"சாய்ந்தமருது மக்கள் அன்புடன் வரவேற்கின்றனர்;கல்முனை மாநகர சபை"





நீண்ட கால சர்ச்சைக்கு தீர்வு; வரவேற்பு கோபுரத்தை புனரமைத்து, வாசகம் 

பொறிக்க விரைவில் நடவடிக்கை!

(அஸ்லம் எஸ்.மௌலானா,

கல்முனை மாநகர சபைகுட்பட்ட சாய்ந்தமருது நகரின் தென் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு கோபுரத்தை புனரமைப்பு செய்து- அதில் உரிய வாசகத்தை பொறிப்பதற்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என்று கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் சபையில் அறிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றபோது மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான ..பஷீர் இவ்விடயத்தை பிரஸ்தாபித்து உரையாற்றினார்.
"கல்முனை மாநகரின் நுழைவாயிலான சாய்ந்தமருது நகரின் தெற்குப் பகுதியில்  வரவேற்புக் கோபுரம் அமைக்கப்பட்டு பல வருடங்களாகியும் அதில் இன்னும் வாசகம் எதுவும் பொறிக்கப்படவில்லை. அது மாத்திரமல்லாமல் அந்தக் கோபுரம் தற்போது பாழடைந்த வீட்டைப்போல் மிகவும் அசிங்கமாக காட்சியளிக்கிறது.
இதைப் பார்க்கின்ற போது நாம் ஒரு மாநகருக்குள் நுழைகின்றோமா அல்லது வேறு எங்காவது போகின்றோமா என்று மக்கள் கேட்கின்ற அளவுக்கு அந்த கோபுரம் மிகவும் அவல நிலையில் காணப்படுகிறது" என்று உறுப்பினர் பஷீர் சுட்டிக்காட்டினார்.
ஆகையினால் இனியும் காலம் தாழ்த்தாமல் இதன் புனரமைப்புப் பணியையும் வாசகம் பொறிக்கும் வேலையையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் நிசாம் காரியப்பர்; இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாநகர சபை தயாராக இருக்கிறது. அதில் பொறிக்க வேண்டிய வாசகம் என்ன என்பதை சாய்ந்தமருது உறுப்பினர்கள் தீர்க்கமாக முடிவெடுக்க வேண்டும். "சாய்ந்தமருது மக்கள் அன்புடன் வரவேற்கின்றனர்; கல்முனை மாநகர சபை" என்று எழுதுவது பொருத்தம் என சுட்டிக்காட்டப்படுகிறது. அதனை உறுப்பினர்கள் பரிசீலித்து தீர்மானியுங்கள். அதனைத் தொடர்ந்து மாநகர சபையினால் அவ்வாசகத்தை எழுதும் பணியை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம்" என்று முதல்வர் குறிப்பிட்டார்.
முதல்வரின் இந்த அறிவிப்பை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.

இத்தீர்மானத்தின் மூலம் சாய்ந்தமருது வரவேற்பு கோபுரம் தொடர்பில் நிலவி வருகின்ற நீண்ட கால இழுபறிக்கு தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது. இக்கோபுரம் 2002ஆம் ஆண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட போதிலும் அதில் எழுதப்பட வேண்டிய வாசகம் தொடர்பில் கருத்து முரண்பாடு நிலவி வருவதாலேயே அதில் இன்னும் வாசகம் எதுவும் பொறிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top