கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
நினைவு தினம் இன்று

ஒரு காலத்தில் இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த குமரி மாவட்டமும் ஆச்சரியத்தோடு வியந்து பார்த்த வீடு அது.கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுப்பப்பட்ட முதல் கான்கிரீட் வீடும் அதுதான். மொசைக் தரை போட்ட அந்த வீட்டை பார்க்க மாட்டு வண்டி கட்டி வந்தவர்களும் அதிகம். வீட்டு கிரகப்பிரவேசம் அன்று சாப்பிட வந்தவர்களின் எண்ணிக்கையே பல ஆயிரங்களை தாண்டும்.
இப்போதும் பழங்கால திரையரங்குகளை நினைவூட்டும் வகையில் கம்பீரம் குறையாமல், அதே நேரத்தில் பராமரிப்பு இன்றி நிற்கிறது நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மதுர பவனம்.
தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் பிறந்து நாடறிந்த திரைப்பட கலைஞர், சிரிப்பு நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீடுதான் அது. இன்றும் அப்பகுதிவாசிகளின் அடையாள சின்னமாய் மாறி நிற்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீட்டில் இப்போது அவரது வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர். என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாளான இன்று (சனிக்கிழமை) அவர் குறித்த நினைவலைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார் அவரது பேரன் என்.எஸ்.கே.கே.ராஜன்.
இவர்நாகரீக கோமாளிதிரைப்படத்தில் அறிமுகமானவர். இப்போது எழில் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும்பகல்திரைப்படத்தில் உதவி இயக்குநராக உள்ளார்.
‘’தாத்தா ஆரம்ப காலத்தில் டென்னிஸ் கிளப்ல பந்து பொறுக்கி போடுற வேலைகூட பார்த்திருக்காங்க. பிற்காலத்தில் பெரிய நடிகனானதும் நாகர்கோவில் நகராட்சி சார்பில் ஒரு பாராட்டு விழா நடத்துனாங்க. அப்போ தாத்தாவுக்கு தனியா பெரிய நாற்காலி போட்டிருந்தாங்க. ஆனா அவர் அதில் உட்காரல. தரையில் போடப்பட்டிருந்த கடல் மண்ணில் போய் உட்கார்ந்தாரு. எல்லாரும் இது பத்தி கேட்டப்போ இந்த இடம்தான் எப்போதும் நிரந்தரம்ன்னு சொல்லிருக்காரு. அந்த எளிமைதான் அவரோட சிறப்பே. நாடகக் கொட்டகையில் சோடா விற்பவராக இருந்து படிப்படியாக உயர்ந்ததால்தான் அத்தனை பக்குவம்.
கலைவாணருக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஆழ்ந்த நட்பு இருந்தது. கலைவாணர் உச்ச நடிகராக இருந்தபோதே எம்.ஜி.ஆர். பெரிய நடிகராக பிற்காலத்தில் வருவார் என தட்டிக் கொடுத்திருக்கின்றார். கலைவாணர் மறைவுக்கு பின்பு அவரது தாயார் இசக்கியம்மாள் உயிருடன் இருந்தவரை எம்.ஜி.ஆர். பண உதவி செய்தார். கலைவாணர் ஈகை பண்பால் சேர்த்து வைத்த செல்வத்தையெல்லாம் கரைத்துவிட்டு மரண படுக்கையில் இருந்தார். அப்போதும் எம்.ஜி.ஆர் வந்து பார்த்து சென்றார்.
கலைவாணர் இறந்த பிறகு அவரது மகன் கோலப்பனையும்பெரியஇடத்து பெண்என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். கலைவாணரின் 2 மகள்களுக்கும் எம்.ஜி.ஆர்.தான் திருமணம் செய்து வைத்தார். கலைவாணரின் மறைவுக்கு பின்பு இந்த வீடு ஏலத்துக்கு போனபோதும் எம்.ஜி.ஆரே மீட்டுக் கொடுத்தார். கலைவாணர் இருந்த சமயம் குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. அப்போது சித்திரை திருநாள் மகாராஜா மன்னராக இருந்தார். சமஸ்தானத்தில் உள்ள சில பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டபோது நாடகம் நடித்து அந்த பணத்தை சமஸ்தானத்துக்கு கொடுத்தார். மன்னருக்கு கலைவாணரின் நடிப்பு, சமூக சேவை பிடித்துப் போய் என்.எஸ்.கே.வுடன் படம் பிடித்துக் கொண்டார். அது இன்றும் இந்த வீட்டில் பொக்கிஷமாய் உள்ளது. தியாகராஜ பாகவதர்கூட இந்த வீட்டில் வந்து பாடல் பாடியுள்ளார். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள நகராட்சி பூங்காவில் தாத்தா காந்தியடிகளுக்கு நினைவாக கட்டிக் கொடுத்த நினைவுத் தூண், இந்த வீடு ஆகியவை தாத்தா எங்களுடனே இருப்பதைப்போல் உணர்வை தருகின்றதுஎன்றார்.
நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள மணிமேடை சந்திப்பில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரால் திறக்கப்பட்ட சிலை கம்பீரமாக நின்று அவரது புகழை பரப்பிக் கொண்டிருக்கிறது.

நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. அவர் வாழ்வும் 49 ஆண்டுகளில் சுருக்கமாக முடிந்தாலும் வரலாறு அவர் பெயரை வாரி அணைத்துக் கொண்டது என்பது மட்டும் உண்மை.
நன்றி: என்.சுவாமிநாதன்
என்.எஸ்.கிருஷ்ணனின் "மதுர பவனம்" வீடு.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சித்திரை திருநாள் மகாராஜாவுடன் என்.எஸ்.கிருஷ்ணன். உடன் அவரது மனைவி மதுரம்

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top