கொழும்பில் இடம்பெற்ற கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின்

பழைய மாணவர் சங்கக் கூட்டம்:

கல்லூரியின் ஸ்தாபகரை நினைவுபடுத்தி பேசாதது குறித்து

அன்னாரின் மகள் ஸொஹறா மன்சூர் கவலை


இன்று 25 ஆம் திகதி  கொழும்பில் இடம்பெற்ற கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டத்தில் உரைநிகழ்த்திய எவரும் இக்கல்லூரியின் ஸ்தாபகரான கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் பற்றி ஒரு வார்த்தைதானும் நினைவுபடுத்தி பேசாதது குறித்து அன்னாரின் மகள் ஸொஹறா மன்சூர் ஊடகங்களுக்கு கவலை வெளியிட்டுள்ளார்.
எனது தகப்பன் தனது சொந்தக்கணியையே கொடுத்து  ஸ்தாபித்த கல்லூரியிலிருந்து கல்வி கற்று இன்று நல்லதொரு நிலைக்கு வந்திருப்பவர்கள் அன்னாரைப் பற்றி அறியாமல் இருப்பதும் அன்னாரால் உருவாக்கப்பட்ட கல்லூரி சம்மந்தப்பட்ட கூட்டத்தில் அவரைப்பற்றி ஒன்றுமே பேசாமல் விட்டதும் அன்னாரின் மகளான எனக்கு மிகுந்த வேதனையையும் கண்ணீரையும் வரவழைத்தது என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பு-07, நெலும்பொக்குன மாவத்தையிலுள்ள நூதனசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தன்னுடைய தப்பனாரினால் 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சாய்ந்தமருது ஆங்கில கனிட்ட பாடசாலை என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்ட இக்கல்லூரியின் பழைய மாணவர்கள் கொழும்பில் ஒன்று கூடும் இக்கூட்டத்திற்கு  அன்னாரின் மூன்றாவது மகளான ஸொஹறா மன்சூர் தனது கணவரான முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் .ஆர்.மன்சூருடன் கலந்து கொண்டிருந்தார்.
இக்கல்லூரிக்கென தன்னுடைய சொந்தக் காணியில் 5 1/2 ஏக்கர் காணியை வழங்கிய கல்லூரியின் ஸ்தாபகரான கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பரின்  25 ஆவது நினைவு தினம் எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையாகும்
இந்நிலையில் தனது தந்தையின் நினைவு தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பதாக இடம்பெறும் இக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கூட்டத்திற்கு  ஆசையுடன் சென்றிருந்தவருக்கே இந்த கவலையான விடயங்களை அறியக்கூடியதாக இருந்ததாகவும்  முதலியார் காரியப்பரின் மகள் ஸொஹறா மன்சூர் தெரிவித்துள்ளார்.
கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் மகள் ஸொஹறா மன்சூர் மேலும் தெரிவிக்கையில்,
கல்முனை ஸாஹிறாக் கல்லூரியிலிருந்து உருவாகியுள்ள டாக்டர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் என்போரின் எண்ணிக்கையை இக்கூட்டத்தில் பிரஸ்தாபித்து மகிழ்வுறும்  இவர்கள் இப்படியாக எமது பிள்ளைகள் முன்னேறுவதற்கு இக்கல்லூரியை ஸ்தாபித்தது யார் என்பதைக் கூறமுடியாதவர்களாகி அன்னாரின் மகளான என்னை துக்கத்தில் ஆக்கி விட்டார்கள். எமது முஸ்லிம் சமுதாயம் நன்றி மறந்த சமூதாயமாக மாறிவிட்டதா? என்றும் முதலியார் காரியப்பரின் மகள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இக்கூட்டத்தில் பேசிய அதிபர் ஒருவர் இக்கல்லூரியில் 32 வருடங்கள் சேவையாற்றியுள்ளேன். அதனால், இகல்லூரியைப் பற்றி உள்ளும் புறமும் எனக்கு நன்கு தெரியும் என்று பேசினார். ஆனால், அந்த அதிபருக்கு கல்லூரியின் ஸ்தாபகரை தெரியாமல் போய்விட்டது. அன்னாரைப்பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல் அமர்ந்து விட்டார் என்றும் ஸொஹறா மன்சூர்தெரிவித்துள்ளார்.

மக்கள் விருப்பம்  மக்கள் விருப்பம்

மக்கள் விருப்பம்  மக்கள் விருப்பம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top