கல்முனை தமிழ் மக்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு
முஸ்லிம் காங்கிரஸ் உத்தரவாதம்
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு

முஸ்லிம் காங்கிரஸ்  உடனான இச்சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்ததாகவும் கல்முனை வாழ் தமிழ் மக்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் உத்தரவாதமளித்திருப்பதாகவும் எதிர்காலங்களில் தொடர்ந்தும்  இது போன்று இரு தரப்பினரும் சந்தித்து பேசுவது என இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் இச்சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா  கல்முனையில் இடம்பெற்ற  தமிழ் தேசியக் கூட்டமைப்பு - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட தமிழ் மக்களின் நலன் குறித்து ஆராய்வதற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பு - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று,  30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மாநகர சபையில் அமைந்துள்ள மேயர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ஆகியோர் முன்னிலையில் கல்முனை மாநகர சபை மேயரும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயமுமான சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான .எம்.ஜெமீல் ஆகியோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்..சுமந்திரன், பொன்.செல்வராஜா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், ரெலோ செயலாளர் நாயகம் ஹென்ரி மகேந்திரன் மற்றும் கல்முனை மாநகர சபையின் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்முனை மாநகர சபை, தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியிலும் தமிழ் மக்களின் நலன்களிலும் கூடிய அக்கறை செலுத்தி அவர்களினால் முன்வைக்கப்படும் குறைபாடுகளையும் தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கு முன்வரல் வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளினால் வலியுறுத்தப்பட்டது.உடனடியாக தீர்வு வழங்க வேண்டிய சில முக்கிய பிரச்சினைகள் குறித்தும் அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின் பிரகாரம் தீர்மானிக்கப்பட்ட சில விடயங்களை எதிர்காலங்களில் அமுல்நடத்துவதாக மாநகர  சபை மேயர் நிஸாம் காரியப்பர் இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் உறுதியளித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top