அமெரிக்க படை ஆப்கானிஸ்தானில் இருந்து 2016ல் தான் வாபஸ் : 

ஒபாமா திட்டவட்டம்

ஆப்கானிஸ்தானில் இருந்து 2016 ஆம் ஆண்டில்தான் அமெரிக்க படை முழுமையாக வாபஸ் பெறப்படும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளின் படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இப்படையில் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானுக்கு திடீர் விஜயம் செய்த ஒபாமா, தனது நாட்டு படை வீரர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்நிலையில் ஒபாமா செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், இந்த ஆண்டில் 9800 வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பர். அமெரிக்கர்களின் எதிர்பார்ப்பையும் தாண்டி நமது படைவீரர்கள் ஆப்கனில் தங்கியுள்ளனர். நாம் தொடங்கிய பணியை முடிக்கும் தருவாயில் உள்ளோம். தற்போது அமெரிக்காவின் 32 ஆயிரம் வீரர்கள் ஆப்கனில் உள்ளனர்.

இந்த ஆண்டில் அவர்கள் 9800 ஆக குறைக்கப்படுவர். இந்த ஆண்டு முழுவதும் அவர்கள் ஆப்கனில் தங்கியிருந்து பயங்கரவாத தடுப்பு பணிகளில் ஈடுபடுவர். 2015 இறுதியில் அல்லது 2016ல் அமெரிக்க படைகள் அனைத்தும் ஆப்கனில் இருந்து முழுமையாக வாபஸ் பெறப்படும்என்றார். ஏற்கனவே அமெரிக்கா கொண்டு வந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் கையெழுத்திட மறுத்துவிட்டார். தற்போது அங்கு நடக்கும் அதிபர் தேர்தலில்  போட்டியில் முன்னணியில் உள்ள அஷ்ரப் கானி மற்றும் அப்துல்லா ஆகியோர் தாங்கள் அதிபர்களாக வெற்றி பெற்றால் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள தயார் என்று அறிவித்திருந்தனர். ஜூன் 14ல் இரண்டாம் கட்ட தேர்தலுக்கு பிறகு அங்கு யார் அதிபர் என்பது தெரிந்துவிடும். இதுகுறித்து ஒபாமா மேலும் கூறுகையில், ஆப்கனுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு படைகள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top