வந்த போது முஸ்லிம் காங்கிரஸும் ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்த்து மோதிக்கொள்ள தயாராகிக் கொண்டிருந்த ஒரு கால கட்டம். முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஒரு பொதுத் தேர்தலை முகம் கொள்ள தயாரானது. அம்பாறை மாவட்டத்தில் மூன்றா ஒன்றா என்ற கோஷத்தோடு தனது அரசியல் பிரச்சாரத்தை முடக்கி விட்டு இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியினரோ புதிதாக பொறுப்பேற்று இருக்கும் ஜனாதிபதியின் அபிவிருத்திப் பணிகளை நம் பிரதேசத்துக்கு பெற்றுக் கொள்ள எங்களை ஆதரியுங்கள் என்று கேட்டுக் கொண்டு நின்றனர். இப்படியான ஒரு இழுபறியான கால கட்டத்தில், ஒரு நாள்.........
மாலை மூன்று மணி இருக்கும். தொலைபேசி அடித்தது. எடுத்துப் பேசிய எனது தாயாரின் முகம் மாறியது, கண்களில் கண்ணீர் மல்க தொலைபேசியை வைத்து விட்டு அவசர அவசரமாக தயாராகிக் கொண்டு, என்னிடம் விடயத்தை சொல்லாமலே என்னையும் அழைத்துக் கொண்டு எனது பாட்டனார் வீடு நோக்கி பயணமானோம். அங்கு சென்றதும் எப்பொழுதும் போல் நேராக எனது பாட்டனாரின் அறைக்குப் போனோம். அது அவரது பிரத்தியேக ஆபிஸ் அரை. வழமை போல் புத்தகங்களுக்குள் புதைந்து இருக்கும் எனது தொப்பி வாப்பவைக் காணவில்லை. மாறாக பக்கத்தில் ஒரு கட்டிலில் கிடத்தி இருந்தார்கள். எப்பொழுதும் புன்னகை பூத்தவாறு இருக்கும் அவரது அழகிய முகத்தில் அன்று வலியின் வேதனை தெரிந்தது. எங்களைக் கண்டதும் சிரிக்க முயன்றார் ஆனால் முடியவில்லை. சுற்றி நின்ற எனது மாமா, சாச்சிமார் முகங்களிலும் கவலை வேரோடி நின்றது. சில கணங்களில் எனது மச்சான் டாக்டர் ஜமீல் வந்து சேர்ந்தார். அவரது சிகிச்சையை தொடர்ந்து தொப்பி வாப்பாவின் முகத்தில் சிறு ஆறுதல் தெரிந்தது.
திடீர் என வெளியில் ஆராவாரம்..... பொலிஸ், செக்யூரிட்டி, ஆதரவாளர்கள் என பலர் சூழ எனது தந்தையும் வந்து சேர்ந்தார். அந்த இடம், சூழ்நிலை எல்லாமே திடீர் என மாறியது கண்டு என் மனது ஆச்சரியப்பட்டது. எப்படி இது சாத்தியம்? பத்துப் பேர் கூட இல்லாமல் இருந்த அந்த இடத்தில் திடீர் என எப்படி இவ்வளவு ஆட்களும் ஆரவாரமும். ஆட்சி அதிகாரத்தின் சக்தி என்பது இது தானா ? கட்டிலில் இருக்கும் இந்த மனிதரும் ஆட்சின் உச்சத்தில் இருந்து இவர்களுக்காக வாழ்ந்தவர் தானே. இன்று இவரைத் திரும்பிப் பார்க்க யாருமே இல்லையே. இது யார் குற்றம். சமூகத்தின் குற்றமா அல்லது அரசியலின் சூட்சுமமா? எனக்குள் அப்போதே ஒரு பயம் வந்தது. நாளை எனது தந்தைக்கும் இதே நிலை தானா?
எனது தந்தை, தொப்பி வாப்பாவின் பக்கத்தில் அமர்ந்து இருவரும் ஆறுதலாக அளவளாவிக் கொண்டிருந்தார்கள். சில மணிப் பொழுதுகள் கடந்திருக்கும் வெளியில் மீண்டும் ஒரு சல சலப்பு. உள்ளே இருந்த எனது உறவினர்கள் முகத்தில் எல்லாம் ஒரு பரபரப்பு நடக்கக் கூடாத ஒன்று நடந்து விட்டது போல. இந்த தர்ம சங்கடமான சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று எல்லோர் முகத்திலும் ஒரு கேள்விக் குறி. ஜமீல் மச்சான் போய் தொப்பி வாப்பாவிடம் குனிந்து மெதுவாக ஏதோ சொன்னார். பின்பு தொப்பி வாப்பா எனது தந்தையின் கையை இறுகப் பற்றி குனிந்த எனது தந்தையின் காதுக்குள் ஏதோ சொன்னார். இவர்கள் என்ன பேசுகிறார்கள், வெளியில் அப்படி என்ன நடந்து விட்டது என நான் ஆச்சர்யப்பட்டுக் கொண்டு இருக்கையில் எனது தந்தை ஜமீல் மச்சானிடம் "தம்பி Ashroff ஐக் கூப்பிடுங்கள் அவரது மாமாவை அவர் வந்து பார்க்கட்டும் " என்றார். அப்பொழுது தான் கண்டேன் வந்திருப்பது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் Ashroff என்பது.
உள்ளே வந்தார், எல்லாரும் சலாம் சொல்லிக் கொண்டார்கள். தொப்பி வாப்பாவின் மறு பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார். M.S.Kariapper, A.R.Mansoor, M.H.M. Ashroff என்ற இந்த மூன்று அரசியல் சஹாப்தங்களையும் ஒன்றாக அன்று கண்ட காட்சி இன்றும் என மனதில் புடம் போடப்பட்ட ஒரு சாட்சி. அந்த அறையில் இருந்த சலன நிலை மாறி இப்போது சாதாரண நிலை வந்து அமர்ந்து கொண்டது.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவர்களது ஆதரவாளர்கள் வெளியில் அடித்துக் கொள்கிறார்கள், இவர்கள் மேடைகளில் ஒருவரை ஒருவர் வார்த்தைகளினால் இடித்துக் கொள்கிறார்கள், நாளைய வெற்றி யாருக்கு என்று பகை கொண்டு உலவும் இந்த இரு துருவங்களையும் கட்டிப் போட்டு நடுவில் சாய்ந்து இருக்கும் இந்த நாயகன் யார்.
சாதாரண இரத்த பந்தம் கட்டிப் போட்டதா அல்லது ஒட்டிக் கொண்ட உறவு கட்டிப் போட்டதா? எனக்கு அப்படி தெரியவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலால் அரசியல் நாகரீகத்தை எமது மண்ணுக்கு கொண்டு வந்த M.S.Kariapper ஒரு மாமனிதன் என்ற உணர்வே இவர்கள் இருவரையும் இப்படிக் கட்டிப் போட்டு இருக்கிறது. அந்த மாமனிதரைப் பற்றிய எனது நினைவலை……..

 அடுத்த தொடரில் தொடரும் .............................

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top