பாகிஸ்தான் உளவாளி என்ற சந்தேகத்தில்

கைது செய்யப்பட்டுள்ள  சாகீர் ஹுஸைனின்  காவல் நீடிப்பு

பாகிஸ்தான் உளவாளி என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள  சாகீர் ஹுஸைனின் நீதிமன்ற காவல் எதிர்வரும்  ஜூன் 10-ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சிவசுப்பிரமணியன் இவரின் காவலை நீடித்து உத்தரவிட்டுள்ளார். எழும்பூர்  நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சாகீர் ஹுஸைனிடம் 20-க்கு மேற்பட்ட காகிதங்களில் கையெழுத்து பெற்றபட்டுள்ளது. தன்னைப்பற்றிய விவரங்களை தன் சொந்த கையெழுத்தில் ஆங்கிலத்தில் 14 பக்கத்தில் சாகீர் ஹுஸைன்  எழுதித் தந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த 29-ஆம் திகதி  இலங்கை கண்டியைச் சேர்ந்த .எஸ்.. உளவாளி  எனச் சந்தேகத்தில் சாகீர் ஹுஸைனை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர்.அவரிடமிருந்து கள்ளநோட்டுகள், சேட்டிலைட் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அமெரிக்க துணைத் தூதரகம், இஸ்ரேல் துணைத் தூதரகம், கொச்சி, விசாகப்பட்டினம் கடற்படைத் தளங்கள் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த புகைப்படங்களை சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அமீர் ஜூபைர் சித்திக், பாஸ் என்கிற ஷா ஆகியோரிடம் வழங்கியிருப்பதும் தெரியவந்ததாகவும் பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்தனர்.

இந்த அடிப்படையில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சித்திக், ஷா மீது வழக்குப் பொலிஸாரால் பதியப்பட்டது.
 இதற்கிடையே சாகீர் ஹுஸைன் தனது வாக்குமூலத்தில், மேலும் 2 பேருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்ததாகவும், அவர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவி இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவித்து இருந்தார் எனக் கூறப்படுகின்றது.
சாகீர் ஹுஸைன் கொடுத்த தகவலின் அடிப்படையில், கள்ளநோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் வேலை செய்ததாக மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் சிவபாலன், மண்ணடியைச் சேர்ந்த முகம்மது சலீம் ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.2.50 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த விசாரணைக்குப் பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சாகீர் ஹுஸைனை மே.27 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் சாகீர் ஹுஸைனுடன் தொடர்புடையவர்கள் குறித்து  பொலிஸார் தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில் மலேசியாவில் இவரி கூட்டாளி முகமது  ஹுஸைனி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த கியூ பிரிவு பொலிஸார் முடிவு செய்துள்ளனர். முகமது ஹுஸைனியின் பாஸ்போர்ட் ஆவணங்களை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.

தற்பொழுது சாகீர் ஹுஸைனின் நீதிமன்ற காவல் எதிர்வரும்  ஜூன் 10-ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top