பாகிஸ்தானில் குடும்பத்தினர் கண்ணெதிரிலேயே 

அமெரிக்க டாக்டர் சுட்டு கொலை

பாகிஸ்தானில் அமெரிக்க டாக்டர் ஒருவரை, அவரது குடும்பத்தினர் கண்ணெதிரிலேயே மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர் டாக்டர் மெஹ்தி அலி காமர் (51). இருதய சிகிச்சை நிபுணரான இவர், அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரில் வசித்தார். குடும்ப உறவினர்களின் விசேஷ தினங்களுக்கும், தந்தையின் நினைவு தினத்துக்கும் இவர் பாகிஸ்தான் வந்து செல்வது வழக்கம்.
பாகிஸ்தானில் நீண்ட காலமாகவே சிறுபான்மையினரான அகமதி இனத்தவரை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. டாக்டர் மெஹ்தி அலி காமர், அகமதி இனத்தை சேர்ந்தவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் வந்தார் மெஹ்தி. தந்தையின்  நினைவிடத்தில் நேற்று அஞ்சலி செலுத்தினார். தனது மனைவி, மகன் மற்றும் உறவினர்களுடன் அஞ்சலி நிகழ்ச்சியை முடித்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரது குடும்பத்தினர் கண் எதிரிலேயே டாக்டரை  துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பினர். இதில் உடலில் 11 தோட்டாக்கள் பாய்ந்து துளைத்ததில் சம்பவ இடத்திலேயே மெஹ்தி அலி காமர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் ஹதி அலி சவுத்ரி கூறுகையில், அகமதி இனத்தவர் மீது தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களை தடுக்க பாகிஸ்தான் அரசு தவறிவிட்டது என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top