அவசரச் சட்டத்தின் மூலம் பிரதமரின் முதன்மைச் செயலாளர் நியமனம் 

காங்கிரஸ் கடும் கண்டனம்

இந்தியப் பிரதமரின் முதன்மை செயலாளரை நியமிப்பதற்காக மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்திருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் ஊடக பிரிவுத் தலைவர் அஜய் மக்கான், ஊழலுக்கு எதிராக அவரச்சட்டம் கொண்டு வந்த போது அதனை எதிர்த்தவர்கள், தற்போது ஒரு அதிகாரி நியமனத்திற்காக அவசரச் சட்டம் கொண்டு வந்திருப்பதாக விமர்சித்துள்ளார். அதுவும் மோடியின் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே அவசரச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதை சுட்டி காட்டிய அவர் வழக்கமான நடைமுறைகளை சீர்குலைப்பதில் மோடி நம்பிக்கை வைத்துள்ளது தெளிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி கூட ஏற்காத நிலையில் அவசரச்சட்டம் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன என்பது புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற நிர்பேந்திர மிஸ்ரா, பிரதமரின் முதன்மை செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டார். 1997ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின் படி, அந்த அமைப்பின் தலைவராக இருந்து ஓய்வு பெறுபவர் மத்திய அரசின் எந்த பொறுப்பையும் ஏற்க முடியாது. ஓய்வுக்கு பின்னர் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே இவ்விதிமுறை பொருந்தும் வகையில் செவ்வாய்கிழமை நடைபெற்ற மத்தியஅமைச்சரவை கூட்டத்தில் அவசரச்சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த அவசரச் சட்டங்களை எதிர்த்து வந்த பா.., தற்போது அதிகாரி ஒருவரின் நியமனத்திற்காக இச்சட்டத்தை கொண்டு வர முடிவு செய்திருப்பது கண்டனத்திற்குள்ளாகியுள்ளது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top